Published:Updated:

``காங்கிரஸ் நம் முதுகில் குத்திவிட்டது” - மீண்டும் தி.மு.க -வுக்குள் வெடித்த சர்ச்சை!

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு

தி.மு.க செயற்குழுவில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்கள், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள். இதனால் இந்தக் கூட்டணி நீடித்தாலும் கட்சியினர் மத்தியில் இந்தக் கூட்டணி ஒன்றுபடுமா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

காங்கிரஸ் - தி.மு.க இடையே இருந்த பிணக்கு முடிந்துவிட்டது என அந்தக் கட்சிகளின் தலைவர்கள் உற்சாகமாக பேட்டி கொடுத்த அடுத்த சில நாள்களிலே, தி.மு.க செயற்குழுவில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்கள், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள். இதனால் இந்தக் கூட்டணி நீடித்தாலும் கட்சியினர் மத்தியில் இந்தக் கூட்டணி ஒன்றுபடுமா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு

தி.மு.க-வின் அவசர செயற்குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. 550 செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு நடக்கும் முதல் செயற்குழுக் கூட்டம் இது என்பதால், தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவசரக்கூட்டம் என்று சொல்லியிருந்தாலும், அவசரப் பொருளாகப் பேசப்படும் எந்த விவகாரமும் இந்தக் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு நன்றி, இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்தன. அந்தத் தீர்மானங்களுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தவிர, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த மாவட்டங்களின் நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

செயற்குழுவின் உள்ளே என்ன பேசப்பட்டது என்பது குறித்து தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசியபோது, ``கூட்டம் தொடங்கியதுமே உள்ளாட்சித் தேர்தலில் சரிவைச் சந்தித்த கொங்குமண்டல நிர்வாகிகளை முதலில் பேசச்சொல்லுங்கள் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டார். அப்போது, கோவை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் என்கிற நிர்வாகி பேசினார்.``நம்முடைய தோல்விக்கு நாமும் ஒரு காரணம். நம் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வுகூட முறையாக நடக்கவில்லை. பேரன், பேத்தி,மகள் என்று களத்தில் குடும்பத்தினரையே வேட்பாளர்களாக நிறுத்தினார்கள். மாவட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு இணங்கிப் போனதும் ஒரு காரணம்" என்று கடுமையான குற்றசாட்டை முன்வைத்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அடுத்ததாக, கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர், ``கரூர் மாவட்டத்தில் ஆளும்கட்சியின் அராஜகமே தோல்விக்குக் காரணம் என்றும், அடுத்து நடக்க உள்ள தேர்தலில் இதற்குப் பதிலடி கொடுக்கப்படும்'' என்றும் பேசினார். கட்சிக்குப் புதிதாக வந்தவர்களிடம் எல்லாம் கட்சியைக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்ற குமுறலும் அப்போது பின்னால் எழுந்தது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு முதலில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகு, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் ரகுபதிக்கு பேசினார்.

அப்போது, `புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் வெற்றியைப் பெற்றும் அதைத் தக்கவைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகம்தான் காரணம். அவர்கள், நம்மை முதுகில் குத்திவிட்டார்கள். குறிப்பாக சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், திருநாவுக்கரசு ஆகியோர் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். வேட்பாளர்களுக்கு பணம்கூட அவர்கள் செலவு செய்யவில்லை, பணமும் நாமே செலவு செய்யவேண்டியிருந்தது. காங்கிரஸ் விஷயத்தில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்" என்று கடுமையாக காங்கிரஸ் கட்சியை சாடிப் பேசினார். அதேபோல் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் முபாரக் ``பணம் வாங்கிக் கொண்டார். ஆனால், அதற்கு முறையாக கணக்கு சொல்லவில்லை' என்கிற குற்றச்சாட்டும் அப்போது எழும்பியிருக்கிறது.

ஸ்டாலின் -அழகிரி சந்திப்பு
ஸ்டாலின் -அழகிரி சந்திப்பு

தென் மாவட்டங்களில், குறிப்பாக துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தி.மு.க-வுக்கு பெருத்த அடி விழுந்தது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ் இதுகுறித்து விளக்கம் கொடுத்தபோது, ``நாம் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியதுதான் அங்கு தோல்வியடையக் காரணம். குறிப்பாக, வசந்தகுமாரின் ஆதிக்கம் எங்கள் பகுதியில் அதிகம் இருந்தது. அவர் நமக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை" என்று சொல்ல, அதையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின். அதேநேரம், பெரும் தோல்வியைச் சந்தித்த தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்கிற வருத்தமும் மற்ற மாவட்ட நிர்வாகிகளிடம் எழுந்தது.

ரஜினி சொன்னது என்ன... 1971 சேலம் ஊர்வலத்தில் நடந்தது என்ன..? துக்ளக் செய்தி... முழு விவரம்!

இறுதியாக ஸ்டாலின், ``காங்கிரஸ் கட்சிக்கும் நமக்கும் தேர்தலை ஒட்டி பிணக்கு ஏற்பட்டது. அவர்களும் கருத்துச் சொன்னார்கள், நாமும் சொன்னோம். அதற்குப் பிறகு, அந்தக் கட்சியின் தலைவர்கள் நம்மை வந்து சந்தித்து, உரிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்கள்” என்று காங்கிரஸ் விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்குப் பின், ``இதுவரை இல்லாத அளவுக்கு நாம் உள்ளாட்சியிலும், நாடாளுமன்றத்திலும் வெற்றியடைந்திருக்கிறோம். அது என்னால் கிடைத்த வெற்றி அல்ல. உங்களால் கிடைத்த வெற்றி. அதேபோல், அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் இதுபோன்ற காரணம் ஏதும் சொல்லாமல் முழுமையான வெற்றியை நாம் பெறவேண்டும். நான், இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். கடுமையான நடவடிக்கை இதற்குப் பின்பு இருக்கும். எந்தக் காரணத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் 2021-ல் ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும்" என்று கொஞ்சம் கடுமையாகவே பேசினார்.

ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு
ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்த செயற்குழுவுக்கு தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி வரவில்லை. வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதால் வரமுடியாது என்று சொல்லியிருக்கிறார். அதேநேரம், மாவட்டச் செயலாளர்கள் ``அ.தி.மு.க-வுக்கு இணையாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம், ஆனாலும் நம்மீது குறை சொல்கிறார்கள். அவர்கள் கட்சியிலிருந்து பணம் கொடுக்கிறார்கள். நம் கட்சியிலிருந்து மாவட்ட உறுப்பினர்களின் தேர்தல் செலவுக்குக்கூட பணம் கொடுக்கவில்லையே" என்ற வருத்ததை வெளியே வந்து பகிர்ந்துகொண்டார்கள்'' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு