Published:Updated:

குமரி: `ஜனவரி முதல் தொண்டர்களைச் சந்திக்க வருவார் விஜயகாந்த்!’ - தே.மு.தி.க சுதீஷ்

தே.மு.தி.க துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்
தே.மு.தி.க துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்

``நடிகர் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் குறித்துப் பேசலாம்” - சுதீஷ்

தே.மு.தி.க துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தின்தான் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது தே.மு.தி.க ஆதரவு தெரிவித்தது. இந்தியா முழுவதும் நல்ல திறமையான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அந்த நிலைப்பாட்டை எடுத்தோம். அதற்கு முன்னர் இந்தியா முழுவதும் ஒரே கல்விக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

நீட் தேர்வைச் சாதகமாக வைத்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அரசியல் செய்கின்றன. நீட் தேர்வில் மாணவர்கள் மரணம் என்பது தமிழகத்தில் மட்டுமன்றி, அகில இந்திய அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்ம். ஆனால், நீட் தேர்வை மாணவர்கள் அச்சப்படாமல் தைரியமாகச் சந்திக்க வேண்டும். அதனால்தான் `அகில இந்திய அளவில் ஒரே கல்விக் கொள்கையை அறிவிக்க வேண்டும்’ என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்" என்றார்.

சுதீஷ்
சுதீஷ்

தொடர்ந்து, ``நீட் தேர்வு தொடர்பாக மாணவி இறந்தபோது அரசியல் கட்சிகள் முதலில் சென்று பார்த்தார்கள். பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. மக்களை திசைதிருப்பி அரசியல் செய்ய நீட் தேர்வை தி.மு.க கையில் எடுத்திருக்கிறது. ஆனால் இது போன்ற உதவிகளை அரசு செய்யக் கூடாது. இது அவர்களை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும். கொரோனா காலத்தில் தேர்வுகள் கட்டாயமா என்பது பற்றி எடுத்துக்காட்டு கூறுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், நடிகர் சூர்யா நீதிமன்றம் குறித்துக் கருத்து சொல்லாமல் வேறு ஏதாவது கூறியிருக்கலாம்.

தே.மு.தி.க இப்போதும் அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தை அறிந்து பின்னர் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் கட்சிப் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் முதல் தொண்டர்களைச் சந்திக்க வருவார். தமிழகத்தில் பலமான கட்சியாக தே.மு.தி.க இருக்கிறது. எனவே அ.தி.மு.க கூட்டணியில் அதிகப்படியான சீட்களைக் கேட்போம். நடிகர் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் குறித்துப் பேசலாம். சட்டசபைத் தேர்தல் வரட்டும். அதற்குப் பிறகு கூட்டணியில் எத்தனை சீட்டுகள் எனப் பேசலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு