Published:Updated:

`விவசாயிகளுக்கான பச்சைத் துண்டு அல்ல; அது பச்சைத் துரோகத் துண்டு!' - மு.க.ஸ்டாலின்

மதுரை கூட்டத்தில் ஸ்டாலின், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர்
மதுரை கூட்டத்தில் ஸ்டாலின், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர்

`மத்திய அரசு காலால் இடும் கட்டளைகளைத் தலையால் செய்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு' என மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்.

மதுரை ஒத்தக்கடையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆயிரக்கணக்காணோர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. இதில் ராஜகண்ணப்பன் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிவிட்டு, ``அனைத்து மதத்தினருக்கும் அனைத்து சாதியினருக்கும் பொதுவான ஒரே தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்தான்" என்று பேசினார்.

மு.க. ஸ்டாலின் பேசும்போது,``கண்ணப்பன் தி.மு.க-வில்தான் இருக்கிறார் என இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். அந்தளவுக்கு அவரது செயல்பாடு இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கம் தி.மு.க. ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை மீட்டுத்தருவது தி.மு.க ஆட்சிதான். சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம், மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றியது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது, செல்போன் கட்டணம் குறைவு ஆகியவற்றுக்கு காரணம் தி.மு.கதான். அரசின் பெயரில் கடனை வாங்கி அதைக் கொள்ளையடிப்பதுதான் எடப்பாடி அரசின் சாதனை. தமிழகத்தின் நிதிநிலை கோமாவில் உள்ளது. அதை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்

ராஜகண்ணப்பன், ஸ்டாலின்
ராஜகண்ணப்பன், ஸ்டாலின்

தி.மு.க ஆட்சியில் 1 லட்சம் கோடி என்ற அளவில் இருந்த தமிழகத்தின் கடன் தற்போது 4.56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் சாதனை. கடன் வாங்கி கொள்ளை அடிக்கிறார்கள். மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு 3 வருடங்களாக ஜெயலலிதாவின் ஞாபகம் வரவில்லை. ஆனால், இப்போது அவரது பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ளார். அதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி இல்லை. பொள்ளாச்சி சம்பவம் மற்றும் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான எடப்பாடி ஆட்சிக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசத் தகுதி இல்லை. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை முழுமையாக விசாரிப்பதில்லை. குற்றவாளிகளை தப்பிக்க வைக்கின்றனர்.

பொள்ளாச்சி சம்பவத்தால் தங்களது ஊர் பெயரைக்கூட சொல்லமுடியாத நிலையில் பொள்ளாச்சி மக்கள் உள்ளனர். நானும் ஒரு பெண்ணுக்கு தந்தை என்ற முறையில் பொள்ளாச்சி சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும்கட்சியினர் தொடர்பிருந்ததால் காவல்துறை கண்டு கொள்ளவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் துணை சபாநாயகர் ஜெயராமனின் மகனுக்குத் தொடர்பு உள்ளது. அதனை வெளிப்படையாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். நான் வழக்கை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 12 மாதத்தில் தி.மு.க ஆட்சி அமையும். அப்போது, பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி என்று புதிதாக வேடமிட்டு வரும் எடப்பாடியை விவசாயிகள் நம்பமாட்டார்கள். விவசாய வேடமிடும் அவரது நகத்தில் மண் கறை அல்ல; ஊழல்கறைதான் உள்ளது. கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக இருந்துவிட்டு, விவசாயி என்று சொல்வதற்கு எடப்பாடி வெட்கப்பட வேண்டும். 3 ஆண்டுகள் சாதனை என்று கூறும் எடப்பாடி அரசு, மோடியிடம் மண்டியிட்டதால் விருதுகளைப் பெற்றுள்ளார்கள். மத்திய அரசு காலால் இட்ட கட்டளையை தலையால் செய்கிறது எடப்பாடி அரசு. 3 லட்சம் கோடி முதலீடு பெற்றது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

ஸ்டாலின்
ஸ்டாலின்
கூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டை கிழிப்பு... பன்னீர் பவ்யம்... நான்காம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 3 வருடங்களில் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எடப்பாடி ஆட்சிக்கு லஞ்சம், ஊழல், கொள்ளை, குட்கா வியாபாரம், துப்பாக்கி சூட்டுக்கு விருது வழங்கலாம். ஊழலுக்கான ஆட்சிதான் எடப்பாடி ஆட்சி, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல், கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்களா? டெல்டாவில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 400 திட்டங்கள் செயல்படும் என திட்டத்தில் குறிப்பிடும்நிலையில் அது எப்படி பாதுகாப்பு மண்டலமாக உருவாகும். இது முட்டாள்தனமானது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்யும் கபட நாடகம். டெல்டா பாதுகாப்பு மண்டலத் திட்டத்துக்காக பேரவையில் இருந்து நாங்கள் வெளியேறியதாக ஊடகங்கள் தவறாகக் கூறுகின்றன. டெல்டா மண்டலத்தை ஆதரிக்கிறோம் அதை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் குறித்து கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்து பின் பேரவைக்கு வந்துவிட்டோம். எடப்பாடி அணிந்தது விவசாயிகளுக்கான பச்சை துண்டு அல்ல; அது பச்சைத் துரோக துண்டு. விரைவில் அது வெளிச்சத்துக்கு வரும். ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த தமிழன்னை சிலை உள்ளிட்ட திட்டங்களை எடப்பாடி அரசு செயல்படுத்தவே இல்லை. அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்-ன் நிலை என்ன? அறிவிப்பு பலகையைக்கூட காணவில்லை" என்று ஸ்டாலின் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு