Published:Updated:

``ஊருக்குத்தான் உபதேசம்" - பாஜக தேர்தல் வாக்குறுதியை விமர்சிக்கும் திமுக!

இமாச்சல் தேர்தலையொட்டி பா.ஜ.க அறிவித்திருக்கும் வாக்குறுதிகள், 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை' என்ற நிலையில் இருப்பதாக தி.மு.க விமர்சித்திருக்கிறது.

``ஊருக்குத்தான் உபதேசம்" - பாஜக தேர்தல் வாக்குறுதியை விமர்சிக்கும் திமுக!

இமாச்சல் தேர்தலையொட்டி பா.ஜ.க அறிவித்திருக்கும் வாக்குறுதிகள், 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை' என்ற நிலையில் இருப்பதாக தி.மு.க விமர்சித்திருக்கிறது.

Published:Updated:

இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக ஜெய்ராம் தாகூர் இருக்கிறார். சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி 8-ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில், இமாச்சலதுக்கான  சட்டசபைத் தேர்தல்  தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி மொத்தமிருக்கும் 68 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்தத் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனால்  அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. மீண்டும்  ஆட்சியைப்  பிடிக்க பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டுவருகின்றன. மூன்று கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். 

தேர்தல்
தேர்தல்

அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், '16 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500  உதவித்தொகை வழங்கப்படும். வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வீடு ஒன்றுக்கு நான்கு மாடுகள் வாங்க மானியம் வழங்கப்படும்' என்பவை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த நிலையில், தனது பங்குக்கு பா.ஜ.க-வும் ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது. அதில், 'அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். வறுமைக்  கோட்டுக்குக் கீழ் இருக்கும் பெண்களின் குடும்பங்களுக்குத்  திருமணத்தின்போது வழங்கப்படும் நிதியுதவி ரூ.31,000-லிருந்து ரூ.51,000-ஆக உயர்த்தப்படும்.  

சைக்கிள்
சைக்கிள்

6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள், உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி  வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ரூ.25,000 நிதி உதவி வழங்கப்படும். 12-ம் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பா.ஜ.க-வின் இந்த அறிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா  சார்பில் 'இலவசங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்ததே காரணம். இதுபோல் தொடர்ந்து அந்தக் கட்சி அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகளைக் கடுமையாக எதிர்த்துவந்தது குறிப்பிடத்தக்கது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "பா.ஜ.க-வைப் பொறுத்தவரைக்கும் `ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கும் எனக்கும் இல்லை' என்ற நிலைதான். அவர்கள் சொல்லக்கூடிய அனைத்து உபதேசங்களும் மற்றவர்களுக்குத்தான். அவர்களுக்கு இல்லை. இங்கு இலவசம் கொடுக்கக் கூடாது என்பார்கள். ஆனால், குஜராத்தில் வழங்குவார்கள். பா.ஜ.க மாலையில் பேசுவது காலையில் இருக்காது" என்றார்.