Published:Updated:

`ஊரடங்குச் சட்டம் முதல்வருக்குப் பொருந்தாதா?'-சேலம் ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தால் கொதிக்கும் தி.மு.க

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

தடையை மீறி முதல்வர் கூட்டம் போட்டதாக தி.மு.க-வினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டம் ஊரடங்கை மீறி நடத்தியதாக தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் சேலம் மாநகரக் காவல் ஆணையரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கொடுத்துள்ளனர்.

புகார்
புகார்

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனிடம் பேசினோம். ''உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அதையடுத்து இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பேரிடர் காலமாக அறிவித்துக் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்ற கூலித் தொழிலாளிகளும் படிக்கச் சென்ற மாணவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வராமல் ஊரடங்கை மதித்துப் பசியும் பட்டினியுமாக இருந்த இடத்திலேயே தவித்து வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களுடைய தலைவர் இரண்டு நாள்களுக்கு முன்பு அரசு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

கடிதம்
கடிதம்

ஊரடங்கு மீறி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தக் கூடாதென தடை விதித்தார்கள். 11 பேர் கலந்துகொள்ளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குக் காவல்துறை தடைபோடுகிறது. முதல்வர் என்பவர் மாநிலத்திற்கே தலைவர். அவர் தலைமைச் செயலகத்தில் இருந்துகொண்டு அனைத்து மாவட்டங்களையும் கவனிக்க வேண்டும். ஆனால் ஊரடங்கை மீறி சேலத்திற்கு வந்ததோடு 30 அதிகாரிகளை வரவழைத்துக் கூட்டம் போடுவது எந்தவிதத்தில் நியாயம்?

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 தடை உத்தரவுக்கு எதிராகவும், இந்தியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51-60க்கு எதிராகவும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 ஆகியவற்றுக்கு எதிராகவும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தியுள்ளார். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. முதல்வருக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என இல்லை. அதனால் தடையை மீறிக் கூட்டம் நடத்திய முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு