தமிழ்நாடு அரசு, நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஆதார் அட்டையைப் போலவே, 10 அல்லது 12 இலக்க எண்களைக் கொண்ட தனித்துவ அடையாள எண்ணை 'மக்கள் ஐடி' என்ற பெயரில் வழங்கப்போவதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசின் மின் ஆளுமை முகமை டெண்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கு அரசியல் கட்சிகள் பலவும், `ஆதார் இருக்கும்போது மக்கள் ஐடி எதற்கு’ என கேள்வி எழுப்பிவருகின்றன. இந்த நிலையில், ``அனைத்து சலுகைகளும் பெற ஆதார் எண் இருக்கும்போது மக்கள் ஐடி திட்டம் தேவையா..." என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் விஜயகாந்த், ``தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் ஐடி என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 12 இலக்க எண் வழங்கப்படவிருப்பதும், அனைத்துச் சேவைகளையும் இதன் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், மக்கள் ஐடி மாநிலத்திலுள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படவிருக்கிறது என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பாக தமிழக அரசுத் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், ஏற்கெனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்திவரும் நிலையில், மக்கள் ஐடி திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா...

எனவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார்.