Published:Updated:

`ஏமாற்று வாக்குறுதிக்காக இடஒதுக்கீட்டுக் கொள்கையை பலிகொடுத்துவிடக் கூடாது!' - கொதிக்கும் ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்தது. நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. சில மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.

அனைத்துக்கட்சி கூட்டம்
அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த நிலையில் சட்டமன்றத்தில் கடந்த 2-ம் தேதி பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இன்று மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது, துணை முதல்வர் இதற்குத் தலைமை தாங்கினார். தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், ``தமிழகத்தைப் பொறுத்தவரையில் 69 சதவிகித இடஒதுக்கீடு கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டபோதே சிலர் பொருளாதார என்ற சொற்றொடரும் இடம் பெற வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதை அன்றைய பிரதமர் நேருவும் சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகரீதியாக என்ற வார்த்தை பரந்துபட்ட பல பொருள்களை உள்ளடக்கிய விரிவான சொல்லாகும் என நேரு அன்று விளக்கமளித்தார். ஆகவே, சுதந்திர இந்தியாவில் 15 பிரதமர்களில் 14 பிரதமர்கள் சமூக- கல்வி நிலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினர்க்கும் அரசியல் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முன்னேறிய சமுதாயத்துக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தினால் தமிழகத்துக்கு 25 சதவிகிதம் இடங்களை அதிகரிக்கிறோம் என்பதை நம்பி திராவிட இயக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிட வேண்டாம். எந்த விதமான ஏமாற்று வாக்குறுதிக்கும் நம் முன்னோர் நமக்கு வழங்கியிருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பலி கொடுத்துவிடக் கூடாது.

பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை. 69% இட ஒதுக்கீடு முறையே தமிழகத்தில் தொடர வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் அமலில் உள்ள 69 % இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை வழங்குவதை ஆதரிப்பதாகக் கூறினார்.

தமிழிசை
தமிழிசை

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை செயல்படுத்தக் கூடாது. முன்னேறிய வகுப்பினர் எனப் பெயர் வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதுக்கு இடஒதுக்கீடு என சீமான் கடுமையாகப் பேசினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்துள்ளார். இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆதரவாக பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் என 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேநேரம், 16 கட்சிகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. கூட்டத்தின் முடிவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் ஜெயலலிதா கொள்கையின்படி நல்ல முடிவெடுப்போம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு