Published:Updated:

‘‘இந்தி திணிப்பை தி.மு.க., அ.தி.மு.க. உறுதியாக எதிர்க்காது!’’ - பெ.மணியரசன்

"ஆரியத்துவாவின் லட்சியமே சமஸ்கிருதம்தான். அந்த லட்சியத்தை எட்டுவதற்கான வழியில், இடைமொழியாக மட்டுமே இந்தியைக் கொண்டுவர அவர்கள் நினைக்கிறார்கள்."

P Maniyarasan
P Maniyarasan

‘நாடு முழுக்க ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும்’ என்று சொல்லி, அடுத்த அதகளத்துக்கு தயாராகிவிட்டது ஆளுங்கட்சியான பி.ஜே.பி! ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட்டு வரும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘இந்தியை நாடு முழுவதும் ஒரே மொழியாகக் கொண்டுவந்தால்தான், உலக அளவில் இந்தியாவுக்கென்ற தனித்த அடையாளம் கிடைக்கும்’’ என்று பேசியிருப்பது தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அமைப்பினர், அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிராக தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனைச் சந்தித்துப் பேசினோம்.

`நாடு முழுவதற்குமான மொழி, இந்தி!' - அமித் ஷா

‘‘மும்மொழிக் கொள்கையின்வழி, இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது கூடுதல் தகுதியாகும் என்கிறார்களே ஆட்சியாளர்கள்?’’

‘‘மும்மொழிக் கொள்கை, இருமொழிக் கொள்கை என்று எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களைப் பொருத்தவரையில், ஒரே மொழிக் கொள்கைதான். அது தமிழ் வழியிலான பயிற்றுமொழி, ஆட்சி மொழி என்பதாகத்தான் இருக்கவேண்டும். எனவே, இந்தி எந்த உருவில் ஆதிக்கம் செலுத்த வந்தாலும் அதை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்.’’

‘‘நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்ற அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

Amit shah
Amit shah

‘‘இந்தியாவின் அடையாளமே இந்திதான் என்பதை அமித்ஷா வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இதுநாள்வரையிலும் இந்தி என்பது வெறும் ஒரு அலுவல்மொழி, இணைப்பு மொழி என்று புரிந்துகொண்டிருந்தவர்கள், அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்குப் பிறகாவது, அது ஒரு இன அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகின் தொன்மையான தமிழ் மொழியை அழித்துவிட்டு, இந்தியோடு ஐக்கியமாகிக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள்தான் அமித்ஷாவின் பேச்சை வரவேற்பார்கள். தமிழ் மொழியையும் இனத்தையும் காக்க நினைப்பவர்கள் ஒருபோதும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.’’

‘‘கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது நல்லது என்பதைத்தவிர, மத்திய ஆட்சியாளர்களுக்கு இதில் வேறு என்ன உள்நோக்கம் இருந்துவிடமுடியும்?’’

Education
Education

‘‘ஆரியத்துவாவின் லட்சியமே சமஸ்கிருதம்தான். அந்த லட்சியத்தை எட்டுவதற்கான வழியில், இடைமொழியாக மட்டுமே இந்தியைக் கொண்டுவர அவர்கள் நினைக்கிறார்கள். இதுதான் ஆரியத் திட்டம்! அதனால்தான், புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை வரையறுத்துள்ள கஸ்தூரி ரெங்கன் அறிக்கையிலேயே அதைத் தெளிவுபடுத்திவிட்டார்கள். அதாவது, 8 வயதுக்குள் குழந்தைகள் 5 மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். அதனால், இப்போதைக்கு சமஸ்கிருதத்தை 4-வது மொழியாக மட்டும் படியுங்கள். இறுதியில் சமஸ்கிருதம்தான் வரவேண்டும் என்றும் சொல்கிறார்கள். எனவே, அந்த இறுதி நிலையை எட்டுவதற்கான இடைக்கால ஏற்பாடாகத்தான் இந்தியைக் கொண்டுவர அவர்கள் நினைக்கிறார்கள்.’’

‘‘1965-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ‘இந்தி மொழித் திணிப்பு’க்கு எதிரான போராட்ட சூழல் மீண்டும் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறதா?’’

