Election bannerElection banner
Published:Updated:

`ஓட்டு வேணுமா... அப்போ ஒரு கல் தோசை போடுங்க’ - திமுக வேட்பாளரை தோசை சுடவைத்த மாஸ்டர்!

தோசை சுட்டு ஓட்டுக் கேட்கும் வேட்பாளர் பிரபாகர் ராஜா
தோசை சுட்டு ஓட்டுக் கேட்கும் வேட்பாளர் பிரபாகர் ராஜா

சென்னை விருகம்பாக்கத்தில், வாக்குச் சேகரிக்கச் சென்ற தி.மு.க வேட்பாளர் பிரபாகர் ராஜா திடீரென உணவகத்துக்குள் சென்று தோசை சுட்டார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், தி.மு.க சார்பில் பிரபாகர் ராஜா போட்டியிடுகிறார். இவரை வேட்பாளராக அறிவித்தவுடன் விருகம்பாக்கம் தொகுதியில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. அதன் பிறகு அதிருப்தி நிர்வாகிகளை கட்சித் தலைமை அழைத்து சமரசப்படுத்தியது. தற்போது வேட்பாளர் பிரபாகர் ராஜா, தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். சின்மயா நகர், வேதா நகர் பகுதியில் கட்சியினருடன் சென்று வேட்பாளர் பிரபாகர் ராஜா வாக்குச் சேகரித்தார்.

தோசை சுடும் வேட்பாளர் பிரபாகர் ராஜா
தோசை சுடும் வேட்பாளர் பிரபாகர் ராஜா

அப்போது அங்கிருந்த சிறிய உணவகத்துக்குள் அவர் சென்றார். கடைக்காரர்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்ட வேட்பாளர் பிரபாகர் ராஜா, திடீரென சமையல் மாஸ்டர் அருகே சென்று, மாஸ்டரைக் கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு தோசை சுடத் தொடங்கிவிட்டார். மாவை எடுத்து கல்லில் ஊற்றி வட்டமாகத் தேய்த்து, எண்ணெய் ஊற்றி சுடச்சுட ஒரு கல் தோசையைப் போட்டு எடுத்து, அங்கிருந்தவர்களிடம் `வாக்களியுங்கள்...’ என்று கூறிவிட்டு சிரித்தபடி புறப்பட்டார். பிரபாகர் ராஜா தோசை சுட்டு வாக்குச் சேகரித்த வீடியோ இணையத்தில் பரவியது.

`மொத்தம் ரூ.48 கோடி; பரம்பரைச் சொத்துகள் நோ!’ -ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் பின்னணி

இது குறித்து வேட்பாளர் பிரபாகர் ராஜாவிடம் பேசும்போது, ``இன்று காலை (23.3.2021) சின்மயா நகர், நெற்குன்றம் சாலையில் பிரசாரத்துக்கு சென்றபோது சேது உணவகத்தில் இருந்தவர்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கூறினேன். அப்போது வணிகர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசுவேன் என்று தெரிவித்தேன். உடனே அங்கிருந்த மாஸ்டர் `அப்படியென்றால் ஒரு கல் தோசை போட முடியுமா...’ என்று கேட்டார். அதைக் கேட்டதும் மாவை எடுத்து கல் தோசை ஊற்றினேன். விருகம்பாக்கம் தொகுதி மக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் இந்தத் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்றார்.

தோசை சுடும் பிரபாகர் ராஜா
தோசை சுடும் பிரபாகர் ராஜா

வேட்பாளர் பிரபாகர் ராஜா தோசை சுடுவதை அவருடன் சென்ற நிர்வாகிகள் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உதயசூரியனுக்கு ஓட்டு சேகரித்துவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கும் முறை டிரெண்டாகியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு