Published:Updated:

`டோக்கன் என்கிட்ட இருக்கு; ஆனா பொங்கல் பரிசு வாங்கிட்டதாக மெசேஜ் வருது!' -தி.மு.க பிரமுகர் புகார்

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு

ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த டோக்கன் தற்போது என்னிடம்தான் இருக்கிறது. ஆனால் பொங்கல் பரிசை நான் பெற்றுவிட்டதாக, என்னுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, கரும்புடன் 2,500 ரூபாய் பணமும் வழங்கிவருகிறது. இதில் முறைகேடு நடப்பதாக தஞ்சையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் இறைவன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் நகர்மன்றத் தலைவரான இவர், தற்போது தி.மு.க தலைமைக் கழக சட்டத் திருத்தக்குழு உறுப்பினராக இருக்கிறார். தமிழக அரசு வழங்கிவரும் பரிசுத் தொகையை, தான் இன்னும் பெறாத நிலையில், அதைப் பெற்றுவிட்டதாகத் தன் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இறைவன்
இறைவன்

இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள முத்தமிழ் நகரில் வசித்துவருகிறார். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையான ரூபாய் 2,500-ஐ பெறுவதற்கான டோக்கனை, சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் கடை ஊழியர்கள் இவரது வீட்டில் வழங்கினர். இன்னும் அந்தத் தொகையைப் பெறாத நிலையில், 2,500 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டதாக மெசேஜ் வந்ததாகவும், இதில் ஏதோ முறைகேடு நடந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறர். இது குறித்து தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் புகாரளித்திருக்கிறார் இறைவன்.

பொங்கல் பரிசு: ரேஷன் கடையில் அ.தி.மு.க பேனர் - அகற்றப் போராடிய தி.மு.க-வினர் மீது வழக்கு!

`தஞ்சாவூர் முன்சிபல் காலனி ரேஷன் கடை ஊழியர்கள், நேற்று முன்தினம் மாலை, எங்கள் வீட்டுக்கு வந்து, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனை வழங்கினர். ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த டோக்கன் தற்போது என்னிடம்தான் இருக்கிறது. ஆனால் பொங்கல் பரிசை நான் பெற்றுவிட்டதாக, என்னுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. எனது ரேஷன் கார்டுக்கு உரிய பரிசுத்தொகையை யாரோ எடுத்துக்கொண்டு முறைக்கேடு செய்திருக்கிறார்கள். விவரம் அறிந்த எனக்கே இந்தநிலை என்றால், பாமர மக்களுக்கு எப்படி இந்தத் தொகை முழுமையாகப் போய்ச்சேரும்...

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு

ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும் முறைகேடுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார் அவர். இது குறித்து விளக்கமளித்திருக்கும் தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், `இறைவன் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு செய்தோம். இறைவனின் ரேஷன் கார்டுக்கு இன்னும் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. அவரது செல்போனுக்கு தவறுதலாக குறுஞ்செய்தி சென்றிருக்கலாம்’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு