Published:Updated:

உதயநிதி பேசியதில் என்ன அநாகரிகம்?

 எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

முட்டுக்கொடுக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

‘அ.தி.மு.க விரைவில் உடையும்’, ‘ஜெ. மரண மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம்’ என்றெல்லாம் தேர்தல் களத்தைத் தெறிக்கவிடுகிறது தி.மு.க. ‘முதலில், மு.க.அழகிரியை தி.மு.க-வில் ஒன்றிணைக்கச் சொல்லுங்கள்’, ‘கருணாநிதியின் மரணப் பின்னணியை நாங்களும் விசாரிப்போம்’ என்று பதிலடி கொடுக்கிறது அ.தி.மு.க. ‘ஒண்டிக்கு ஒண்டி’ சவால்கள் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திடம் பேசினேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“தேர்தல் வாக்குறுதியாக, ‘கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம்’ என்கிறது தி.மு.க. ஆனால், ‘மாநில அரசால் இயலாத வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றாதீர்கள்’ என்று பா.ஜ.க கண்டித்திருக்கிறதே?’’

“எங்களால் முடியும். 2006 தேர்தலின்போது, ‘விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வோம்’ என்று சொன்னோம். ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தோமே!’’

“தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘அ.தி.மு.க இரண்டாக உடையும்’ என்றதற்கு, ‘முதலில், மு.க.அழகிரியை தி.மு.க-வில் ஒன்றிணைக்கச் செய்யுங்கள்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்திருக்கிறாரே?’’

“ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே பகை புகைந்துகொண்டிருப்பதால்தான் போஸ்டர் ஒட்டுவதில் ஆரம்பித்து விளம்பரங்கள் வெளியிடுவது வரை தனித்தனியாகச் செயல்படுகிறார்கள். இந்தப் பனிப்போர் வெளிப்படையாகத் தெரிகிறது. இதைத்தான் எங்கள் தலைவரும் குறிப்பிட்டிருக்கிறார். இதில், செல்லூர் ராஜூ எங்களை நோக்கிக் கேள்வி எழுப்ப என்ன இருக்கிறது?’’

“மு.க.அழகிரியை தி.மு.க-வில் இணைக்கும் திட்டம் இருக்கிறதா, இல்லையா?’’

“தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்தபோதே, கட்சியைவிட்டு மு.க.அழகிரியை நீக்கிவிட்டார். இத்தனை ஆண்டுகளாக அழகிரியும் அமைதியாக ஒதுங்கிவிட்டார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்றிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம். எங்கள் கட்சியில் பிளவோ, சரிவோ கிடையாது. அப்படியிருக்கும்போது, இந்தக் கேள்விக்கு அவசியமும் கிடையாது.’’

“ஆனால், மு.க.அழகிரி, ‘ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது’ என்கிறாரே?’’

“தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அவரவர் வேகத்தைக் காட்டுகிறார்கள். ஆனால், ஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடையாளமாகத்தான் கடந்தகால தேர்தல்களில், ஆளுங்கட்சியினரின் பணபலத்தையும் தாண்டி தி.மு.க-வை மிகப்பெரிய வெற்றிபெற வைத்திருக்கின்றனர்.’’

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“கிராமசபைக் கூட்டத்தில், ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்ணை தி.மு.க-வினர் தாக்கியது நியாயம்தானா?’’

“தாக்கப்பட்டார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்... டி.வி-யில் அப்படியொரு காட்சியோ, செய்தியோ வரவில்லை. கூட்டத்தில் மகளிர் அணியினர் பக்கம்தான் அந்தப் பெண்மணி இருந்தார். கட்சித் தொண்டர்கள்தான் ‘போங்கம்மா...’ என்று சொல்லி அவரைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் செல்கிறார்கள். அந்த அம்மாதான் ஆக்ரோஷமாக பேசுகிறாரே தவிர போலீஸாரும் அவரைக் கண்ணியத்தோடுதான் அழைத்துச் சென்றார்கள்.’’

“ஆனால், அந்தப் பெண்மணி தாக்கப்படும் வீடியோக்கள் இணையத்தில் உலவுகின்றனவே?’’

“எங்கள் கட்சியினர் யாரும் அவரை அடிக்கவில்லை. அமைச்சர் வேலுமணியுடன் அந்த அம்மா பேசுகிற வீடியோதான் இணையத்தில் இருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் அ.தி.மு.க-வினர் செய்த செட்டப்.’’

“உதயநிதி ஸ்டாலின், சசிகலாவை அநாகரிகமாகப் பேசியதற்கு தி.மு.க இதுவரை வருத்தம்கூட தெரிவிக்கவில்லையே?’’

“அதில் என்ன அநாகரிகம் இருக்கிறது? சசிகலாவின் காலில் விழுந்துதானே இவர்கள் பதவி வாங்கினார்கள்! காலில் விழுந்து எழும் அந்த வீடியோ இன்னும் இணையத்தில் இருக்கிறதே! இதைத்தான் உதயநிதி ஸ்டாலினும் குறிப்பிட்டுப் பேசினார். கூட்டத்தினரும் சிரித்தார்கள். காலில் விழுந்துதான் பதவியையே வாங்குகிறார்கள் என்பதைச் சொல்லும்போது சிரிப்பு வரும்தானே... இதில் என்ன அநாகரிகம் இருக்கிறது? அப்படி அநாகரிகம் இருக்கிறது என்று சொல்கிறவர்களின் பார்வையிலும் மனநிலையிலும்தான் பிரச்னை இருக்கிறது.’’

“அ.தி.மு.க தரப்பில், ‘கருணாநிதி மரணத்தில் ஸ்டாலின் மீது அழகிரி எழுப்பியிருக்கும் சந்தேகத்தை நாங்கள் விசாரிப்போம்’ என்று சொல்கிறார்களே?”

“நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது எங்கள் கடமை. அந்தவகையில் ஜெயலலிதா மரணத்தின் பின்னணியிலுள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம் என்று எங்கள் தலைவர் சொன்னார். ஆனால், வீம்புக்கு எதையாவது பேச வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க-வினர் இப்படிப் பேசுகின்றனர். அவர்கள் ஆளுங்கட்சியாகத்தானே இருக்கிறார்கள். கருணாநிதி இறந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டதே... அப்போதே விசாரணை கமிஷன் வைத்திருக்க வேண்டியதுதானே?’’

“தி.மு.க., ‘தியேட்டரில் 100 சதவிகிதம் பார்வையாளர்கள்’ என்ற தமிழக அரசின் அனுமதியை எதிர்க்காததற்குக் காரணம், நடிகர் விஜய் ரசிகர்கள் மீதான பயம்தான் என்கிறார்களே?’’

“தமிழக அரசின் அறிவிப்புக்கு நீதிமன்றமே தடை விதித்துவிட்டது. தமிழக அரசும் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டது. குறுகியகாலத்துக்குள் இவையெல்லாம் நடந்து முடிந்துவிட்டதால், எதிர்ப்பு தெரிவிக்கும் அவகாசம் கிடைக்கவில்லை.’’

“கால அவகாசம் இருந்திருந்தால், எதிர்த்திருப்பீர்களா?”

“நீதிமன்றம் தடை விதித்த பிறகு... தமிழக அரசும் வாபஸ் வாங்கிய பிறகு... இந்தக் கேள்வி தேவையற்றது. நீங்களாக க்ரியேட் செய்யாதீர்கள்!”