Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியது ஏன்?' - விளக்கம் சொல்லும் ஸ்டாலின்

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவற்றுக்கான வரையறை எந்த நிலையில் இருக்கிறது என்ற விளக்கத்தை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடலூர் வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினார். சில தினங்களுக்கு முன்பு கம்மியம்பேட்டையில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 பேரின் வீட்டுக்குச் சென்று அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

மேலும், தி.மு.க சார்பில் நிவாரண நிதியாக 1,00,000 ரூபாயை வழங்கினார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடும்போதுதான் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகத் தொடங்கியது.

தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதால் நிவாரணப் பணிகளை அவசர அவசரமாக முடித்துக்கொண்ட ஸ்டாலின், சென்னைக்குத் திரும்பினார். அப்போது புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.க அரசு கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது. தோல்வி பயத்தின் காரணமாகக் காலத்தைக் கடத்தி வந்தனர்.

மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் ஸ்டாலின்
மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் ஸ்டாலின்

தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் வேறு வழியில்லாமல் தற்போது கடமைக்காகத் தேர்தலை நடத்த அ.தி.மு.க அரசு முன்வந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை தடை செய்யச் சொல்லி யாராவது நீதிமன்றத்தை அணுகுவார்கள்.

நீதிமன்றமும் தடை உத்தரவை வழங்கிவிடும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க-வும் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையமும் ஒன்றிணைந்து இந்த தேதியை அறிவிக்க முன்வந்திருக்கிறார்கள். ஆனால், தேர்தல் முறையாக நடக்கவில்லை, வரையறைகள் முறையாக செய்யப்படவில்லை. எஸ்.சி, எஸ்.டி, பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையாக நிறைவேறவில்லை அவற்றையெல்லாம் முறைப்படுத்திட வேண்டும் என்றுதான் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்களும் நீதிமன்றதுக்குச் சென்றோமே தவிர, தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் ஸ்டாலின்
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் ஸ்டாலின்

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள் வரை தி.மு.கதான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திட்டமிடுகிறது என்ற தவறான பொய் பிரசாரத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

`காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்!' - பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவற்றுக்கான வரையறை எந்த நிலையில் இருக்கிறது என்ற விளக்கத்தை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு இதுவரை எந்தப் பதிலும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து பலமுறை மனுக்களைத் தந்திருக்கிறார்கள். அதன்பிறகும் முறையாக விளக்கம் வராத காரணத்தால் நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் ஒரேகட்டமாகத்தான் இதுவரை நடந்திருக்கிறது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலும் ஒரேகட்டமாகத்தான் நடந்திருக்கிறது.

கடலூர் மழை
கடலூர் மழை
எஸ்.தேவராஜன்

ஆனால், இப்போது ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடத்திவிட்டு, அதற்கடுத்து பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்போவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தின் தேர்தல் ஆணையர் பழனிசாமியா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்று சந்தேகமாக இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேசியிருக்கிறோம். அதேபோல மூத்த வழிக்கறிஞர்களிடம் ஆலோசித்துவிட்டு நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் அறிவிப்போம்” என்றார்.