தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயராக சண்.ராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பதவி வகித்துவருகின்றனர். மேயர் உள்ளிட்டவர்கள் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு, முதல் மாமன்றக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகத்தின் அக்கா மகன் அண்ணா.பிரகாஷ் 16-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்துவந்தார். அவர் தன்னுடைய வேட்புமனுவில் ஒப்பந்தக்காரரான தன் தம்பி ராம்பிரசாத் அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்துவருவதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாகப் புகார் எழுந்தது.

விதிப்படி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுபவர்கள், அவர்களின் ரத்த உறவுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மாநகராட்சி சார்பில் ஆதாயம் அடையக்கூடிய பணிகள் மற்றும் செயல்கள் எதிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. இதை அண்ணா.பிரகாஷ் மறைத்துவிட்டதாகக் கூறி, அவர் கவுன்சிலர் பதவியைத் தன்னியல்பாகவே இழந்துவிட்டதாகவும் ஆணையர் சரவணக்குமார் கடிதம் அனுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதனால் கவுன்சிலர் பதவியை இழந்துள்ள அண்ணா.பிரகாஷ் அதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைவைத்து அவர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அண்ணா.பிரகாஷ் ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்பட்டுவருவது தி.மு.க மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்தோம். ``மாநகராட்சி ஆணையர், அண்ணா.பிரகாஷ் கவுன்சிலராக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகக் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ-வும், தாய்மாமாவுமான நீலமேகத்தின் மூலமாக ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் அண்ணா.பிரகாஷ் முறையிட்டார். அதற்கு அவர்கள், `இதை நீங்க சட்டரீதியாக எதிர்கொள்ளுங்க' என்று சொல்லிவிட்டார்கள். இதையடுத்துதான் அண்ணா.பிரகாஷ், ஆணையர் சரவணக்குமாருக்கு எதிராகவும், தன்னைத் தொடர்ந்து கவுன்சிலராக பதவி வகிப்பதற்கு உத்தரவிடும்படியும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தச் சூழ்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தஞ்சாவூர் வந்துள்ளார். இது தொடர்பாக டி.கே.ஜி.நீலமேகம், அண்ணா.பிரகாஷ் ஆகியோர் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்துப் பேசவுள்ளனர். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கவுன்சிலர் பதவியை இழந்துள்ள அண்ணா.பிரகாஷ் நாளை நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டால் பெரிய அளவில் கவனத்தைப் பெறும் என்பதால் அதற்கான முயற்சியில் இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.

இது குறித்து அண்ணா.பிரகாஷிடம் பேசினோம். ``ஆணையர் சரவணக்குமாருக்கு என்னை கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் கிடையாது. ஆனால் அவர் நான் கவுன்சிலர் பதவியை இழந்துவிட்டதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதை எதிர்த்தும், நான் தொடர்ந்து கவுன்சிலராகப் பதவி வகிக்க உத்தரவிடக் கோரியும், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன். வேட்புமனு பரிசீலனையின்போதே என் மனுவை நிராகரித்திருக்கலாம். வெற்றிபெற்றதற்கான சான்றிதழைப் பெற்றபோதோ, பதவியேற்றுக்கொண்டபோதோ அல்லது மேயர், துணை மேயருக்கான மறைமுக வாக்கெடுப்பில் நான் ஓட்டுப் போடும்போதோ என்னைத் தகுதிநீக்கம் செய்திருக்கலாம்.
அப்போது செய்யாமல் ஆணையர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்போது எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஏற்கெனவே எனக்குக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான நோட்டீஸும் வந்திருக்கிறது. அதைவைத்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முயற்சி மேற்கொண்டுவருகிறேன். நான் கலந்துகொண்டால் சலசலப்பு ஏற்படும். என்னால் தி.மு.க-வின் பெயர் கெடக் கூடாது என நினைக்கிறேன். இதைத் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். கட்சி என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன், அத்துடன் ஆணையர் உத்தரவைச் சட்டரீதியாகச் சந்திப்பேன்" என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``மாமன்ற கூட்டத்துக்கான கடிதத்தை முன்கூட்டியே மேயர் அனுப்பியிருந்தார். அதன் பிறகு கவுன்சிலராகப் பதவி வகிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகக் கூறி ஆணையர் கடிதம் அனுப்பினார். கூட்டத்துக்கு வரும் கவுன்சிலர்கள் கையெழுத்திடுவதற்கான வருகைப் பதிவேட்டில் அண்ணா. பிரகாஷ் பெயர் இடம்பெறவில்லை. அதனால் அவரால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. தகுதிநீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஆணையருக்குக் கிடையாது என அண்ணா.பிரகாஷ் கூறிவருகிறார். நீதிமன்றம் உத்தரவிடும்போது ஆணையர் செய்தது சரிதான் என்பது தெரியும்" என்றனர்.