Published:Updated:

“கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!”

பொன்முடி
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்முடி

அதிரடி பொன்முடி

‘முதல்வர் வேட்பாளர் யார்...’ என்ற உட்கட்சிப் போட்டியால் அ.தி.மு.க கூடாரம் கலகலத்துக் கிடக்கிறது. எதிர்த்தரப்பான தி.மு.க-விலும், ‘வாரிசு அரசியல், குடும்ப அரசியலாக முன்னேறிவிட்டது’ என்ற புலம்பலோடு கட்சியைவிட்டு வெளியேறும் தலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியிடம் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்கு இடம் பெயர்ந்தவர்கள்போல், பா.ஜ.க-விலிருந்து பெரிய தலைவர்கள் யாரும் தி.மு.க-வுக்கு வரவில்லையே..?’’

“தமிழக பா.ஜ.க-வில் பெரிய தலைவர்கள் என்று யாரும் இல்லையே... இருந்தால்தானே வருவதற்கு!’’

“அதனால்தான் பா.ஜ.க முன்னாள் கவுன்சிலர் தி.மு.க-வில் இணைந்ததுகூடச் செய்தியாக்கப் படுகிறதா?’’

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பா.ஜ.க ஒன்றுமில்லாத கட்சி. எனவே, அவர்களை யெல்லாம் நாங்கள் எதிரிகளாகவே நினைக்கவில்லை.”

“ `பா.ஜ.க எங்களுக்கு ஒரு பொருட்டல்ல’ என்கிறீர்கள். ஆனால், பா.ஜ.க முன்வைக்கும் அரசியலுக்கு எதிராகத்தானே தி.மு.க போராடிவருகிறது?’’

“எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக, ‘இந்துத்துவா’ கோஷத்தை பா.ஜ.க-வினர் முன்வைக்கின்றனர். இது பெரியார் மண்; இங்கே இவர்களது கோஷமெல்லாம் எடுபடாது. தி.மு.க என்பது, ‘எல்லோரும் சமம்’ என்ற மனிதநேயத்தோடு, பெரியார் காலத்திலிருந்து செயல்பட்டுவரக்கூடிய கட்சி.’’

“ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு, தி.மு.க தரப்பிலிருந்து வாழ்த்து தெரிவித்து விளம்பரங்கள் வெளிவந்தனவே..?’’

“இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இது போன்ற சிந்தனை உள்ளவர்களும் எங்கள் கட்சியில் உண்டு. நாங்கள் யாரையும் இது குறித்துக் கட்டுப்படுத்துவதும் கிடையாது. அது அவரவர் விருப்பம்... இதில் பெரிய தவறு ஒன்றும் இல்லையே!’’

“தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் படத்தைப் பதிவிட்டது சர்ச்சையானதே..?’’

“உதயநிதி ஸ்டாலின் ஒரு பகுத்தறிவுவாதி! இணையத்தில் படம் பதிவிட்டது ஏன் என்பது குறித்து அவரே விளக்கமும் கொடுத்துவிட்டார். தி.மு.க பகுத்தறிவு இயக்கம்தான்; கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல!’’

“கொள்கையை அடிப்படையாகக்கொண்ட தி.மு.க., இன்றைக்கு வாரிசு அரசியலையும் தாண்டி குறிப்பிட்ட குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டதாக, தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்கள் சொல்கிறார்களே..?’’

“தி.மு.க-விலிருந்து ஒருவர் வெளியேறி, பா.ஜ.க-வுக்குப் போகிறாரென்றால், அவருக்கு ஏதாவது கொள்கை இருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள். எந்தக் கட்சியில்தான் நீங்கள் சொல்கிற விஷயங்கள் இல்லை? எந்த விஷயத்தையுமே கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்வதில் தவறு இல்லை!’’

பொன்முடி
பொன்முடி

“அதனால்தான் நீங்கள் ஏற்கெனவே வகித்துவந்த மா.செ பதவியை உங்கள் மகன் கௌதம சிகாமணிக்குச் சிபாரிசு செய்தீர்களா..?’’

“இதெல்லாம் தவறான செய்தி. வெறும் யூகத்தின் அடிப்படையிலானது. தற்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் புகழேந்தி பெயரைத்தான் நான் ஆரம்பத்திலேயே கட்சிக்கு சிபாரிசு செய்திருந்தேன். இதுதான் உண்மை!’’

“ `விவசாயி வேடம் போடுகிறார்’ என்று முதல்வரை விமர்சித்த மு.க.ஸ்டாலினே, அண்மையில் பச்சைத்துண்டு அணிந்து வயல் வரப்புகளில் நின்று போட்டோஷூட் நடத்தியிருக்கிறாரே..?’’

“விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை இயற்றியிருக்கிறது; அ.தி.மு.க அரசும் அதை ஆதரிக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து எங்கள் தலைவர் போராட்டம் நடத்துகிறார். மற்றபடி, எடப்பாடி பழனிசாமிக்குப் போட்டியாக எதையும் செய்யவில்லை.’’

“இந்த போட்டோஷூட் விவகாரம், ‘பிம்ப அரசியலை நோக்கி நகர்கிறதா தி.மு.க’ என்ற கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறதே..?’’

“தி.மு.க இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதே, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் போகாத ஊர் கிடையாது. ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். அந்தவகையில், எளிய மக்களுக்கான குரலாக ஒலிக்கும் கொள்கையிலிருந்து தி.மு.க ஒருபோதும் விலகியது இல்லை. எங்களுக்கு பிம்ப அரசியல் தேவையும் இல்லை!’’

“ `தி.மு.க கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம்’ என்கிறார் டி.ஆர்.பாலு. உங்கள் கூட்டணிக்கு பா.ம.க வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’’

“கூட்டணிகளை இப்போது முடிவுசெய்ய முடியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கட்சித் தலைமைதான் அது பற்றியெல்லாம் முடிவு செய்யும். எனவே, பா.ம.க எங்கள் கூட்டணிக்குள் வந்தால் ஏற்றுக்கொள்வோமா இல்லையா என்பதெல்லாம் தேர்தல் நெருக்கத்தில் எங்கள் தலைவர் எடுக்கும் முடிவுதான்.’’

“ `பா.ம.க அங்கம்வகிக்கும் கூட்டணியில் வி.சி.க இருப்பது சாத்தியமில்லை’ என்கிறாரே திருமாவளவன்?’’

“ஏற்கெனவே இந்த இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்திருக்கின்றன. எனவே, கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணி பற்றிப் பேசுவதற்கென்றே குழு அமைக்கப்படும். எல்லாக் கட்சிகளின் முன்னோடிகளுடனும் எங்கள் தலைவர் கலந்து பேசித்தான் கூட்டணி முடிவை அறிவிப்பார். எனவே, தேர்தல் வரும்போது இது பற்றியெல்லாம் பேசிக்கொள்ளலாம்.’’

“2ஜி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவதன் பின்னணியில், ‘அரசியல் காரணங்கள் உள்ளன’ என்று கனிமொழி, ஆ.ராசா தரப்பில் எதிர் மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. மடியில் கனம் இல்லையெனில் பயம் எதற்கு?’’

“சேகர் ரெட்டி வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்குகளில் தீர்ப்பு என்னவாக வந்தது என்று எல்லோருக்குமே தெரியும். மத்தியில் பா.ஜ.க அரசு வந்த பிறகு, சி.பி.ஐ மீதான நம்பிக்கையே போய்விட்டது. சி.பி.ஐ-யா அல்லது அது பா.ஜ.க-வின் கைக்கூலியா என்றே தெரியவில்லை. ஆக, சி.பி.ஐ அரசியல் பின்னணியில் செயல்படுகிறது - தவறு செய்கிறது - என்பதைச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாதா?’’

“வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது, கூட்டத்தில் சத்தமிட்ட தி.மு.க தொண்டரை ‘நாய்’ என்று ஆ.ராசா திட்டியது பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?’’

“அது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை... குடித்துவிட்டு வந்து கலாட்டா பண்ணியவரை, ஏதோ ஒரு எமோஷனில் அப்படிச் சொல்லியிருக்கலாம். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை. ஆனாலும், இதைப் பெரிதாக்க சிலர் முயல்கிறார்கள்.’’