Published:Updated:

சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனம் - புதிதாக 4 வாக்குறுதிகளைச் சேர்த்த திமுக

திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு
திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு

சென்னை சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020, காட்டுப்பள்ளி துறைமுகம் போன்ற சட்ட திட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுத்துவந்த தி.மு.க., அவற்றுக்குத் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்ற விமர்சனம் எழுந்தது.

சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க-வின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். நீட் தேர்வு ரத்து, பால் விலைக் குறைப்பு, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி... எனப் பெரிய பட்டியல் அதில் இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் இன்று மேலும் புதிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Photo: Vikatan / Vijay.T

புதிய வாக்குறுதிகள்

1. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எண்ணூர் அருகே அமைய திட்டமிடப்பட்டுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுமதி மறுக்கப்படும்.

2. சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது.

3. EIA எனப்படும் மத்திய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு 2020 நிராகரிக்கப்படும்.

திருத்தம் செய்யப்பட்ட வாக்குறுதி:

4. முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். குடியுரிமைச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

முன்னதாக மேற்கண்ட வாக்குறுதிகள், தி.மு.க நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. சென்னை சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020, காட்டுப்பள்ளி துறைமுகம் போன்ற சட்ட திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துவந்த தி.மு.க., அவற்றுக்குத் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்தநிலையில்தான், இந்தப் புதிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வாக்குறுதிக் குறிப்பில் எழுத்துப் பிழை இருந்ததாகவும், அதைத் திருத்தி வெளியிட்டிருப்பதாகவும் தி.மு.க தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு