Published:Updated:

விஜயகாந்த் சந்திப்பு... எமோஷனான தொண்டர்கள் ; `இதுதான் திராவிட மாடலா?’ - திமுக அரசை சாடிய பிரேமலதா

தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்கள், தொண்டர்களை கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்.

விஜயகாந்த் சந்திப்பு... எமோஷனான தொண்டர்கள் ; `இதுதான் திராவிட மாடலா?’ - திமுக அரசை சாடிய பிரேமலதா

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்கள், தொண்டர்களை கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்.

Published:Updated:
தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்

புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். விஜயகாந்தை பார்பதற்காக காலை 9 மணியிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் தலைமையகத்திற்கு வரத் தொடங்கினர். அதில் சிலர் குழந்தைகளுடன் குடும்பமாக விஜயகாந்தை காண வந்திருந்தனர். மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதை சார்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி தலைமையகத்துக்கு வந்தனர்.

விஜயகாந்த் காலை 11 மணிக்கு தொண்டர்களை சந்திப்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில், 11.20- மணிக்கு நாற்காலியில் அமர்ந்தவாறு வெளியே வந்தார். மேலும் தன் ரசிகர்கள், தொண்டர்களுக்கு கைஅசைத்தும் கைகூப்பியும் உற்சாகம் அளித்தார். அவரைப் பார்த்த உடனேயே அங்கிருந்த ரசிகர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுததை காண முடிந்தது. மேலும் சிலர், "என் வாழ்நாள் பயனை அடைந்து விட்டேன், என் தெய்வத்தை என் கண்களால் பார்த்து விட்டேன்" என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

விஜயகாந்த் வெளியே வந்த உடனேயே அவரை காண்பதற்கு ரசிகர்கள் பலர் முண்டி அடித்துக்கொண்டு முன்னே சென்றனர். இதனால் ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் ஒருவர் கொடி கம்பத்தில் ஏறி விஜயகாந்தை பார்த்தார். இதில் கலந்துகொண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்குமே கட்சி சார்பாக ரூபாய் 100 புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம், தேமுதிக தலைமை பொறுப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது, "தேமுதிக கட்சிக்கு தலைவர் எப்போதுமே கேப்டன் தான். கேப்டனின் உடல்நிலை நன்றாக இருக்கின்றது. பேசுவதற்கும் நடப்பதற்கும் மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அவர் எப்போதும் தொண்டர்களை சந்தித்துக் கொண்டும் அவர்களை பற்றி பேசிக் கொண்டும் தான் இருப்பார். இந்த புத்தாண்டு சந்திப்பு கூட அவர் கேட்டது தான்" என்று கூறினார்.

 பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் ஆணையத்தின் ரிமோட் வாக்களிப்பு முறை குறித்து கேள்வி கேட்டப்போது, ``தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை தொடர்ந்து ஆலோசனைகூட்டத்தில், தேமுதிக சார்பில் யார் கலந்துகொள்வார்கள் என்பதை தலைமை கழகம் அறிவிக்கும், இந்த முயற்சி பயனளிப்பதாக இருந்தால் அதனை தேமுதிக ஆதரிக்கும்” என்றார்.

பின்னர் திமுகவின் ஆட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு மாதிரி பேசியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி நடக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

 பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

வெற்றி பெறுவதற்கு முன் மது, நீட் போன்றவை ஒழிப்பு, அனைத்து மகளிர்க்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை என்று பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவற்றை செய்யவில்லை. சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்காததையும் தொடக்கத்திலேயே கரும்பு கொள்முதல் செய்யாததையும் வன்மையாக கண்டிக்கிறோம்" என்று குற்றம்சாட்டினார்.

மேலும் வரப்போகிற தேர்தலுக்காக தங்களிடம் பல செயல் திட்டங்கள் இருப்பதாகவும், அதனை தகுந்த நேரத்தில் அறிவிப்போம் என்றும் கூறி செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்தார் பிரேமலதா விஜயகாந்த்.