Published:Updated:

ஆக்கிரமிப்பு விவகாரம்: அதிரடிகாட்டிய மாநகராட்சி ஆணையர்; போர்க்கொடி தூக்கிய திமுக நிர்வாகி!

``தற்போது, அரசியல் லாபத்துக்காக எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் மாநகராட்சி ஆணையருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்" என்றார்.

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சைத் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி, தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக நிர்வாகி நீலகண்டன் ஆர்ப்பாட்டம்
திமுக நிர்வாகி நீலகண்டன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற சரவணக்குமார் தொடக்கம் முதலே அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறார். புதிதாகக் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில், கடைகளைக் கடும் எதிர்ப்புகளை மீறி 'ஓப்பன் டெண்டர்' முறையில் ஏலம் நடத்தி மாநகராட்சியின் வருமானத்தைக் கூட்டியிருக்கிறார்.

அதேபோல, மாநகராட்சிக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கிலான இடங்களை சொற்ப வாடகைக்கு எடுத்து விதிமுறைகளை மீறிச் சம்பாதித்துவந்த தனிநபர்களிடமிருந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்டிருக்கிறார். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் எதிரே சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினார். அப்போது, தஞ்சாவூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் கடைக்குள் அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ பாணியில் அவரின் ஆதரவாளர்களும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஆளும் தி.மு.க அரசின் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தி.மு.க-வினரே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்துகொண்டிருப்பது தஞ்சை தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போராட்டம்
போராட்டம்

இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் கேட்டோம். ``அண்ணாசிலையிலிருந்து பனகல் கட்டடம் வரை சாலையோரத்தில் செல்போன், துணிக்கடை உள்ளிட்ட பல கடைகள் இருக்கின்றன. மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கு மேல் ஆக்கிரமிப்பிலிருந்த கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர். அப்போது கடை வைத்திருப்பவர்களும், எம்.எல்.ஏ நீலமேகத்தின் ஆதரவாளர்களும், தி.மு.க தஞ்சை மாநகர துணைச் செயலாளர் நீலகண்டன் தலைமையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை: 60 நாள்களில் ரூ.150 கோடி அரசு இடம் மீட்பு! - அதிரடிகாட்டும் மாநகராட்சி ஆணையர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீபாவளிக்கு முன்பே கடைகளை காலி செய்யச் சொல்லிவிட்டார்கள். தீபாவளி வியாபாரம் பாதிக்கும் என்பதால் பண்டிகை முடிந்த பின்பு காலி செய்துகொள்வதாகக் கடைக்காரர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், கடைகளை அகற்றச் சென்றபோது, நீலகண்டன் உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீஸார் அவரைத் தடுத்தனர். நீலமேகத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள்" என்றனர்.

மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம்
மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் நல்லதுரை, ``ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து வரைவு அறிக்கைகள் தயார் செய்து அங்கீகரித்தபோது, மாநகராட்சி உறுப்பினர்களாக தி.மு.க-வைச் சேர்ந்த பலர் இருந்தனர். அதில், தற்போதைய எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகமும் ஒருவர். அப்போது தி.மு.க-வினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது, அரசியல் லாபத்துக்காக எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் மாநகராட்சி ஆணையருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆளுங்கட்சியான தி.மு.க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது . ஆனால், தஞ்சையில் அந்தத் திட்டங்களை தி.மு.க-வினரே எதிர்க்கும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் நேரு ஆகியோரை எதிர்த்து அந்தக் கட்சியினரே போராட்டம் நடத்துகிறார்களா என்பதை நீலமேகத்தின் ஆதரவாளரான நீலகண்டன்தான் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்
ம.அரவிந்த்

இது குறித்து நீலகண்டனிடம் பேசினோம். ``வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி அதை அகற்றுவதற்காகக் கடைகளை அப்புறப்படுத்துவதாக ஆணையர் கூறினார். ஆனால் பெரியார் சிலைக்கு அருகில்தான் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறிய வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அத்துடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். தொடர்ந்து தி.மு.க-வுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்நோக்கத்துடன் மேற்கொண்டுவருகிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு