Published:Updated:

`மைக்ரோ லெவல் பிளான்; ஆபரேஷன் சேலம்!'- எடுபடுமா தி.மு.க-வின் 5 அஸ்திரங்கள்? #TNElection2021

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

`எப்படியும் வென்றே தீர வேண்டும்’ என்ற முடிவில் தீவிர முயற்சிகளைத் தொடரும் மு.க.ஸ்டாலினின் இந்த லேட்டஸ்ட் வியூகங்கள் எடுபடுமா என்பது மக்களின் கைகளில்தான் இருக்கிறது.

திருக்கிறகடந்த சில நாள்களாகவே அ.தி.மு.க - தி.மு.கவுக்கு இடையேயான வார்த்தைப்போரின் காரணமாக, தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருப்பதை நாம் உணர்ந்திருப்போம். அதிலும், குறிப்பாக மு.க.ஸ்டாலினை, `அறிக்கை நாயகன்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கிப் பேசுவதும், `அதெல்லாம் இல்லைங்க நீங்கதான் 'கரப்ஷன், கலெக்‌ஷன் நாயகன்' என எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுப்பதுமாக, இருவருக்குமிடையிலான வார்த்தைப்போர் தீவிரமடைந்துக் கொண்டேயிருக்கிறது. வழக்கத்தையும்விட தீவிரமாகப் பயணிக்கும் இந்த அறிக்கைப் போர், வார்த்தைப் போருக்குக் காரணமே `` `போர் வரட்டும்' என்ற ரஜினிதான்’’ என்கிறார்கள், இரு கட்சிகளுக்குள் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் அணியினர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, அவர் வருகை தங்கள் வெற்றிக் கனவை சிதைத்துவிடாமல் இருக்க, இருவருமே தாங்கள் ஏற்கெனவே போட்டிருந்த பல்வேறு பிளான்களையும் புதுப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

`அந்தவகையில் எடப்பாடியாகட்டும், ஸ்டாலினாகட்டும்... இருவருமே ஐந்து முக்கிய வியூகங்களை வகுத்திருக்கிறார்கள். அவை ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், எந்தவித வாக்குச் சிதைவும் ஏற்படாமல் எங்களைப் பாதுகாத்து, பலப்படுத்தும்' என்கின்றனர் இரு கழகத்தினரும்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

மு.க.ஸ்டாலின் சீக்ரெட் பிளான்கள்

இது பற்றி நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள், ``கடந்த முறை 1.31% வாக்குகளில் ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்தோம். இதற்கு, அப்போது களத்திலிருந்த மக்கள் நலக்கூட்டணியும் ஒரு காரணம். இப்போது அவர்கள்போலவே, ரஜினியும் கிளம்பியிருக்கிறார். அன்றுபோலவே இந்த முறையும் நிகழ்ந்துவிடக் கூடாதென்றே மைக்ரோ லெவலிலிருந்தே எங்கள் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். வெற்றி வாக்குகளை ஒருமுகப்படுத்தவும், அதை மேலும் பெருக்கி பலப்படுத்தவும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், ஐந்து முக்கிய பிளான்களையும் துரிதப்படுத்தியிருக்கிறார்' என லீட் கொடுத்துவிட்டு, வியூகங்களைப் பட்டியலிடத் தொடங்கினர் அறிவாலய உ.பி-க்கள்.

1) `நமக்கு நாமே’ பாணி பரப்புரைப் பயணம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

23 பொதுக்கூட்டங்கள், 2,099 கி.மீ பயணம், 59,140 மக்கள் சந்திப்பு என முதற்கட்ட 'விடியலை நோக்கி' பயணத்தை நடத்தியிருக்கிறார்கள் எங்கள் தலைவர்கள். முதற்கட்ட பயணத்தை காஞ்சிபுரத்திலிருந்து மு.க.ஸ்டாலினும், எடப்பாடியிலிருந்து கனிமொழியும், திருவாரூரிலிருந்து உதயநிதி ஸ்டாலினும் தொடங்கினார்கள். அதில், கனிமொழி பயணத்தில் சாமானியப் பெண்கள் கூட்டம் அதிக அளவில் தென்பட்டது. உதயநிதி பயணத்துக்குத் தடைபோட்டு, அவரைக் கைதெல்லாம் செய்தார்கள். இவையெல்லாம் எங்களுக்குச் சாதகமாக மாறி, அடுத்தடுத்த ஏரியாக்களில் கூட்டத்தைச் சேர்த்தன. இப்படியாக பெண்கள், இளைஞர்களைக் குறிவைத்து `நமக்கு நாமே' பாணியிலான பரப்புரைப் பயணத்தைப் பெருக்க வேண்டும் என்பது முதல் பிளான்.

அ.தி.மு.க Vs தி.மு.க ;  ஆ.ராசாவின் ‘பின்புலம்’ : சாதிரீதியில் விமர்சித்தாரா எடப்பாடி?

2) டார்கெட் மேற்கு மண்டலம்

2006-2011 நாங்கள் ஆட்சியமைத்த காலத்திலேயே மேற்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை இழந்திருந்தோம். இதைவைத்துதான் மறைந்த ஜெயலலிதாவும், `மைனாரிட்டி அரசு’ என்று எங்களை அப்போது விமர்சித்தார். இந்த மண்டலத்தில் எங்களுக்கு இன்று வரையிலுமே செல்வாக்கு குறைவாகவே இருக்கிறது. இப்படியான வீக்கான பகுதிகளைக் குறிவைத்து, தலைவர்களின் பரப்புரையை அதிகப்படுத்த வேண்டும். அந்தவகையில்தான் கோவையில் எழுந்த போஸ்டர் விவகாரத்தையொட்டி, அங்கே அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினார் உதயநிதி. அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதன் தொடர்ச்சியாகத்தான் கனிமொழி, எடப்பாடி பகுதிக்குப் பயணித்ததும், தற்போது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் கட்டமைத்தது போன்றவை. இப்படியான வீக்கான பகுதிகளில் தலைவர்கள் தொடர்ந்து பயணிக்கும்போது, மக்களிடம் ஒரு டாக் உருவாகும். எங்கள் கழகத்தின் அணிகளும் கூடுதலாகக் களப்பணி செய்வார்கள். இவை, எங்களுக்கான புதிய வாக்குவங்கியை உருவாக்கும்.

3)`மண்ணின் மைந்தர்களைக் கையிலெடு!’

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ்பெற வேண்டும் என சேலத்தில் மாபெரும் போராட்டத்தை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். அந்தக் கூட்டத்தில், ``எல்லோரும் சேலம் மாவட்டத்தை, முதல்வர் எடப்பாடியின் மாவட்டம் என்கிறார்கள். இல்லவே இல்லை. இது `சேலத்து சிங்கம்’ என அழைக்கப்பட்ட எங்கள் அண்ணன் வீரபாண்டியார் மண். அவர் கோட்டை’' என எங்கள் தலைவர் முழங்க, கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு அடங்க நீண்டநேரம் ஆனது. ஏனெனில், மு.க.ஸ்டாலினுக்கும், வீரபாண்டியாருக்கும் எப்போதுமே ஆகாது. அதனால்தான் வீரபாண்டியார் மறைந்த பிறகும்கூட, அவர் குடும்பத்தினருக்கு, தலைமையிலிருந்து பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் ஒரு பேச்சு இருக்கு. இந்த விமர்சனங்கள் பல வருஷமாகவே இருக்கிறது. ஊரறிந்த விஷயமிது.

கனிமொழி
கனிமொழி

இப்படியிருக்க, அவரை `ஆஹா... ஓஹோ...’ என்று தலைவர் பேசியது, மாங்கனி மாவட்டத்து உடன்பிறப்புகளை ரொம்பவே உற்சாகப்படுத்தியது. மேலும், `இனி பேனர், சுவரொட்டி, துண்டறிக்கைகள் என எல்லாவற்றிலுமே வீரபாண்டியார் படத்துக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும். அவரை உயர்த்தியே பரப்புரையையும் முன்னெடுக்கணும்' என்றும் தலைமையிலிருந்து வாய்மொழி உத்தரவும் வந்திருக்கிறது. இவையெல்லாமே வீரபாண்டியார் ஆதரவாளர்களை மீண்டும் களத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. இப்படியாகத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கழகத்துக்காக உழைத்த மண்ணின் மைந்தர்களை மையப்படுத்தி பரப்புரையை முன்னெடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.

4) ஆபரேஷன் `சேலம்'

முதல்வர் எடப்பாடியை அவர் சொந்த மாவட்டத்திலேயே முழுமையாக மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும்.

அதற்காக,

I) புதிய வாக்காளர்களை எங்கள் பக்கம் கொண்டு வர மாணவரணி, இளைஞரணியைக் கூடுதலாக முடுக்கிவிட்டிருக்கிறது தலைமை.

II) இதற்கடுத்து விவசாய அணி, வழக்கறிஞரணி, புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி என கழகத்தின் அனைத்து அணிகளையும் ஆக்டிவ் ஆக்குவது.

உதயநிதி
உதயநிதி

III) ஆளுங்கட்சியின் ஒவ்வொரு எம்.எல் மற்றும் மாவட்டச் செயலாளர், முதல்வருக்கு நெருக்கமானவர்கள், பிசினஸ் புள்ளிகள் உள்ளிட்ட ஒவ்வொருவருடைய ஒட்டுமொத்த தகவல்களையும் திரட்டுவது. அவர்கள் எந்தெந்த வகையில் முறைகேடுகள் செயதிருக்கிறார்கள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்றவை என அனைத்தையும் புத்தாண்டுக்குள் ஆதாரத்தோடு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது தலைமை. இதைவைத்து திண்ணைப் பரப்புரையிலிருந்து டிஜிட்டல் பரப்புரை வரை அனைத்துத் தளங்களிலும் கடும் நெருக்கடி கொடுக்கத் திட்டம்.

இப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கும்போது, தன்னுடைய உள்ளூர் எதிரியை எதிர்த்துப் போரிடுவதற்கே தன் மொத்த நேரத்தையும் எடப்பாடி செலவிடுவார். அப்போது மற்ற தொகுதிகளில் அவரால் கவனம் செலுத்துவது கடினமாக மாறும். இதன் மூலம் அவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் சேலத்திலேயே முடக்கி, மற்ற மாவட்டங்களில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அங்கே வெற்றியை எளிதாக்கலாம்.

மேலும், மாடர்ன் தியேட்டர் காலத்திலிருந்தே திரைத்துறைக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கும் ஒரு மாவட்டம் சேலம். கடந்த 2019 மக்களவை தேர்தலிலும்கூட இங்கே கமலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளன. மூன்றாவதாக ரஜினி போன்றவர்களும் செல்வாக்கு பெறுவதை தடுக்கும்விதமாக ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து, பிரத்யேகத் திட்டத்தின்படி செயல்படவும் முடிவெடுத்திருக்கிறது தலைமை.

`பரிசோதனையும் மருத்துவர்களின் அட்வைஸும்..!’ - எப்படி இருக்கிறார் ஸ்டாலின்?

5) டிஜிட்டல் அரசியல்

ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 13 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் கட்டாயம், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார். அவர், அந்த பூத்தில் நடக்கும் அத்தனை செயற்பாடுகளையும் சமூக வலைதளங்கள் மூலமாகப் பரவலாக்க வேண்டும்.

`ஆளும்கட்சி, ரஜினி உள்ளிட்டோரை ட்ரோல் செய்ய வேண்டும். கலாய்த்து மீம்களைப் பரப்ப வேண்டும். `கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்’ என முதல்வர் இ.பி.எஸ் சொன்னது போன்ற வீடியோ மீம்களை வைரலாக்க வேண்டும். ஒருபக்கம் எதிர்க்கட்சிகளின் ஆளுமையைக் காமெடி செய்யும் அதேநேரம், நமது கட்சித் தலைமையின் செயற்பாடுகளை புகழும் வகையில் வீடியோக்களை வைரலாக்க வேண்டும்’ என்றும் தலைமை உத்தரவிட்டு, இதைக் கண்காணிப்பதற்காகவே ஐடி அணியில் தனிக்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது இல்லாமல் ஒட்டுமொத்தமாக பூத் வாக்காளர்களிடம் பூத் கமிட்டி முன்னெடுத்த பரப்புரை உள்ளிட்ட அனைத்துக்குமான மினிட் நோட்ஸை, மாவட்டச் செயலாளர்கள் மூலமாக, 15 நாள்களுக்கு ஒருமுறை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது தலைமை.

இப்படியாக இந்த ஐந்து முக்கிய பிளான்கள் மூலம் ரஜினி போன்ற புதியவர்களைச் சமாளித்து, எங்கள் வாக்குகளைப் பெருக்கி வலிமையாக்கிக்கொள்ள முடியும்’’ என்கிறார்கள் தி.மு.க தலைமைக்கு நெருக்கமாக வலம்வரும் மூத்த உ.பி-க்கள்.

எப்படியும் வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் பகீரத முயற்சிகளைத் தொடரும் மு.க.ஸ்டாலினின் இந்த லேட்டஸ்ட் வியூகங்கள் எடுபடுமா என்பது மக்களின் கைகளில்தான் இருக்கிறது.

சரி, எதிர்க்கட்சியே இப்படியான திட்டங்களைப்போட, 10 ஆண்டுகளாக பவரில் இருக்கும் ஆளும்கட்சி என்ன செய்கிறார்கள்...குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டிருக்கும் ஸ்கெட்ச் என்ன... அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

அடுத்த கட்டுரைக்கு