Published:Updated:

`இந்தப் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்தேன்' - வெளிநாட்டுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்த ஸ்டாலின்

கலிலுல்லா.ச

`நம் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும். ஸ்டாலின் என்ற பெயர் வைத்த காரணத்தால் நான் பல சங்கடங்களை அனுபவித்தேன்.’

Stalin
Stalin

சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் தி.மு.க பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணவிழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் தி.மு.க-வினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கள் வாயை அடக்காவிட்டால், தி.மு.க தொண்டர்கள் அவர்களை அடக்க வேண்டிவரும். அதுமட்டுமன்றி, அமைச்சர் ஜெயக்குமார் உடம்பில் ஓடுவது தி.மு.க ரத்தம்தான்.

Dmk chief
Dmk chief

அன்றைக்கு அவர் குடும்பத்துக்கு தி.மு.க உதவி செய்யாமல் இருந்திருந்தால், இன்று அவர் மீன்தான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே, தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களே எங்களைக் கொஞ்சம் இயல்பாக விடுங்கள், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கத்தான் வேண்டும், அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று பேசினார். இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், ``தமிழ் இனத்துக்கு சோதனைக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, நம் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

தி.மு.க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கருணாநிதி தமிழில்தான் பெயரை வைத்துள்ளார். ஸ்டாலின் என்ற பெயர் வைத்த காரணத்தால் நான் பல சங்கடங்களை அனுபவித்தேன். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றபோது, விமானநிலைய அதிகாரிகள் என் பெயரைக் கேட்டதும் ஒரு நிமிடம் என்னை உற்றுப்பார்த்தனர். சர்ச் பார்க் பள்ளியில் என்னை சேர்க்க வேண்டும் என்று முயற்சி செய்தபோது, என் சகோதரர்களை மட்டும் பள்ளியில் அனுமதித்தனர். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை.

Stalin
Stalin

அப்போது கலைஞர் கூறினார், `பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன், பெயரை மாற்ற மாட்டேன்'. மீண்டும் முதல்வர் வெளிநாடு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லட்டும் எங்களுக்குக் கவலையில்லை. ஜெயலலிதா ஆட்சி, எடப்பாடி ஆட்சி என இருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவற்றில் பெற்ற முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கைதான் கேட்கிறோம்.

அதற்கு ஒரு அமைச்சர், `வெள்ளை அறிக்கையும் வெள்ளரிக்காயும் தருகிறோம்' எனக் கூறுகிறார். நான் பாராட்டத்தேவையில்லை என்கிறார் முதல்வர். `சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’. முதல்வரே இதை ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்கிறார். நான் வெளிநாட்டுக்குச் சென்றேன். முதலீடுகளை ஈர்க்க அல்ல, ஜப்பான் நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்டவற்றுக்காகச் சென்றோம்.

dmk chief - tn chief minister
dmk chief - tn chief minister

ஆனால் இவர்கள், இருக்கும் ஓராண்டில் அனைத்து வெளிநாடுகளுக்கும் சென்றுவிட வேண்டும் என்கிற நோக்கில் சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். அதுமட்டுமன்றி மோடி வெளிநாடு செல்வது போன்று தாங்களும் செல்ல வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் செல்கின்றனர். எனவே, இது அனைத்தையும் மக்கள் கருத்தில் கொண்டு வரும் தேர்தல் நேரத்தில் உண்மையின் பக்கம் இருக்க வேண்டும் என்றார். தி.மு.க ஆட்சியில் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் கிடையாது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் இது மூன்றும் உள்ளன” என்றார்.