Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: சீட்-க்கு 'நோ' சொன்ன திமுக! - சுயேட்சையாக வென்று செக் வைத்த நபர்

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக தரப்பில் மறுப்பு வந்த போதிலும், சுயேட்சையாக தன் உறவினர்களை நிறுத்தி வெற்றிபெற செய்து தன் செல்வாக்கை காட்டியுள்ளார் ஒலக்கூர் ஒன்றியத்தை சேர்ந்த நபர் ஒருவர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் பெருவாரியான இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக அதே நிலைதான் என்றாலும், சீட் கொடுக்கும் முடிவில் ஏற்பட்ட குழப்பத்தால், தற்போது ஒலக்கூர் ஒன்றியத்தில் சேர்மன் பதவியை பிடிப்பதற்கு பெரும்பான்மை இன்றி நிற்கிறது திமுக.

`பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்!'  - சி.வி.சண்முகம் அதிரடி

இது தொடர்பாக விவரம் அறிந்த லோக்கல் நபர்கள் சிலரிடம் பேசினோம், `விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்று ஒலக்கூர். இந்த ஒன்றியத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நா.சேகர் என்பவர், முன்பு பாமக-வில் இருந்தாராம். இவர் சுமார் 3 மாதங்களுக்கு முன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுக-வில் இணைந்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலங்களில் கீழ்கூடலூர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்களை அளித்து, மருத்துவ முகாம் போன்றவற்றை முன்னின்று செய்து வந்தாராம். இந்நிலையில், ஊர் மக்களுக்காக இரண்டு டிராக்டர்களை வாங்கிவிட்டு "விருப்பப்படும் விவசாயிகள், தங்களின் விவசாய வேலைகளுக்கு அந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்காக வாடகை ஏதும் தேவையில்லை" என்று கூறி அப்பகுதி விவசாயிகளுக்கு உதவியும் செய்தி இருக்கிறாராம்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

இதன் மூலம் ஊருக்குள் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியை செய்திருக்கிறார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அமைச்சர் செஞ்சி மாஸ்தானை நேரில் சந்தித்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கேட்டாராம். அமைச்சரும் அந்த கோரிக்கையை பரிசீலிக்க... ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருக்கும் சொக்கலிங்கமோ, "இந்த முறை நீண்ட நாட்களாக கட்சியில் இருப்பவர்களுக்கு தான் சீட்" என்று கூறி அதற்கு முட்டுக்கட்டை போட்டாராம். "இது உள்ளாட்சி தேர்தல். கட்சிக்காரங்க எல்லாரையும் பார்க்க வேண்டி இருக்கு." அதனால என்று அமைச்சர் இழுக்க, கட்சியில் சிலர் சுயேட்சையாக போட்டியிட சிக்னலும் கொடுத்தார்களாம்.

தன் கட்சி மூலம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால்... தனது இருப்பையும், செல்வாக்கையும் காட்ட நினைத்த சேகர், 10 மற்றும் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் தன் உறவினர்களான பூங்கொடி, எழிலரசன் ஆகிய இருவரையும் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக நிறுத்தியுள்ளார். மேலும் சேகர் கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். கடந்த 6ம் தேதி அன்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவின்போதே ஒலக்கூர் ஒன்றியத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை திண்டிவனத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று (12.10.2021) நடைபெற்றது. 10 மற்றும் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட சேகருடைய உறவினர்களான பூங்கொடி மற்றும் எழிலரசன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தான் போட்டியிட்ட கீழ்கூடலூர் ஊராட்சி தலைவர் பதவியிலும் வெற்றியை கண்டிருக்கிறார் சேகர்.

உறவினர்கள் மற்றும் அதிகாரியுடன் சேகர்
உறவினர்கள் மற்றும் அதிகாரியுடன் சேகர்

தன் சொந்த கட்சியினரே நம்பிக்கை இன்றி சீட்டு வழங்காததால், தன் உறவினர்களை சுயேட்சையாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்துள்ளார். ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 7 இடங்களை மட்டுமே திமுக வென்றுள்ளது. மீதமுள்ள 9 இடங்களில், அதிமுக - 3, பாமக - 2, சுயேட்சை - 4 இடங்களில் வென்றுள்ளன. ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்ற வேண்டும் என்றால் மேலும் 2 ஒன்றிய கவுன்சிலர்களின் ஆதரவு தேவையானதாக உள்ளது. அப்படி பார்த்தால் இங்கு சுயேட்சையாக வெற்றி பெற்ற நபர்களுக்கு தற்போது மவுசு கூடியுள்ளது” என்கிறார்கள்.

இந்த வெற்றி குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் கேட்க சேகரை தொடர்பு கொண்டோம். சேகர், ``இதற்கு முன்பாக நான் எந்த கட்சியிலும் இல்லை. ஒரு சிலர் நான் பாமக-வில் இருந்ததாக கூறி வருகின்றனர். 'பழைய கட்சி ஆட்களுக்கு தான் சீட்' என்று ஒன்றிய செயலாளர் கூறியதாக சொல்லப்படுவது தவறான தகவல். அப்படி பார்த்தால் எனக்கு பின்னர், அதிமுக மற்றும் தேமுதிக - வில் இருந்து பிரிந்து வந்து திமுக-வில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கு. தளபதி அவர்களின் ஆட்சி ஈர்த்த பின்னரே நான் திமுகவில் இணைந்தேன். அவரை பின்பற்றி எங்கள் பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் டிராக்டர், உணவு பொருள் போன்ற உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட சீட் கேட்டேன். அமைச்சரே கொடுக்க முன் வந்த போதும், ஒன்றியத்தில் இருப்பவர்கள் தான் தடுத்தார்கள். வேறு வழி இன்றி தான் சுயேட்சை முடிவிற்கு சென்றோம். அப்பகுதி வாக்காளர்களும் எங்களை நம்பி ஓட்டு போட்டிருக்காங்க. அவர்களுக்கு நாங்கள் நல்லது செய்வோம். ஒன்றிய சேர்மனுக்கு எங்களின் ஆதரவு கேட்பவர் நல்லவராக இருக்கும் பட்சத்தில், அவரால் மக்களுக்கு நல்லது எனும் பட்சத்தில் ஆதரவு தருவோம். இல்லையேல் கிடையாது" என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு