Published:Updated:

'திமுக அரசின் இரண்டாண்டுக்கால ஆட்சி' - நாடாளுமன்றத் தேர்தலுக்கு கைகொடுக்குமா?!

தி.மு.க - ஸ்டாலின்

தி.மு.க தனது இரண்டாண்டுக்கால ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு கைகொடுக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது?!

Published:Updated:

'திமுக அரசின் இரண்டாண்டுக்கால ஆட்சி' - நாடாளுமன்றத் தேர்தலுக்கு கைகொடுக்குமா?!

தி.மு.க தனது இரண்டாண்டுக்கால ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு கைகொடுக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது?!

தி.மு.க - ஸ்டாலின்

தி.மு.க கடந்த 7-ம் தேதியுடன் தனது இரண்டாண்டுக்கால ஆட்சியை நிறைவுசெய்திருக்கிறது. இதையடுத்து அந்தக் கட்சியினர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்துவருவதாக சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார்கள். குறிப்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். "தமிழகத்தில் சாதிச்சண்டை இல்லை, துப்பாக்கிச்சண்டை இல்லை, சாதி - சமய பூசல் ஏதுமின்றி மாநிலம் அமைதியாக இருக்கிறது.

தி.மு.க - ஸ்டாலின்
தி.மு.க - ஸ்டாலின்

இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக தி.மு.க-தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவோடு முடிவுசெய்துவிட்டார்கள். அந்த வகையில் தி.மு.க ஆட்சி நடத்திவருகிறது" என தெரிவித்திருந்தார். ஆனால், மறுபுறம் தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சியை எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துவருகிறார்கள்.

இதற்கு அவர்கள், 'நீட் தேர்விலிருந்து விலக்கு பெறாதது, சொத்துவரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேங்கைவயல் விவகாரம், 12 மணி நேர வேலைக்குச் சட்டம் கொண்டுவந்தது, பழைய ஓய்வூதியத் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்துகிறார்கள். இதற்கிடையில்தான் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, இந்த இரண்டாண்டுக்கால ஆட்சி தி.மு.க-வுக்குக் கைகொடுக்குமா... என்ற கேள்வியெழுகிறது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய தி.மு.க கூட்டணி அப்படியே இருக்கும். 2019-லிருந்து வெற்றியைப் பார்த்து வருகிறார்கள். எனவே, எந்த மாற்றமும் இருக்காது. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை பா.ஜ.க-வுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை வரும்.

பின்னர் சரியாகிவிடும். ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் எடப்பாடியுடன் இணைந்துவிடுவார்கள். தி.மு.க தேர்தலின்போது பெண்களுக்கான உரிமைத்தொகை, இலவசப் பயணத் திட்டம் போன்றவற்றைச் சாதனையாகக் கூறி வாக்கு கேட்பார்கள். இருந்தாலும் அரசுக்கு எதிரான மனோபாவம் இருக்கிறது. அது தேர்தலில் கடந்த ஆண்டைவிட 5% குறைய வாய்ப்பிருக்கிறது. மோடிக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் இருக்கிறது. அந்த வாக்கு தி.மு.க-வுக்குச் செல்லும்.

பிரியன்
பிரியன்

இதற்கிடையில், தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்துவிட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் தி.மு.க ஃபைல் என்ற ஒன்றை அண்ணாமலை வெளியிட்டார். வரும் காலங்களில் தி.மு.க-வின் ஊழல்களை அவர்கள் வெளியில் கொண்டுவருவார்கள். அதன் மூலம் தி.மு.க-வின் பெயரைக் கெடுக்க முடியுமா... என்று திட்டம் வகுப்பார்கள். அதையெல்லாம் தாண்டிதான் தி.மு.க வெற்றிபெற வேண்டும்.

எனவே, கடந்த முறையைப்போல் 38 இடங்களில் வெற்றிபெற முடியாது. ஆனால், 35 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இந்த இரண்டாண்டுக்கால ஆட்சியில் அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் சமூக வலைதளங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்களிடம் எடுபட்டதுபோல் தெரியவில்லை. ஸ்டாலின் இமேஜ் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதைச் சிதைக்கத்தான் தற்போது வருமான வரித்துறை சோதனை போன்றவை நடக்கின்றன.

துரை கருணா
துரை கருணா

ஆனால் சிறுபான்மையினர், பட்டியலினத்தவரின் வாக்கு தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது. மோடிக்கு எதிரான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும். தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், அதுவும் ஒரு பலமாக அமையும். ஒருவேளை ஊழல் குற்றச்சாட்டுக்களில் தி.மு.க-வினரை மத்திய அரசு கைதுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அது மேலும் தி.மு.க-வுக்கு அனுதாபத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.

சொத்துவரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேங்கைவயல் விவகாரம், 12 மணி நேர வேலைக்குச் சட்டம் கொண்டுவந்தது, பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. இது தற்போது பேசப்பட்டுவருகிறது. ஆனால், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலின்போது அது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு" என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, "தற்போதைய கூட்டணி வரும் தேர்தலில் அப்படியே நீடித்தால் ஆரோக்கியமான வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் கூட்டணியில் 12 கட்சிகள் இருக்கின்றன. அவர்களது வாக்கு அப்படியே கிடைக்கும்.

இந்த இரண்டாண்டுக்கால ஆட்சியில் 12 மணி நேர வேலை, அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க ஃபைல்ஸ் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தின. இது படித்தவர்கள், செய்தித்தாள் படிக்கிறவர்கள் மத்தியில்தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடிமட்ட வாக்காளர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடுவார்கள். மறுபுறம் அ.தி.மு.க நான்கு அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றன. அவர்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவருகிறார்கள்.

இதுவும் தி.மு.க-வுக்கு பலமாக அமையும். தற்போது நடக்கும் வருமான வரித்துறை சோதனைகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது தி.மு.க-வுக்குத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். இது தவிர, தி.மு.க அமைச்சர்களின் பொதுவெளி பேச்சு, உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகள், கட்சியினரின் அத்துமீறல்கள் பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை
ட்விட்டர்

இது நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஆனால், சட்டசபையில் தாக்கத்தை ஏற்படுத்தும். யார் பிரதமர் வேட்பாளர் என்பதிலும் சிக்கல் நிலவுகிறது. மேலே எப்படிக் கூட்டணி அமைகிறதோ, அது நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு வெற்றியிலும் பிரதிபலிக்கும்" என்றார்.