Published:Updated:

துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி... கருணாநிதி பாணியைக் கையாண்ட ஸ்டாலின்!

கனிமொழியுடன் ஸ்டாலின்

தி.மு.க பொதுக்குழுவில் கனிமொழியை வாழ்த்தியது மட்டுமல்லாமல், இல்லத்துக்கே சென்று வாழ்த்தியிருக்கிறார் உதயநிதி.

துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி... கருணாநிதி பாணியைக் கையாண்ட ஸ்டாலின்!

தி.மு.க பொதுக்குழுவில் கனிமொழியை வாழ்த்தியது மட்டுமல்லாமல், இல்லத்துக்கே சென்று வாழ்த்தியிருக்கிறார் உதயநிதி.

Published:Updated:
கனிமொழியுடன் ஸ்டாலின்

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க-விலிருந்து வெளியேறியதால், அந்த இடத்துக்கு மகளிர் கோட்டாவில் கனிமொழி நியமிக்கப்பட்டிருக்கிறார். பொதுக்குழுவிலேயே கனிமொழியை வானளாவ வாழ்த்திப்ல் பேசியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். இதுவரை உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையே மறைமுக மோதல் இருந்ததாகக் கூறப்பட்டுவந்த நிலையில், திடீரென இணைந்தது எப்படி என்று விசாரித்தோம்.

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில்
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில்

``இணைந்துவிட்டனர் என்று சொல்வது சாத்தியமேயில்லை என்கிறார்கள். அவ்வப்போது கிளம்பும் இருவருக்கும் இடையிலான யுத்தம் பற்றிய தகவல்களை அடக்க, அவ்வப்போது இது போன்று இணைந்ததுபோல வெளிக்காட்டிக்கொள்வது வழக்கம். துணைப் பொதுச்செயலாளராகத் தேர்வாகியிருக்கும் கனிமொழியை சபை முன்பு வாழ்த்தும் வகையில்தான், ‘புதிதாக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் என்னுடைய அத்தை, தலைவரின் தங்கை, கலைஞரின் அன்பு மகள் கனிமொழி கருணாநிதிக்கு வாழ்த்துகள்' என்று பேசியிருக்கிறார்.

கனிமொழியுடன் உதயநிதி
கனிமொழியுடன் உதயநிதி

புதிதாகப் பொறுப்பேற்றவர்களை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்கிற மரியாதை நிமித்தமான சந்திப்புதானே ஒழிய, வேறொன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. கனிமொழியைப் பார்க்க அவரின் இல்லத்துக்குச் சென்றிருந்ததால், அவரின் தாயார் ராஜாத்தி அம்மாளையும் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார்.

ராஜாத்தி அம்மாளுடன் உதயநிதி
ராஜாத்தி அம்மாளுடன் உதயநிதி

இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின்தான் தற்போது கட்சியின் தலைவர். அதேபோல், மாணவரணிச் செயலாளராக ஒருகாலத்தில் இருந்த துரைமுருகன், இன்று கட்சியின் பொதுச்செயலாளர். இப்படிப் பார்க்கப்போனால், மகளிரணிச் செயலாளராக இருக்கும் கனிமொழி என்றைக்கோ, தலைமைக் கழகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

துரைமுருகன், ஸ்டாலின்
துரைமுருகன், ஸ்டாலின்

அது தொடர்பான பேச்சு எழும்போதெல்லாம் ஸ்டாலின் குடும்பத்தில் அதைத் தடுத்துவிட்டனராம். தற்சமயம், சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து வெளியேறியதால், அவருக்குண்டான மகளிர் கோட்டாவில்தான் கனிமொழி துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறாரே தவிர, வேறொன்றும் ஸ்பெஷலாக இல்லை என்கிறார்கள்.

கனிமொழி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
கனிமொழி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

`நான் கலைஞர் அல்ல’ என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்லிவருகிறார். எனினும், அவரது செயல்பாடுகளில் கலைஞர் பாணியைச் சில இடங்களில் புகுத்தவே செய்கிறார். அப்படியான ஒரு பாணிதான் கனிமொழியின் இந்தப் பதவியும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதாவது, 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில், கருணாநிதியின் மூத்த மகன் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான பனிப்போர் அதிகமாகவே இருந்தது.

கருணாநிதி, ஸ்டாலின்
கருணாநிதி, ஸ்டாலின்

தினகரன் நாளிதழ் இருவரில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது குறித்து செய்தி வெளியிடவே, 2007 மே 9-ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டு, மூவர் உயிரிழந்தனர். அப்படியான கடுமையான நேரத்தில் ஸ்டாலின் வெறும் உள்ளாட்சித்துறை அமைச்சராக மட்டுமே இருந்தார். துணை முதல்வர் பதவி அப்போது கொடுக்கப்படவில்லை.

தினகரன் அலுவலகம் எரிப்பு
தினகரன் அலுவலகம் எரிப்பு

இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்க கருணாநிதி மேற்கொண்ட காரியம் வெற்றியும் பெற்றது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அழகிரி வெற்றிபெற்றார். அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொடுக்க, முதல்வராக இருந்த கருணாநிதியே டெல்லிக்குச் சென்று சோனியாவிடம் பேசினார். பேச்சுவார்த்தை முடிந்து அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியான பின்னர்தான், தமிழகத்தின் துணை முதலமைச்சராக 2009, மே 29-ம் தேதி ஸ்டாலினை நியமித்தார் கருணாநிதி.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

உடனடியாக அடுத்த மாதமே, 13 ஜூன், 2009 அன்று அழகிரி மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். இரு மகன்களில் ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் மீண்டும் பிரச்னை உருவாகும் என்பதால், அப்படியொரு ஸ்ட்ராட்டஜியைக் கையாண்டார் கருணாநிதி. ஒரு மாத இடைவெளியில் இருவருக்கும் முக்கியத்துவமான பதவிகள் வந்ததால், இருவரது ஆதரவாளர்களுமே திருப்தியடைந்தனர்!

தற்போது அதே கருணாநிதி பாணியைத்தான் ஸ்டாலின் இந்த விஷயத்தில் பின்பற்றியிருக்கிறார். இப்போதைய சூழ்நிலையில் வாரிசு என்று பார்த்தால் உதயநிதியும் கனிமொழியும்தான் இருக்கிறார்கள். இருவருக்குள்ளும், இருவரது ஆதரவாளர்களுக்குள்ளும் மறைமுகப் பனிப்போர் நடந்துவருவதை ஸ்டாலின் கவனிக்கத் தவறவில்லை. அதனால், எப்படித் தன்னையும், தன்னுடைய அண்ணன் அழகிரியையும் ஒரே நேரத்தில் கருணாநிதி சமாளித்தாரோ, அதேபோல் உதயநிதி மற்றும் கனிமொழியைச் சமாளிக்க இருவருக்குமே முக்கியத்துவம் கொடுக்க ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார்.

கனிமொழி - ஸ்டாலின்
கனிமொழி - ஸ்டாலின்

அதன்படி, முதலில் கனிமொழியை லிஃப்ட் செய்தாக வேண்டும். துரைமுருகனுக்காக கருணாநிதி முதன்மைச் செயலாளர் பதவியை உருவாக்கியதுபோல, கனிமொழிக்காக ஸ்டாலின் புதுப் பதவியை உருவாக்கும் எண்ணம் இல்லை. அதற்குத் தோதாகவே அமைந்தது சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகல். இதுதான் சரியான தருணம் என எண்ணிய ஸ்டாலின், மகளிர் கோட்டாவில் கனிமொழியை துணைப் பொதுச்செயலாளராக உட்காரவைத்துவிட்டார்.

அடுத்ததாக என்ன நடக்கும் என்பது அனைவருமே யூகிக்கக்கூடிய சம்பவம்தான். குடும்பத்தையும், உதயநிதியையும், அவரின் ஆதரவாளர்களையும் சமாளிக்கும் வகையில் விரைவில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். ஆட்சி அமைந்து ஆறு மாதங்களில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருக்கிறது, அதில் உதயநிதி அமைச்சராக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொன்றும் நடக்கவில்லை. தி.மு.க எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும்கூட உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று பொதுவெளியில் பேசினார்கள். ஒருவேளை உதயநிதி அமைச்சராக்கப்பட்டிருந்தால், கனிமொழியின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக மீடியாக்களிடம் குமுறுலைக் கொட்டித்தீர்க்கவும் தயாராக இருந்தனர்.

உதயநிதி
உதயநிதி

கனிமொழிக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக ஸ்டாலினுக்கு உளவுத்துறையும் நோட் போட்டிருந்தது. அதனால், என்றைக்கிருந்தாலும் கனிமொழியால் சிக்கல் வரலாம் என்பதைப் புரிந்துகொண்டே ஸ்டாலின் தற்போது முதலில் அவருக்கான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக, உதயநிதியை அமைச்சராக்கினால், கனிமொழியோ, அவரின் ஆதரவாளர்களோ ஒருபோதும் சலனப்படப்போவதில்லை என ஸ்டாலின் நம்புகிறார்” என்கிறார்கள் விவரமறிந்த உடன்பிறப்புகள்.