Published:Updated:

`தொண்டர்கள்தான் என் முதல் கடவுள்!' - விஜயகாந்த் உருக்கம்

தே.மு.தி.க சார்பில் சென்னை கொரட்டூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 விஜயகாந்த்
விஜயகாந்த்

தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா விஜயகாந்த் தலைமையில் சென்னை கொரட்டூரில் ஜனவரி 12-ம் தேதி கொண்டாடப்படும் எனக் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பையடுத்து தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் விஜயகாந்த்தை பிரசார மேடைகள், பொதுக்கூட்டங்களில் அதிகம் காணமுடியவில்லை. விஜயகாந்தின் குரலாக பிரமேலதா பேசி வருகிறார். கடந்தாண்டு அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சையெடுத்து திரும்பிய பின்னர், தே.மு.தி.க பொதுக்கூட்டங்களில் அவரைக் காணமுடிகிறது. இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியானது. சென்னையைப் போலவே அந்தந்த மாவட்டங்களில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் சிறப்பான முறையில் பொங்கல் விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

தே.மு.தி.க பொங்கல் விழா
தே.மு.தி.க பொங்கல் விழா

சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பொங்கல் விழாவுக்காக தே.மு.தி.க சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விஜயகாந்த்தைக் காண்பதற்காக காலையில் இருந்தே பொதுமக்களும் தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் 10 மணியளவில் அங்கு வருகை புரிந்தனர். விஜயகாந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது,.

இளைஞர் தின வாழ்த்துகளுடன் தன் பேச்சை தொடங்கினார் பிரேமலதா, “பொங்கல் வந்தால்தான் திருவிழா என்றில்லை. கேப்டன் வந்தாலே திருவிழாதான் எனப் பிரேமலதா பேச்சை தொடங்க தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். அனைத்து மதமும் ஒன்றுதான் என்பது கேப்டனின் கொள்கை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுகின்றன. இந்தியா என்பது இந்துக்களின் நாடுதான் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் நம்முடன் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வந்த பூமி இது. 2020-ல் நம்முடைய ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதற்கு அடித்தளமாக உள்ளாட்சி தேர்தலில் நாம் நல்ல வெற்றிபெற்றுள்ளோம். 2021-ல் மிகப்பெரிய வெற்றியை அடைவோம். தே.மு.தி.க மீண்டும் விஸ்வரூப வெற்றி பெறும்” எனச் சூளுரைத்தார்.

தே.மு.தி.க பொங்கல் விழா
தே.மு.தி.க பொங்கல் விழா

இதையடுத்து பேசிய விஜயகாந்த், “என் மக்களுக்காக சேவையாற்ற மீண்டும் வருவேன். எனக்கு ஐந்து தெய்வங்கள் உள்ளது. எனக்காக பிரார்த்தனை மேற்கொள்ளும் தொண்டர்கள்தான் என் முதல் கடவுள். விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வருவேன்” என உருக்கமாகத் தெரிவித்தார்