Anti Hindi Agitations
Anti Hindi Agitations

‘‘1960 காலகட்டங்களில், தமிழ்நாட்டில் ‘இந்தி மொழித் திணிப்பு’க்கு எதிராக தி.மு.க போராட்டங்களை முன்னெடுத்தது. அதாவது, 1963-ல் முதன்முதலாக இந்தி மொழி எதிர்ப்பு மாநாடு நடத்தி, தொடர்ச்சியாக அதுகுறித்த விழிப்பு உணர்வு பரப்புரைகளை நடத்தி வந்ததன் உச்சமாகவே 1965-ல் ‘இந்தி திணிப்பு’க்கு எதிராக தமிழகத்தில் பெரும் புரட்சி வெடித்தது. அன்றைய காலகட்டத்தில், இந்திய அரசை எதிர்ப்பதென்பது காங்கிரஸ் அரசை எதிர்ப்பதாகத்தான் இருந்தது. ஆனால், இன்றைக்கு அதே காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளோடெல்லாம் கூட்டணி வைத்து சீரழிந்துவிட்டது தி.மு.க. அந்தச் சீரழிவின் இன்னொரு உச்சம்தான் அ.தி.மு.க. எனவே, இந்தி மொழி எதிர்ப்பு போராட்டக் களங்களில் தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் பழைய வீரியத்துடன் வந்து நிற்கமாட்டார்கள். கூட்டணி வரம்புக்கு உட்பட்டு வெறுமனே அறிக்கை மட்டும் வெளியிடுவார்கள். ஏனெனில், தி.மு.க-வின் எஜமானர்களான காங்கிரஸும் பா.ஜ.கவும் டெல்லியில் இருக்கிறார்கள்!’’

‘‘அரசியல்ரீதியாக பெரிய கட்சிகள் இந்தி திணிப்புக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் போனால், நிலைமை என்னவாகும்?’’

Maniyarasan
Maniyarasan

‘‘அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசிய ஆற்றல்கள், தமிழ் மொழி, இனத்தின் மீது பற்று கொண்டவர்கள் மற்றும் இன்னொரு அயல் மொழியைத் திணிக்கக்கூடாது என்று கருதும் ஜனநாயகவாதிகள் எல்லோரும் ஒருங்கிணைந்து போராடவேண்டும். பெரிய கட்சிகள் வந்துதான் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கக்கூடாது. பெரிய கட்சிகள், தாங்களாகவே முன்வந்து இதுமாதிரியான போராட்டங்களுக்கு தலைமையேற்றால் தப்பில்லைதான். ஆனால், வரமாட்டேன் என்கிறார்களே... ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கே தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் வந்து தலைமை தாங்குகின்றனவா என்ன? மக்களாக முன்னெடுத்து நடத்துகின்ற போராட்டத்துக்கு கடைசி ஆளாக வந்து நின்று வாழ்த்திவிட்டுப் போவார்கள். அவ்வளவுதானே... தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரானப் போராட்டம் எல்லாம், தி.மு.க., அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளின் வழிகாட்டுதலிலா நடைபெற்றது? அவர்களெல்லாம் வெறும் சம்பிரதாயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டுப் போனார்கள். மக்கள்தான் முழுமையாகப் போராடினார்கள். அதுவும், ‘எந்தக் கட்சிக் கொடியும் தேவையில்லை’ என்ற நிபந்தனையோடு போராட்டத்தை நடத்தினார்கள். அந்தளவுக்கு இவர்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் மக்கள். கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு பெரிய தலைவர்களும்கூட, ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவருவதற்காக தீர்மானமெல்லாம் கொண்டுவந்தார்கள். கூட்டணிக் கட்சியாக இருந்து இவர்கள் கொண்டுவந்த தீர்மானங்களே நிறைவேற்றப்படவில்லை. கடைசியில் மக்களே தன்னெழுச்சியாகப் போராடித்தானே ஜல்லிக்கட்டை கொண்டுவந்தார்கள் என்பதுதானே அண்மைக்கால வரலாறு!’’

‘‘இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்கும் பணியை தமிழ்த் தேசிய பேரியக்கம் முன்னெடுக்குமா?’’

‘‘நாங்கள் செய்வோம். எங்களைப்போல் மற்ற அமைப்புகளும் செய்யவேண்டும். யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் நாமே முன்முயற்சி எடுத்து செயலாற்றவேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஒத்த கருத்துடைய எந்தக் கட்சி வந்தாலும் அவர்களையும் சேர்த்துக்கொண்டு போராடுவோம். எது சரியானது என்பதைப் பார்த்து தேர்வு செய்யுங்கள்; எது சாத்தியமானது என்பதைப் பார்த்து தேர்வு செய்தீர்களானால், அது பச்சை சந்தர்ப்பவாதம். நம் உரிமைகளைப் பறித்தவனிடம், ‘இதையாவது கொடுங்கள்’ என்று கெஞ்சினால், அவன் எதையுமே தரமாட்டான். எனவே சிந்திக்கத் துணியுங்கள்; செயற்களம் வாருங்கள் என்பதுதான் எங்கள் முழக்கம்! வரலாற்றில், நம் தமிழ் இனம் எத்தனையோ முறை அயலார் படையெடுப்புகளுக்கு ஆளாகி அடிமைச் சமூகமாக இருந்திருக்கிறது. ஆனாலும்கூட, நம் மொழியையும் அடையாளத்தையும் இழக்காமல் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து கடத்தி வந்திருக்கிறது. இன்றைக்கு வருகிற ஆதிக்கங்களை ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவில்லையென்றால், இதுவரை நிலைத்திருந்த தமிழ் மொழியும் அடையாளமும் இனி இருக்காது போய்விடும். இந்த ஆபத்தைப் புரிந்துகொண்டு எல்லோரும் களம் இறங்கவேண்டும்.’’