Published:Updated:

“துரைசாமியை கலைஞரிடம் அறிமுகப்படுத்தியதே நான்தான்!”

அந்தியூர் செல்வராஜ் அதிரடி

பிரீமியம் ஸ்டோரி
ஏற்கெனவே ராஜ்ய சபா சீட்... இப்போது கழக துணைப் பொதுச்செயலாளர் பதவி என அடுத் தடுத்த சில மாதங்களில் தி.மு.க-வில் அந்தியூர் செல்வராஜின் ‘கிராஃப்’ ஏறத் தொடங்கியிருக் கிறது. டபுள் உற்சாகத்தில் இருந்தவரிடம் பேசினோம்.

“அடுத்தடுத்த பதவிகள் கிடைப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கழக துணைப் பொதுச்செயலாளர் பதவி, நான் கனவிலும் எதிர்பார்க்காதது. அமைச்சர் பதவியைவிட, எம்.பி பதவியைவிட கட்சிப்பதவி கிடைத்ததில்தான் எனக்கு மகிழ்ச்சி. செயற்குழு, பொதுக்குழு நடக்கும்போது நானும் தலைவருடன் மேடையில் இருப்பேன் என்பது எவ்வளவு பெரிய சமாசாரம்!”

“பட்டியல் சமூக மக்களின் வாக்குகளை வளைக்கவே உங்களுக்குப் பதவிகள் கொடுக்கப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே?”

“இருக்கலாம். அது ஒன்றும் தவறு இல்லையே. கொங்கு மண்டலத்தில் 41 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கட்சிரீதியாக 14 மாவட்டங்கள். இந்தப் பகுதிகளில் அருந்ததியர்கள் அடர்த்தியாக இருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் தகுதி இவர்களுக்கு இருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஆனால், ‘பட்டியல் சமூகத்தினருக்கு தி.மு.க முக்கியத்துவம் கொடுக்காததுதான் கொங்கு மண்டலத்தின் தொடர் தோல்விக்குக் காரணம்’ என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஆரம்பத்தில் அப்படி இருந்தது. அதற்காகத்தான் 1988-ல் கோவையில் மாநாடு போட்டு, ‘எங்கள் சமுதாயத்துக்கு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு பட்டியல் சமூகத்தினருக்கு அதிக அளவில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. பொறுப்பில் இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் கட்சி வளரும். இன்னும் இறங்கிப்போய் வேலை செய்தால் பெரிய வெற்றியைப் பெற முடியும்.”

“உங்களுக்குக் கட்சியில் ராஜ்ய சபா சீட் கொடுத்ததுதான் வி.பி.துரைசாமியின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்களே?”

‘‘1988-ல் நான் கோவையில் மாநாடு போட்ட பிறகுதான் வி.பி.துரைசாமி கட்சிக்கே வந்தார். ‘உங்க கட்சியில் சேர்ந்தா நல்லாயிருக்கும்; தலைவர்கிட்ட அறிமுகம் செஞ்சுவைங்க’ என்று என்னிடம் கேட்டார். அவரை கலைஞரிடம் அறிமுகப்படுத்தி, கட்சியில் சேர்த்துவிட்டேன்.’’

“1984-ம் ஆண்டிலேயே ராசிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக வி.பி.துரைசாமி போட்டி யிட்டிருக்கிறார். ஆனால், 1988-ல் நீங்கள் அவரை கலைஞரிடம் அறிமுகப்படுத்தியதாகக் கூறுகிறீர்களே?’’

அந்தியூர் செல்வராஜ்
அந்தியூர் செல்வராஜ்

‘‘அந்தத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, ‘தலைவரிடம் நெருங்கவிடாமல் செய்கிறார்கள். கொஞ்சம் நெருக்கமாக, தலைவரிடம் அறிமுகப்படுத்திவையுங்கள்’ என்று வி.பி.துரைசாமி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அவரை கொங்கு மண்டலம் முழுக்க அழைத்துச் சென்று மக்களிடம் அறிமுகப்படுத்தியதே நான்தான்!’’

“ ‘தி.மு.க-வில் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுகிறது’ என்று வி.பி.துரைசாமி குற்றம்சாட்டியிருக்கிறாரே?”

“இப்படி ஏதாவது குற்றம் சொன்னால் தானே பா.ஜ.க-வில் பதவி கிடைக்கும். தி.மு.க என்னை மதிக்காமல் இருந்திருந்தால் நான் இந்தப் பதவிக்கு வந்திருக்க முடியுமா? நான் இன்னும் என் கிராமத்தில் காலனி மக்களுடன்தான் குடியிருக்கிறேன். என்னிடம் எந்தப் பாகுபாடும் காட்டவில்லையே!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு