Election bannerElection banner
Published:Updated:

தி.மு.க - காங்கிரஸ்: இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்த `போன் கால்'!

காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்
காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்

இழுபறி நீடித்துவந்த நிலையில், தி.மு.க - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்நிலையில், தேசியக் கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என மும்முரமாகப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க-வில் அங்கம்வகிக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, தொடர்ந்து இழுபறியில் இருந்த நிலையில், ஞாயிறு (7-3-21) காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - காங்கிரஸ் உடன்படிக்கை கையெழுத்தானது. 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்திருக்கிறது தி.மு.க.

காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிய நாளிலிருந்தே, காங்கிரஸுக்கு, தி.மு.க ஒதுக்குவதாகக் கூறிய தொகுதிகளின் எண்ணிக்கையில் காங்கிரஸ் அதிருப்தியில் இருந்தது. காங்கிரஸ் கேட்ட 30 தொகுதிகளை வழங்க தி.மு.க தலைமை இறங்கி வராததால், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் தொடர்ந்து மூன்று நாள்கள் காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்துப் பரபரப்பாக விவாதித்துவந்தனர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. `கூட்டணியைவிட சுயமரியாதை முக்கியம்’ என்று கே.எஸ்.அழகிரி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இந்தநிலையில்தான் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியிருக்கிறது.

தொகுதிப் பங்கீட்டு இழுபறி திடீரென முடிவுக்கு வர டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் நடந்த தொலைபேசி உரையாடல்தான் காரணம் என்கின்றனர். மார்ச் 6-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பின்னரே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டிருக்கிறது. சோனியா காந்தியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார் ஸ்டாலின்.

அதன் பின்னர்தான் மார்ச் 6-ம் தேதி இரவு மு.க.ஸ்டாலினின் வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் காங்கிரஸ் நிர்வாகிகள். பேச்சுவார்த்தைக்கு பின், காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்தது என அறிவித்தனர் .

தேர்தல் 2021: பிடியை இறுக்கும் தி.மு.க... 2011, 2016-ல் காங்கிரஸ் செய்ததும், 2021-ல் தவறியதும்?!

மார்ச் 7-ம் தேதி காலை அண்ணா அறிவாலயம் வந்த காங்கிரஸ் தலைவர்களை நுழைவு வாயிலுக்கே வந்து தி.மு.க தலைவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். 25 சட்டமன்றத் தொகுதிகளையும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது . ஒரு ராஜ்யசபா இடம் வழங்குவது குறித்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இழுபறியில் இருந்துவந்த பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி முக்கியப் பங்குவகித்திருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை கனிமொழி பேசி முடித்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீடு பணியைச் சுமுகமாகச் செய்து முடித்திருக்கிறார். இதுவரை தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை எதிலும் இடம்பெறாத கனிமொழி, தி.மு.க-காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு