Published:Updated:

`50 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலம் அது!' - அரசு மருத்துவமனைக்குத் தானமளித்த தி.மு.க முன்னாள் எம்.பி.

கு. ராமகிருஷ்ணன்

ஏ.கே.எஸ்.விஜயன் மனமுவந்து தங்களது குடும்ப நிலத்தைத் தானமாக வழங்கியிருப்பதை மக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.

DMK Farmer MP A.K.S.Vijayan
DMK Farmer MP A.K.S.Vijayan

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் தி.மு.க விவசாய அணித்தலைவருமான ஏ.கே.எஸ்.விஜயன், தன் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை, பொது மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியிருக்கிறார்.

land
land

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி கிராமம் தான் ஏ.கே.எஸ்.விஜயனின் சொந்த ஊர். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றுவதற்குத் தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், மருத்துவமனையை மேம்படுத்த போதிய நிலம் இல்லை. இதனை அறிந்த முன்னாள் தி.மு.க எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் தன் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாயைத் தாண்டும்.

ஏ.கே.எஸ்.விஜயனின் செயலை உற்சாகத்தோடு வரவேற்றுள்ளனர் அப்பகுதி மக்கள். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் முருகையன் பேசும்போது, ‘’ மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலையில் உள்ள நிலம் இது. பிரதான சாலையில் உள்ள இந்த நிலத்தைக் கொடுக்க முன்வந்தது மிகப் பெரிய செயல். விஜயன் குடும்பத்துக்குச் சொந்தமான பூர்வீக பட்டா நிலம் இது. இவர் நிலம் கொடுத்ததால், அனைத்து வசதிகளோடும் மருத்துவமனை அமைய இருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலையில் உள்ள நிலம் இது. பிரதான சாலையில் உள்ள இந்த நிலத்தைக் கொடுக்க முன்வந்தது மிகப் பெரிய செயல்.
சி.பி.ஐ கட்சி ஒன்றியச் செயலாளர் முருகையன்

ஏ.கே.எஸ்.விஜயனிடம் பேசினோம். `` என்னுடைய விருப்பத்தைக் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தேன். என் சகோதர, சகோதரிகள், அம்மா, என் மனைவி உள்ளிட்ட அனைவருமே என்னுடைய முடிவை வரவேற்றார்கள். முத்துப்பேட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி நிலத்தைப் பதிவு செய்து கொடுத்தோம். சுகாதாரத்துறை அதிகாரிகளும் உற்சாகத்தோடு பெற்றுக் கொண்டனர்” என்றதோடு முடித்துக் கொண்டார் ஏ.கே.எஸ்.விஜயன்.