அலசல்
அரசியல்
Published:Updated:

ராஜ் பவனுக்கு வெளியே கால்வைக்க முடியாது!- ஆளுநருக்கு எதிராகக் கச்சைகட்டிய தி.மு.க கூட்டணிக் கட்சிகள்

சைதாப்பேட்டை கண்டனப் பொதுக்கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
சைதாப்பேட்டை கண்டனப் பொதுக்கூட்டம்

ஆர்.எஸ்.எஸ் பயிற்சிப் பட்டறையில் வளர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஆர்.என்.ரவி ஓர் எடுத்துக்காட்டு.

ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கின்றன தி.மு.க கூட்டணிக் கட்சிகள்... கூட்டத்தில், ‘ஆர்.எஸ்.எஸ் ரவி’, ‘ரம்மி ரவி’, ‘விரட்டியடிப்போம்’ என்று பேச்சுகளில் அனல் பறந்தது. தலைவர்களின் கண்டன உரையின் முக்கியமான பகுதிகள் இங்கே...

‘ஜெயலலிதா பாணிதான் சரி!’ - தி.வேல்முருகன்

முதலில் மைக் பிடித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “ஆளுநர் விவகாரத்தில் தி.மு.க அரசும், தமிழக முதல்வரும் ஜனநாயக முறையில் எதிர்ப்புகளைப் பதிவுசெய்கிறார்கள். இந்த சங்கி கும்பல்களுக்குக் குறைந்தபட்ச ஜனநாயகமும், நாகரிகமும் காட்டப்படக் கூடாது. இவர்களுக்கு ஜெயலலிதா பாணி அரசியல்தான் சரி. ஆன்லைன் சூதாட்ட நிறுவன முதலாளிகளுக்குத் தேநீர் விருந்து அளித்து, அவர்களோடு கைகோத்த ஆளுநரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சூதாட்டம் நடத்தும் அயோக்கியர்களுக்கு ஆளுநர் மாளிகையில் என்ன வேலை... இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஆட்டம் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, இனி இந்த இயக்கம் ஜனநாயகரீதியாக மட்டும் போராடாது” என எச்சரித்தவர், தமிழ்நாடு அரசு, முதல்வரின் செயல்பாடுகளையும் விமர்சித்ததால் பலரது முகம் சுருங்கியது.

‘ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும்!’ - வைகோ

அடுத்துப் பேசிய வைகோவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடிவமாக மட்டுமல்ல, அதன் கொள்கைகளைப் பின்பற்றுபவராக மட்டுமல்ல, அதைத் துணிச்சலாகச் சொல்லக்கூடிய அகம்பாவமும், ஆணவமும், மண்டைக் கொழுப்பும் கொண்டவராக இருக்கிறார் ஆளுநர். வெள்ளைக்கார ஆளுநர்களுக்குக்கூட இவ்வளவு அகம்பாவம் இருந்ததில்லை. ‘ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு போராடினார்கள்’ எனப் பேசுகிறார் ஆளுநர். என்ன திமிரோடு இந்த வார்த்தைகளைச் சொல்லியிருப்பாய்... நீ மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார் வைகோ.

‘சூடு சொரணை இருக்கிறதா?’ - இரா.முத்தரசன்

“பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநரை விமர்சித்தபோதே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை மாற்றிப் படித்து முடித்ததும் அதை முதல்வர் நீக்க வைத்தாரே... அப்போது வெளிநடப்பு செய்தவர் அதே வேகத்தில் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இத்தனையும் நடந்த பின்பும் அதே நாற்காலியில்தான் இருப்பேன் என்றால், அவர் சூடு சொரணையுள்ள மனுஷனா... நீங்கள் குடைச்சல் கொடுத்தால், எங்களுக்கும் குடைச்சல் கொடுக்கத் தெரியும். பிறகு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடவேண்டியதுதான்” என்று வெளுத்து வாங்கினார் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

சைதாப்பேட்டை கண்டனப் பொதுக்கூட்டம்
சைதாப்பேட்டை கண்டனப் பொதுக்கூட்டம்

‘குரங்குக்குட்டி ஆளுநர்!’ - கே.பாலகிருஷ்ணன்

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆளுநரோடு சேர்த்து இ.பி.எஸ்., மோடி ஆகியோரையும் ஒரு பிடி பிடித்தார். “அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்துக் கேட்கிறேன்... ஆளுநருக்கு எதிரான தீர்மானம் வந்தபோது எங்கே போனீர்கள்... ஆளுநர் ரவிதான் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கிறார் என்றால், அந்தத் துரோகத்துக்கு அ.தி.மு.க துணைபோகிறது... ஆளுநருக்குக் காவடி தூக்குகிறது. முதலில் பிரதமர் மோடியின் ஆதரவு இல்லாமல் ஆளுநர் இப்படி ஆட முடியுமா... குரங்கு, குட்டியைவிட்டு ஆழம் பார்க்கிறது என்பார்களே, அதுதான் இங்கு நடக்கிறது” என்று முழங்கிய கே.பாலகிருஷ்ணன், கேரளாவில் பினராயி விஜயன் ஆளுநரை எதிர்கொண்டவிதத்தையும் சொன்னார்.

‘முதலமைச்சர்களை ஒருங்கிணையுங்கள்’ - ஸ்டாலினுக்கு திருமா வைத்த கோரிக்கை!

“ஆர்.எஸ்.எஸ் பயிற்சிப் பட்டறையில் வளர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஆர்.என்.ரவி ஓர் எடுத்துக்காட்டு. மாநில அரசுகளே இருக்கக் கூடாது... பிராந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது... இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்... இந்தியாவுக்கென அரச மதத்தை நிறுவ வேண்டும்... தேசியக்கொடியைக் காவி யாக்க வேண்டும்’ போன்ற கொள்கைகளைக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்தான் பல மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள். எனவே, ‘மாநில முதல்வரின் இசைவோடுதான் ஆளுநர்களை நியமிக்க வேண்டும்’ என்ற நீதியரசர் மதன்மோகன் பூஞ்சி கமிஷன் பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவர, தமிழக முதல்வர் அனைத்து முதலமைச்சர்களையும் ஒருங்கிணைத்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்’’ என்று ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்தார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.

‘மாற்றப்படவேண்டியவர் மோடியும்தான்!’ - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற திருநாவுக்கரசர் எம்.பி., “ஆளுநர் ரவி வெறும் அம்பு. எய்தவர்கள் மோடியும் அமித் ஷாவும்தான். பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநர்களைவைத்து, தொல்லை தருகிறார்கள். ரவியை மாற்றினால், இன்னோர் ஆளை அனுப்பி இதையேதான் செய்யப்போகிறார்கள். எனவே, மாற்றப்படவேண்டியது ரவி மட்டுமல்ல, மோடியும்தான். அவர் மாறினால் எல்லாம் மாறும்” என்றார்.

‘நாங்கள் எந்த எல்லைக்கும் போவோம்!’ - கனிமொழி கருணாநிதி

தி.க கி.வீரமணி, ம.ம.க ஜவாஹிருல்லா, இ.யூ.மு.லீக் முகம்மது அபூபக்கர், கொங்கு நாடு ஈஸ்வரன் ஆகியோரும் ஆளுநரை ‘அட்டாக்’ செய்தார்கள். கூட்டத்துக்குத் தலைமையேற்பதாக இருந்த டி.ஆர்.பாலுவுக்கு பதில், மகளிரணித் தலைவி கனிமொழி தலைமை தாங்கினார். “மசோதாக்களைக் கிடப்பில்போட்டு கிட்டத்தட்ட 50 உயிர்களை ஆளுநர் பலி வாங்கியிருக்கிறார். மக்கள் போராட்டமான ஸ்டெர்லைட் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். எங்களுடைய உயிர், விலைகொடுத்து வாங்கிவிடக்கூடிய பொருள் என நீங்கள் நினைத்தால்... நாங்கள் எந்த எல்லைக்கும் போவோம். உங்களால் ராஜ் பவனிலிருந்து வெளியே கால்வைக்க முடியாது. இந்தக் கூட்டம் இதோடு நின்றுவிடாது... நம் முதல்வர் திரட்டும் அணி பேரணியாக டெல்லி நோக்கிச் செல்லும். அங்கே ஆட்சி மாற்றம் நடைபெறும்” என்று கர்ஜித்தார் எம்.பி கனிமொழி.