Published:Updated:

இட ஒதுக்கீடு: `நாங்கள் எதிர்க்கட்சி; அரசியல்தான் செய்வோம்!’ - முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

ஸ்டாலின்
ஸ்டாலின்

``நாங்கள் எதிர்க்கட்சி; அரசியல்தான் செய்வோம். நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட சொன்னேன், `நாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்' என்று..'' - ஸ்டாலின்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு, `நாங்கள் எதிர்க்கட்சி; அரசியல்தான் செய்வோம்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

சென்னை. கொளத்தூரில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகி முரளிதரன் இல்லத் திருமணவிழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண விழா மேடையில் மைக் பிடித்தார் ஸ்டாலின். ``இன்றைக்கு நாட்டின் சூழ்நிலை எப்படியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்படிப்பட்ட ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஆட்சிக்கு அடிமையாக, கூனிக்குறுகி இன்றைக்கு ஒரு சேவகனாக அடிமைத்தனமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

`அரசியல் ஆதாயம்; மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்!’ - ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி

தமிழக ஆளுநர், ஓர் அனுமதி தருவதிலுள்ள சிக்கல் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். நேற்று முன்தினம் மிகப்பெரிய போராட்டத்தை சென்னையில் நடத்தினோம். எதற்காக என்றால், ஏழை - எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு என்னென்ன இடர்ப்பாடுகளையெல்லாம் தந்திட வேண்டுமோ - நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவப் படிப்பை பாழ்படுத்தி வருகிறார்களோ - அவற்றை ஓரளவுக்குச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகப் போராடினோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை, நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு அரசிடம் தந்திருந்தாலும், அதையும் இந்த ஆட்சி குறைத்து 7.5 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதை மசோதாவாக நிறைவேற்றி, ஏகமானதாகச் சட்டமன்றத்தில் தி.மு.க உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் அதை ஆதரித்து ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். அனுப்பிவைத்து ஏறக்குறைய நாற்பது நாள்கள் ஆகிவிட்டன. ஆளுநர் இன்னும் அதற்கு ஒப்புதல் தரவில்லை. தருவார், தருவார் என்று காத்திருந்தும் அவர் அனுமதி தரவில்லை.

``எதை எப்போ பிரிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்..!” - சீறிய ஸ்டாலின்; அடங்கிய நிர்வாகி!

இங்கிருக்கும் அமைச்சர் பெருமக்கள் ஆளுநரைச் சந்தித்துக் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் என்பதை அமைச்சர்கள் வெளியில் சொல்லவில்லை. அதற்குப் பிறகு நானே ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன்.`7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள்’ என்று கடிதம் அனுப்பினேன். அதற்கு ஆளுநர் அனுப்பிய பதிலில், ``நீங்கள் சொன்னதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அது குறித்துப் பரிசீலித்துத்தான் முடிவெடுக்க முடியும். முடிவெடுக்க நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும்” என்று எழுதியிருந்தார்.

எப்படியாவது காலம்தாழ்த்தி இதை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக்கிறார். அதைக் கண்டித்து, அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் இந்த ஆட்சியைக் கண்டித்து சென்னையில் நேற்று முன்தினம் மாபெரும் போராட்டத்தை நடத்திக்காட்டியிருக்கிறோம். அதைக்கூட முதலமைச்சர் பழனிசாமி, `தி.மு.க இந்தப் பிரச்னையில் அரசியல் செய்கிறது, ஸ்டாலின் அரசியல் செய்கிறார்’ என்று சொல்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாங்கள் எதிர்க்கட்சி; அரசியல்தான் செய்வோம். நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட சொன்னேன், `நாங்கள் அரசியல் செய்யாமல், அவியலா செய்வோம்’ என்று. தயவுசெய்து சிந்தித்துப்பாருங்கள். இன்று அ.தி.மு.க-வின் கொள்கை என்ன?கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, கமிஷன் கேட்பது. நம்முடைய கொள்கை என்ன? நாட்டுக்காகப் பாடுபடுவது, நாட்டு மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவது, உரிமைகளை மீட்கப் போராடுவது. இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான். அதை நீங்கள் நல்லவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று ஸ்டாலின் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு