Published:Updated:

ராஜ்ய சபா சீட்: தே.மு.தி.க-வின் தப்புக்கணக்கும் தி.மு.க-வின் தேர்தல் கணக்கும்!

விஜயகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம்
விஜயகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம்

நாடாளுமன்றத் தேர்தலின்போது துரைமுருகனை தே.மு.தி.க நிர்வாகிகள் சந்தித்தனர். இப்போது ராஜ்ய சபா சீட்டுக்காக அ.தி.மு.க-வுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது தே.மு.தி.க. இந்த இரண்டு விஷயங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது என்ன?

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளே ராஜ்ய சபா தேர்தலில் ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தார்கள். தேர்தலில் போட்டியும் நடக்காது. கூட்டணிக் கட்சிகளின் குடைச்சலும் இருக்காது. அது ஒரு காலம்.

திராவிட கட்சிகளிடம் ராஜ்ய சபா சீட் கேட்கும் கலாசாரத்தைத் தொடங்கி வைத்தது பா.ம.க-தான். நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒப்பந்தம் போடும்போது ராஜ்ய சபாவுக்கு `ப்ளஸ் 1' எனக் கேட்டு வாங்கி வந்தது பா.ம.க. 2009 எம்.பி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க-வுக்கு கூடுதலாக ஒரு ராஜ்ய சபா சீட் தரப்படும் எனச் சொன்னார் ஜெயலலிதா. ஒப்பந்தத்திலும் அது இடம்பெற்றிருந்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் கூட்டணிக் கட்சிகளுக்கும் ராஜ்ய சபா சீட்டை ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன இரண்டு திராவிட கட்சிகளும். அது இன்றைக்கும் விவாதம் ஆகியிருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது...
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது...

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட... கோதாவில் முதலில் குதித்தது தே.மு.தி.க. ராஜ்ய சபா சீட்டை ஒதுக்கச் சொல்லி வெளிப்படையாகக் கருத்தை வெளியிட்டார் பிரேமலதா. சுதீஷும் எடப்பாடியைச் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார்.

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுப்பதாகக் கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்தோடு உள்ளோம். எங்கள் உரிமையைக் கேட்போம்" எனச் சொல்லியிருக்கிறார் பிரேமலதா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வைப் போல ஒரு ராஜ்ய சபா எம்.பி-யை அளிப்பது தொடர்பாகத் தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அதிக தொகுதிகளைப் பெறுவதில் தே.மு.தி.க முனைப்புக்காட்டி, பிகு பண்ணிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகனைச் சந்திக்க தே.மு.தி.க நிர்வாகிகளை அனுப்பி வைத்தார் பிரேமலதா. அதை துரைமுருகன் அம்பலப்படுத்தினார். இரண்டு பக்கமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க அம்பலப்பட்டுப்போனது. இதனால், அ.தி.மு.க-வைத் தவிர வேறு எந்தக் கூட்டணியிலும் தே.மு.தி.க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

துரைமுருகன்
துரைமுருகன்

அ.தி.மு.க தொகுதி உடன்படிக்கையில் ராஜ்ய சபா சீட்டு தருவதாக முதலில் திட்டமிட்டிருந்த அ.தி.மு.க, அதை ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை. வெறும் வாய் வாக்குறுதியாக மட்டுமே கொடுத்தது. துரைமுருகன் அன்றைக்கு மூட்டிய நெருப்புதான் இன்றைக்குத் தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் அளவுக்குப் போனது.

பி.ஜே.பி, அ.தி.மு.க அரசின் திட்டங்களை ஆதரித்துக் கொண்டிருந்த பிரேமலதா ராஜ்ய சபா சீட்டுக்காகப் பேட்டிகளில் கொஞ்சம் காரம் சேர்க்க ஆரம்பித்தார். ``குடியுரிமைச் சட்டம் நாட்டுக்கு நலன் என்றால் அதை நாங்கள் வரவேற்போம். அதே நேரத்தில் அது மக்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக தே.மு.தி.க எதிர்க்கும்'' எனச் சொன்னார் பிரேமலதா. இவையெல்லாமே ராஜ்ய சபா சீட்டுக்காக நடத்தப்படும் பேச்சுகள்தான்.

விஜயகாந்த், பிரேமலதா
விஜயகாந்த், பிரேமலதா

பிரேமலதாவோ, அவரின் சகோதரர் சுதீஷோ ராஜ்ய சபா எம்.பி ஆகிவிட வேண்டும் என ஆசைப்படுகிறார். அந்த எண்ணம் ஈடேறுமா என்பது சந்தேகம்தான். கடந்த ஆண்டு நடந்த ராஜ்ய சபா தேர்தலில் பா.ம.க-வுக்கு எம்.பி பதவி அளித்தது அ.தி.மு.க. அன்புமணி எம்.பி ஆனார்.

அப்போதே அ.தி.மு.க தலைமையிடம் கோரிக்கை வைத்தார் பிரேமலதா. ஆனால், அப்போது அன்புமணிக்கு அளிக்க வேண்டும். அதனால், அடுத்த முறை தருகிறோம் எனச் சமாதானம் சொன்னது அ.தி.மு.க தலைமை. இந்த முறையும் மேயர் பதவி தருகிறோம் என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தே.மு.தி.க-வை அ.தி.மு.க தட்டிக் கழிக்கும்.

சுதீஷ்
சுதீஷ்

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்றபோது பா.ம.க பெல்ட்டில் அ.தி.மு.க கூட்டணிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளிலும் பலன் கிடைத்தது. அதற்காக அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட்டை அ.தி.மு.க வழங்கியது. அதே போன்ற செல்வாக்கு தே.மு.தி.க-வுக்கு இல்லை. அதனால் 3 சீட்டுகளையும் கட்சியினருக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது அ.தி.மு.க.

அந்த மூன்று இடங்களைக் கைப்பற்றுவதில் அ.தி.மு.க-வில் கடும் போட்டி நிலவுகிறது. நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், தம்பிதுரை, அன்வர் ராஜா, கோகுல இந்திரா உள்ளிட்டோர் ரேஸில் இருக்கிறார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வராது என்கிற எண்ணம் சீனியர்கள் முதல் தொண்டர்கள் வரையில் இருக்கிறது. ராஜ்ய சபா சீட்டுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு எனக் கணக்குப் போட்டு சீட்டை வாங்கிவிட்டு ஆறு ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறார்கள் சீனியர்கள்.

எடப்பாடியும் பன்னீரும்
எடப்பாடியும் பன்னீரும்

இவர்கள் கணக்கு இப்படியென்றால் எடப்பாடியும் பன்னீரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியை வாங்கித் தர முயன்றுகொண்டிருக்கிறார்கள். பன்னீர்செல்வம், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. சீனியர்கள் யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது எனக் காய்கள் நகர்த்தி வருகிறாராம். சீனியர்கள் யாராவது வந்தால் அது தன் மகனுக்குப் போட்டியாக அமைந்து, மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதில் தடையாக இருந்துவிடக் கூடாது என நினைக்கிறார் பன்னீர்செல்வம். இதை முறியடிக்க சீனியர்களுக்கே சீட் தர எடப்பாடி திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தி.மு.க மூன்று வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அது வேறு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. ``ராஜ்ய சபா தேர்தலில் வாய்ப்பு தருகிறோம். ஆதரவு தாருங்கள்'' என ஸ்டாலின் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டதாம். அதனால், அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தலில் பணியாற்றியது ம.ம.க.

``கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலிலும் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. இப்போதும் ஏமாற்றப்பட்டுவிட்டோம்'' எனப் புலம்புகிறது ம.ம.க. தங்கள் கட்சிக்குத் தராமல் போனாலும் பரவாயில்லை. முஸ்லிம் ஒருவருக்குகூட தி.மு.க சீட் ஒதுக்காததைக் கண்டு தி.மு.க மீது அதிருப்தியில் இருக்கிறதாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..?!'- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

2019 எம்.பி தேர்தலில் தி.மு.க அறிவித்த வேட்பாளர்களில் முஸ்லிம் ஒருவர்கூட இல்லை. அடுத்து நடந்த இரண்டு ராஜ்ய சபா தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு சீட் தராமல் போனதற்குக் காரணம் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்தானாம். `சி.ஏ.ஏ விவகாரத்தில் முஸ்லிம் ஓட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, சி.ஏ.ஏ-வை எதிர்க்கும் தி.மு.க-வுக்கு கிடைத்துவிடும். அதோடு, முஸ்லிம் ஒருவருக்கு சீட் கொடுத்தால் பி.ஜே.பி-யின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்' எனச் சொன்னதால் ராஜ்யசபாவுக்கு முஸ்லிம் வேட்பாளரை தி.மு.க அறிவிக்கவில்லையாம்.

ஆனால், முஸ்லிம்கள் கணக்கு வேறாக இருக்கிறது. ``கடந்த எம்.பி தேர்தலில் 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஒருவகையில் முஸ்லிம்கள் ஓட்டுகளும் காரணம். பி.ஜே.பி-யை வீழ்த்த தி.மு.க கூட்டணியை ஆதரித்தார்கள். தள்ளி வைக்கப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் நடைபெற்றபோது தி.மு.க போராடிதான் ஜெயித்தது. வேலூரில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காக அப்போது நடந்த ராஜ்ய சபா தேர்தலில் முஹம்மது ஜானை வேட்பாளராக அறிவித்தது அ.தி.மு.க. அவரும் எம்.பி ஆனார்.

வேலூர் தொகுதி தேர்தல் நடந்த அன்றுதான் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. வேலூர் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் ஆம்பூர், வாணியம்பாடி ஏரியாவில் முஸ்லிம் ஓட்டுகள்தான் தி.மு.க-வுக்கு கடைசி நேரத்தில் கைகொடுத்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க சார்பில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. கருணாநிதி இருந்திருந்தால் இப்படியான தவற்றைச் செய்திருக்க மாட்டார்'' எனப் புலம்புகிறார்கள். சி.ஏ.ஏ-வை ஆதரித்து வாக்களித்தபோதும், முஸ்லிம் ஒருவருக்கு ராஜ்ய சபாவில் வாய்ப்பளித்தோம். ஆனால், தி.மு.க அதைக்கூடச் செய்யவில்லை என எடப்பாடி அறிக்கைவிடப் போகிறாராம்.

அடுத்த கட்டுரைக்கு