Published:Updated:

` பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு?!'-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்

ஸ்டாலின்

பொன்முடி, கே.என்.நேரு ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், பேராசிரியர் வெளியிட்ட அறிவிப்புதான்.

` பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு?!'-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்

பொன்முடி, கே.என்.நேரு ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், பேராசிரியர் வெளியிட்ட அறிவிப்புதான்.

Published:Updated:
ஸ்டாலின்

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறார், பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன். ` இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கட்சியின் சட்டவிதிகளைத் திருத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. புதிய பதவிகளை எதிர்நோக்கியும் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் தோல்வியைச் சந்தித்துள்ள சூழலில், இந்தப் பொதுக்குழுவை முக்கியமானதாகப் பார்க்கின்றனர் உடன்பிறப்புகள். தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல், கழக சட்டவிதிகளில் மாற்றம் என முக்கியமான விஷயங்களை உள்ளடக்கி, பொதுக்குழுவை நடத்தவிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` தி.மு.க இளைஞரணிச் செயலாளராகக் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி பொறுப்பேற்றார், உதயநிதி ஸ்டாலின். அவருக்குப் புதிய பதவி கொடுக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியானது. அதற்கு, இந்தப் பொதுக்குழுவில் உரிய அங்கீகாரம் பெறப்பட இருக்கிறது" என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், `` தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கட்சிக்குள் போட்டி ஏற்பட்டது. ஸ்டாலின் வகித்துவந்த பொருளாளர் பதவி, சீனியர் என்ற அடிப்படையில் துரைமுருகனுக்கும் தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் பதவி டி.ஆர்.பாலுவுக்கும் வழங்கப்பட்டது. `இந்தப் பதவிகளில் ஏதாவது ஒன்று வந்துசேரும்' என எதிர்பார்த்திருந்தனர் எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோர். அதேநேரம், பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை முன்புபோல ஒத்துழைப்பதில்லை. உடல்நலிவால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

பேராசிரியர் அன்பழகன்
பேராசிரியர் அன்பழகன்

ஆனால், அவர் பெயரில் அறிக்கைகள் மட்டும் வந்து கொண்டிருக்கின்றன. பேராசிரியர் வகித்துவரும் பதவி துரைமுருகனுக்குக் கொடுக்கப்பட்டால், தலைமையின் குட்புக்கில் இருக்கும் எ.வ.வேலு, பொருளாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மேலும், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்குப் பிரதான காரணம், பேராசிரியர் வெளியிட்ட அறிவிப்புதான். அவரது அறிவிப்பில், பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான காரணங்களாக 3 விஷயங்களை முன்வைத்திருக்கிறார். அதில், 1. கழக ஆக்கப் பணிகள், 2. கழக சட்டதிட்ட திருத்தம், 3.தணிக்கைக்குழு அறிக்கை என வகைப்படுத்தியிருக்கிறார். கழக சட்டதிட்ட திருத்தம் என்பது துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத்தான் என்ற தகவலும் வலம்வருகிறது.

அதேநேரம், ` கலைஞர் உயிருடன் இருந்தவரை கழகத் தலைவர் பதவி, அவரிடமே இருந்தது. அதேபோல், பொதுச்செயலாளர் பதவியும் பேராசிரியர் வசமே இருக்கட்டும். அவர் இருக்கும் வரை அந்தப் பதவியை வேறு ஒருவருக்குத் தருவது நல்லதல்ல' என்ற மனநிலையில் இருக்கிறார் ஸ்டாலின். ` படுத்த படுக்கையாக இருப்பவரிடமிருந்து அறிக்கை மட்டுமே வருவது விமர்சனங்களை ஏற்படுத்தாதா?' என்ற குரல்களும் அறிவாலயத்தில் கேட்கின்றன" என்கின்றனர் விரிவாக.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பொதுக்குழுக் கூட்டத்தின் நோக்கம்குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், 'விக்கிரவாண்டித் தொகுதியில் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதை தலைமையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `இப்படியொரு தோல்வி ஏன் ஏற்பட்டது?' என சி.ஐ.டி காலனி வீட்டில் ஆலோசனை நடந்தபோது, ` இடைத்தேர்தலில் பணம் விளையாடும். ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தால் தேர்தல் நேர்மையாக நடக்காது எனக் கூறி, நாம் தேர்தலைப் புறக்கணித்திருக்க வேண்டும். ஆளுநரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்' என சீனியர் ஒருவர் பேசியிருக்கிறார். இந்தப் பதிலை எதிர்பார்க்காத ஸ்டாலின், ` இதையெல்லாம் இப்போதுதான் வந்து சொல்ல வேண்டுமா... தேர்தல் தேதி அறிவித்தபோது ஏன் இப்படியொரு யோசனை உங்களுக்கு வரவில்லை' எனக் கொந்தளித்தார்.

இடைத்தேர்தல் தோல்விகுறித்து பொதுக்குழுவில் அனல் பறக்கும் விவாதம் ஏற்பட உள்ளது. அதில், பொன்முடியின் தேர்தல் அணுகுமுறை குறித்தும் நிர்வாகிகள் குறைகளைத் தெரிவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ள சூழலில், புதிய பதவிகளை நிரப்புவதற்கான மனநிலையில் தலைமை இல்லை. கட்சியின் சட்டதிட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர். அதுவும், பதவிகளை நோக்கியதாக இருக்க வாய்ப்பில்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஆளும்கட்சியின் அதிகாரத்தை மீறி வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகளைப் பொதுக்குழுவில் ஆலோசிக்க உள்ளனர்" என்றார் இயல்பாக.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

`` பொதுக்குழு கூட்டம், தலைவர், இளைஞரணிச் செயலாளர் ஆகியோரின் புகழ்பாடும் கூட்டமாக இல்லாமல், அனைவருக்கும் பேச வாய்ப்பளித்தால், அது ஜனநாயகபூர்வமான ஒன்றாக இருக்கும். துதிப்பாடல்களைக் குறைத்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கும்விதமாக பொதுக்குழு அமைய வேண்டும்" எனவும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் உடன்பிறப்புகள்.