Published:Updated:

ராஜேந்திர பாலாஜிக்கு உதவிய ஆளுங்கட்சி விஐபி; `பதவி ஜாக்கிரதை’ எச்சரித்த ஸ்டாலின்! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

`கழுகாரிடமிருந்து அழைப்பு வரவில்லையே...’ என்று செல்போனை எடுத்துப் பார்த்தால், வாட்ஸ்அப்பில் வரிசையாகக் கொட்டிக் கிடந்தன செய்திகள்

பட்டியல் தயாரிக்கும் போலீஸ்...
கட்டம்கட்டப்படும் பாலாஜியின் நண்பர்கள்!

தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக அ.தி.மு.க ஐடி விங்கைச் சேர்ந்த விக்னேஷ்வரன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் ஏழுமலை ஆகியோரை விருதுநகர் தனிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான சிலரையும் கட்டம்கட்ட ஆரம்பித்திருக்கிறது போலீஸ்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராஜேந்திர பாலாஜி, தனது சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலருக்கு விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நகைக்கடை, ஃபைனான்ஸ் நிறுவனங்கள், டிராவல்ஸ் எனப் பல பிசினஸ்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் காவல்துறைக்குக் கிடைத்திருக்கிறது. அப்படிப் பலனடைந்தவர்கள் பட்டியலைக் கையில் எடுத்திருக்கும் காவல்துறை, அதன்படி ஒவ்வொரு நபராக அழைத்து விசாரிக்க முடிவெடுத்திருக்கிறது. மேலும், முன்னாள் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பாலாஜிக்கு ஆலோசனை கொடுத்துவந்த ஒரு கும்பலையும் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிக்கிறது போலீஸ்!

``இதென்ன பொதுக்கூட்டமா?’’
கடுகடுத்த உதயநிதி!

டிசம்பர் 26 அன்று உதயநிதியைவைத்து கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதைப் பார்த்து கடுப்பான சீமான், ``கொரோனாவைக் காரணம் காட்டி எங்கள் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் போலீஸ், உதயநிதியின் கூட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்கலாம்... கொடிசியா மைதானம் என்ன உள் அரங்கமா?” என்று சீறியிருக்கிறார். உண்மையில், கோவையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு உதயநிதிக்கே பெரிதாக விருப்பம் இல்லையாம்.

உதயநிதி செந்தில் பாலாஜி
உதயநிதி செந்தில் பாலாஜி

`பூத் கமிட்டி கூட்டம் என்றால் ஏதாவது உள் அரங்கத்தில் நடத்தியிருக்க வேண்டும்... அப்போதுதான் நமது வியூகங்கள் குறித்து ஆலோசித்திருக்க முடியும். இதென்ன பொதுக்கூட்டமா?’ என்று உடனிருந்தவர்களிடம் கடுகடுத்த உதயநிதி, அந்தக் கூட்டத்தில் இறுக்கமாக இருந்ததுடன், தனது பேச்சையும் சில நிமிடங்களில் முடித்துக்கொண்டார்!

மகள் பாசம்...
தஞ்சையில் செட்டிலாகும் டி.டி.வி!

டி.டி.வி.தினகரன் மகள் ஜெய ஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி அய்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தன் ஒரே மகள் தஞ்சாவூரில் செட்டிலானதைத் தொடர்ந்து, தினகரன் அடிக்கடி தஞ்சைக்கு விசிட் அடித்துவருகிறார்.

தினகரன் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி
தினகரன் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி

அதுமட்டுமின்றி, தஞ்சாவூரிலேயே வீடுகட்டிக் குடியேறும் திட்டமும் தினகரனுக்கு இருக்கிறதாம். அதற்காகத் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக சொந்தமாக இடம் வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தினகரன். அ.ம.மு.க கட்சி, அரசியல் நிகழ்வுகளையும் தஞ்சாவூரில் இருந்தபடியே கவனிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
நெல்லை துணை மேயர் பதவிக்குக் குறி...
வாரிசைக் களமிறக்கும் நயினார் நாகேந்திரன்!

நெல்லை எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், தன் அரசியல் வாரிசாக மகன் பாலாஜியைக் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். நெல்லை டவுனிலுள்ள வார்டில் பாலாஜியை பா.ஜ.க சார்பில் போட்டியிட வைத்து, நெல்லை மாநகராட்சியின் துணை மேயராக்குவதுதான் நயினாரின் திட்டமாம்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஆனால், நெல்லையில் இருக்கும் நயினாரின் எதிர்க் கோஷ்டினரோ, ``இவரே தன்னோட வாரிசைக் களம் இறக்குனாருன்னா எப்படி தி.மு.க-வோட வாரிசு அரசியலை விமர்சிக்க முடியும்... அதுவுமில்லாம கட்சியில வேற ஆளுங்களே இல்லையா?” என்று கடுகடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.எல்.ஏ மார்கண்டேயன் வீடியோ...
டென்ஷனில் ஸ்டாலின்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஊராட்சிப் பகுதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சக்தி உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதனால் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் மனு அளித்ததால், விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்கண்டேயன். ஆனாலும், பணிகள் நிற்காமல் தொடர்ந்ததால், தன் ஆதரவாளர்களுடன் சென்ற மார்கண்டேயன், வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து விரட்டினார். அது ற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ‘‘தெர்மல் பவர் பிளான்ட் ஆரம்பிச்சாக்கூட போராட்டம் நடத்துறதுல அர்த்தம் இருக்கு. சோலார் பேனல் அமைக்குறதைப் போய் எதிர்க்கிறீங்களே... ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்துக்கிட்டு நம்ம திட்டத்தையே எதிர்க்கலாமா?’’ என்று மின்சாரத்துறை அமைச்சர் தொடங்கி சீனியர் அமைச்சர்கள் வரை செல்போனில் மார்கண்டேயனிடம் பிடிபிடியெனப் பிடித்திருக்கிறார்கள்.

மார்கண்டேயன்
மார்கண்டேயன்

வீடியோ விவகாரம் முதல்வர் கவனத்துக்கும் செல்ல, ‘‘அடுத்த கட்சியில இருந்து நம்ம கட்சிக்கு வந்தவங்களால தலைவலியா இருக்கு’’ என்று ஏகத்துக்கும் டென்ஷன் ஆனாராம். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் எட்டு ஸ்வீட் பாக்ஸ்கள் வரை பேசி, பேரம் படியாததால்தான் எம்.எல்.ஏ கோபமுகம் காட்டிவிட்டார் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

குன்னூரில் கல்லாகட்டும் இரட்டையர்கள்!

லஞ்சத்தில் புரளும் அரசு அதிகாரிகளை ரகசியமாக நோட்டம்விட்டு, அவர்களின் பட்டியலை மேலிடத்துக்கு அனுப்புமாறு உளவுத்துறை போலீஸாருக்கு சமீபத்தில் வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதற்கான வேலைகளில் களமிறங்கியிருக்கும் காக்கிகள், ஊழல் அதிகாரிகளை ரகசியமாக நோட்டம்விட்டுத் தரவுகளைச் சேகரித்து லிஸ்ட் தயாரித்துவருகிறார்கள்.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி சுகாதாரத்துறையில் 12 ஆண்டுகளாக நங்கூரம் போட்டிருக்கும் அதிகாரி ஒருவரும், வனத்துறை அமைச்சரின் சாதிப்பாசத்தால் தாசில்தாராக நியமிக்கப்பட்டிருப்பவரும் லஞ்சத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்களாம். இரவு நேரத்தில் பொக்லைன்களை இயக்க அனுமதி கொடுப்பது முதல் இல்லீகல் காட்டேஜ் அப்ரூவல் வரை இருவரும் போட்டி போட்டு கல்லாகட்டிவருகிறார்கள்.

சிக்காத தங்கமணியின் மூன்று பினாமிகள்...
தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 69 இடங்களில் டிசம்பர் 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார்கள். அந்தச் சோதனையின் முடிவில் எதிர்பார்த்த அளவு ஒன்றும் சிக்கவில்லை. அதனால், மறுபடியும் தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகம் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடத்தினார்கள். ஆனாலும், தங்கமணிக்கு எதிரான பிடி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்குக் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிறாங்க.

தங்கமணி
தங்கமணி

தங்கமணிக்கு நெருக்கமான மூணு பினாமிகளிடம் சோதனை நடத்தாம விட்டுட்டாங்க. காவிரி ஆத்துல ராட்சச மோட்டார், குழாய்கள் மூலம் தண்ணீர் இறைத்து, விவசாயிகள் கிணற்றுக்கு வழங்கும் மூன்று ஆர்டர்கள் வாங்கியிருக்கும் மணியான நபர், ம.தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு கட்சி மாறி வந்த ‘அழகு’ பிரமுகர், ஈரோடு ஆனூர் தியேட்டர் அருகில் வசிக்கும் ஒரு நபர் ஆகிய மூணு பேரையும் விட்டுட்டாங்க. இவங்க சம்பந்தப்பட்ட இடங்கள்ல சோதனை நடத்தியிருந்தா, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வெயிட்டா கிடைச்சிருக்கும்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

‘‘ராஜேந்திர பாலாஜியைப் பிடிங்க...’’
நச்சரிக்கும் மாவட்ட வி.ஐ.பி!

ராஜேந்திர பாலாஜி தலைமறைவான ஆரம்ப நாள்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி-தான் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஒரு பேச்சு இருந்தது. இது பற்றி ஜூவி-யிலும் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, அந்த வி.ஐ.பி-க்கு கடும் டோஸ் விட்டதாம் கட்சித் தலைமை. “எனக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைங்க’ என்று வி.ஐ.பி பதற... “அந்தக் கதையெல்லாம் வேற யார்கிட்டயாவது சொல்லுங்க... அதான் புட்டு புட்டு வெச்சிருக்காங்களே... பதவி ஜாக்கிரதை” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறது தலைமை.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதனால் அப்செட்டான அந்த வி.ஐ.பி சில நாள்களாகச் சொந்த ஊரிலேயே தங்கியிருந்து, விருதுநகர் மாவட்ட எஸ்.பி-யை அடிக்கடி தொடர்புகொண்டு, “ராஜேந்திர பாலாஜியைச் சீக்கிரம் பிடிங்க” என்று நச்சரித்துவருகிறாராம்.

ஷட்டில் விளையாடுகிறார்... மான்களை ரசிக்கிறார்!
வெங்கைய நாயுடு சென்னை விசிட்
வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

துணை ஜானாதிபதி வெங்கையா நாயுடு, டிசம்பர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கிண்டி ராஜ்பவனில் தங்கியிருக்கிறார். மாலையில் ஒரு மணி நேரம் ராஜ்பவன் வளாகத்தில் வாக்கிங் போகிறார். காலையில் இறகுப் பந்து விளையாடுகிறார். ஒருசில விசிட்டர்களை மட்டுமே சந்திப்பவர், சில நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறார். ராஜ்பவனில் ஏராளமான மான்கள் வலம்வருகின்றன. அவை துள்ளி விளையாடும் காட்சிகளைப் பார்த்து ரசிக்கிறாராம் வெங்கைய நாயுடு. சமீபத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சற்று ஓய்வெடுக்கவே இந்த விசிட் என்கிறார்கள்!