Published:Updated:

ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு; அதிமுக பங்கேற்கிறது!

ஆளுநர் ஆர்.என் ரவி

"நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக அரசின் மாண்பு கேள்விக்குறியாகியுள்ளது." - தங்கம் தென்னரசு

ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு; அதிமுக பங்கேற்கிறது!

"நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக அரசின் மாண்பு கேள்விக்குறியாகியுள்ளது." - தங்கம் தென்னரசு

Published:Updated:
ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்குமாறு தமிழக ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்த விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பங்கேற்கப்போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைமை நேற்றே அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்தத் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கு முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. 2021, செப்டம்பரில் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் தமிழக அரசுக்குத் திருப்பியனுப்பிவிட்டார். அதையடுத்து, உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி, சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

அதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே, நீட் விலக்கு மசோதா மீதான குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகத் தமிழக அரசு காத்திருப்பில் உள்ளது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், ``தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைக்கவில்லை" என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இது தொடர்பாக ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு ``தமிழகச் சட்டமன்ற மாண்பையும் மக்களையும் மதிக்காததால், ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழக அரசு. நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் தமிழக அரசின் மாண்பு கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வரிடம் ஒப்புதல் அளித்தபடி ஆளுநர் இந்த மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார். ஆளும் திமுக-வின் கூட்டணிக் கட்சிகள் இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்வது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ``ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்ளும்” எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே இன்று மாலை ஆளுநர் ரவியை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்துப் பேசவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism