Published:Updated:

திமுக-வும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமும்!

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

“அறிஞர் அண்ணா இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆற்றிய உரைதான் முதல் எதிர்ப்புக் குரலாக ஒலித்தது.”

திமுக-வும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமும்!

“அறிஞர் அண்ணா இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆற்றிய உரைதான் முதல் எதிர்ப்புக் குரலாக ஒலித்தது.”

Published:Updated:
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

தி.மு.க அரியணை ஏறுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள். ‘கட்டாய இந்தியைப் புகுத்தி, இன்னொரு மொழிப்போரைத் திணிக்க வேண்டாம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் அதன் நீட்சிதான். எனவேதான் அக்டோபர் 15-ம் தேதி (இன்று) தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி சார்பாக இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு தமிழ்நாடு கண்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி சுருக்கமாக...

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

1937-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற ராஜாஜி, ‘இனி பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்’ என அறிவித்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. திருச்சி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், அறிஞர் அண்ணா இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆற்றிய உரைதான் முதல் எதிர்ப்புக் குரலாக ஒலித்தது. இதையடுத்து தந்தை பெரியாரும் இந்தித் திணிப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தார். அதன் பிறகு, தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. திருச்சியிலும் காஞ்சியிலும் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. சிறை நிரப்பும் போராட்டத்தில் பெரியார் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தால் நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்தது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜாஜி திணறினார். இதனால் 1939-ல் ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசு, 1940-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ல் ‘இந்தி கட்டாயம்’ என்ற உத்தரவைத் திரும்பப் பெற்றது.

 அண்ணா , பெரியார்
அண்ணா , பெரியார்

இரண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்:

இந்திய விடுதலைக்கு பிறகு முதன்முதலில் இந்தி கட்டாயம் என 1948-ல் அப்போதைய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இதனால் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டமாக மாறியது தமிழகம். இதை தி.க மற்றும் தமிழ் அமைப்புகள் முன்னெடுத்தன. இந்தப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாறியதால் இந்த உத்தரவை ஓமந்துரார் அரசு திரும்பப்பெற்றது.

மூன்றாவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்:

1965-ம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. `அலுவல் மொழியாக இருந்த ஆங்கிலம் படிப்படியாக நீக்கப்படும், மத்திய அரசின் சட்டங்கள், ஆணைகள், கட்டளைகள் என அனைத்தும் இந்தியில் மட்டுமே வெளியிடப்படும்’ என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக-வின் அன்றைய மக்களவை உறுப்பினர்கள் நாஞ்சில் மனோகரன், க.ராசாராம், மாநிலங்களவை உறுப்பினர் அறிஞர் அண்ணா ஆகியோர் இந்த அறிவிப்புக்கு எதிராக இந்தியாவின் முதல் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் திமுக முழுமையாகச் செயலில் இறங்கியது. திமுக-வின் முக்கியத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1965-ம் ஆண்டு நடந்த மொழிப்போரில் திமுக பெரும் பங்காற்றியது.1965, ஜனவரி 27-ம் தேதி ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கோஷமிட்டபடியே திருச்சி ரயில்வே சந்திப்பு முன்னர் கீழ்ப்பழுவூர் சின்னசாமி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார். பல மாணவர்கள், இளைஞர்கள், தமிழர்கள் மொழிப்போரில் தங்களது இன்னுயிர்களை நீத்தனர். பல மாணவர்கள், இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். மக்களின் மொழிப்போருக்கு அஞ்சி கட்டாய இந்தித் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்தது.

இந்தி எதிர்ப்பு
இந்தி எதிர்ப்பு

நான்காவது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்:

1986-ம் ஆண்டு, பிரதமர் ராஜீவ் காந்தி ‘இந்தியாவிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு இனி புது டெல்லியிலிருந்து வரும் கடிதங்கள் இந்தியில் மட்டும்தான் வரும்’ என்றார். அதோடு, ‘இந்தியா முழுவதும் நவயோதயா பள்ளிகள் தொடங்கப்படும். அந்தப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும்’ எனவும் அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஒரு மொழிப்போருக்கு இந்த அறிவிப்பு வித்திட்டது. இதைத் தொடர்ந்து திமுக, இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியின் 343-வது பிரிவின் நகலை, பொது இடங்களில் தீயிட்டுக் கொளுத்தும் நிகழ்வு பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதனால் தி.மு.க-வின் தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சிறைக்குச் சென்றார்.

இவ்வாறாக தமிழகம் கண்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் மீண்டும் உருவாகும் சூழல் அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!