Published:Updated:

“ராமர் கோயிலுக்கு நிதி... தி.மு.க-வின் மத நல்லிணக்க அடையாளம்!”

தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு புது விளக்கம்

தமிழக அரசியலில் இது ‘காது குத்து’ மாதம்! சீமான் தன் மகனுக்குக் காதுகுத்த... முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் ‘தமிழக மக்களுக்குக் காது குத்துவது யார்?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசினோம்...

‘‘தி.மு.க பிரசாரத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ‘100 நாளில் தீர்வு’ என்று மு.க.ஸ்டாலின் சொல்லிவருவது, முதல்வர் குறிப்பிடுவதுபோல் ‘காதுகுத்து அரசியல்’தானே?’’

‘‘ஆட்சிக்கு வந்த மறுநாளே மக்கள் குறைகளையெல்லாம் தீர்த்துவிடுவோம் என்று நாங்கள் சொல்லவில்லை. மக்களின் குறைகள் என்னென்ன, அவற்றை எப்படித் தீர்ப்பது என்பதையெல்லாம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக தனித்துறை - நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் என்று எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஓர் ஆட்சியை மதிப்பிடவே 100 நாள்கள் போதும் என்கிறபோது, மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் இது பொருந்தும்தானே. ஏற்கெனவே ‘அம்மா கால் சென்டர்’ என்ற பெயரில் திட்டம் அறிவித்த அ.தி.மு.க., இப்போது அதே திட்டத்துக்கு புதிய பெயின்ட் அடித்து ‘முதல்வர் உதவி மையம்’ என அறிவித்திருக்கிறார்கள். இதுதான் காதுகுத்து அரசியல்!’’

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

‘‘நாகப்பட்டினத்தில், தி.மு.க ஒன்றியச் செயலாளர்மீதே ‘நில அபகரிப்பு குற்றச்சாட்டு’ மனு கொடுத்த பெண்மணியிடம் மு.க.ஸ்டாலின் குறை கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?’’

‘‘15,000 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் எல்லோருடைய குறைகளையும் பேசவைத்து, கேட்பதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. தி.மு.க நபர்மீது அந்தப் பெண்மணி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் என்பதற்காக அவரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுத்திருந்தாலோ, அவர் கொடுத்த புகாரை வாங்க மறுத்திருந்தாலோகூட கேள்வி எழுப்பலாம். அந்தப் பெண்மணியிடம் மனு வாங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மனுமீது விசாரணை செய்து, தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.’’

‘‘தமிழ்நாட்டின் தற்போதைய கடன் சுமையைக் கண்டிக்கும் தி.மு.க-வே, ‘கடன் தள்ளுபடி செய்வோம்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருப்பது நியாயம்தானா?’’

‘‘வருவாயைப் பெருக்கக்கூடிய வழிகளைச் செய்யாமல், வெறுமனே தள்ளுபடியை மட்டுமே அ.தி.மு.க செய்துகொண்டிருப்பதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். தனிப்பட்ட வருவாயைப் பெருக்கிக்கொள்வதில் மட்டும்தானே அ.தி.மு.க-வினர் அக்கறையாகச் செயல்படுகிறார்கள்... அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க முறையான திட்டமிடல் எதையுமே இவர்கள் செய்யவில்லையே. அதனால்தான், கடன் மட்டுமல்ல... அரசின் வருவாய் பற்றாக்குறையும் மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது என்பது நிதிநிலை அறிக்கை மூலம் தெளிவாகத் தெரியவந்திருக்கிறது.’’

‘‘அதிக எண்ணிக்கையில் எம்.பி-க்களைக்கொண்ட தி.மு.க., ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள எழுவர் விடுதலைக்காக இதுவரை என்ன செய்திருக்கிறது என அ.தி.மு.க கேட்கிறதே?’’

‘‘எழுவர் விடுதலையில் நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசி அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்... ஆட்சி அதிகாரத்துக்கு அழுத்தத்தைத் தரலாம்.... நியாயமான கோரிக்கைகளுக்காக, பொதுமக்களின் ஆதரவைத் திரட்டலாம். மற்றபடி ஓர் அதிகாரியை அழைத்து உத்தரவு போட முடியுமா? செயல்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கிற அ.தி.மு.க அரசோ, அதன் கூட்டணிக் கட்சியாக மத்தியில் இருக்கிற பா.ஜ.க அரசோ எழுவர் விடுதலைக்காக ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லையே!’’

‘‘காவல்துறை உயரதிகாரி ஒருவரைக் குறிப்பிட்டு மிரட்டல் தொனியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறாரே... தி.மு.க அரசில், அதிகாரிகளின் நிலை இப்படித்தான் இருக்குமா?’’

‘‘உதயநிதி யாரையும் மிரட்டவில்லை. காவல்துறையிலுள்ள எந்த உயரதிகாரியை அவர் மிரட்டியதாக நீங்கள் சொல்கிறீர்களோ, அந்த உயரதிகாரிமீது பாலியல் குற்றச்சாட்டின் பேரில் தமிழக அரசே நடவடிக்கை எடுத்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கும் செய்தியும் இப்போது வெளிவந்திருக்கிறது. எனவே, உங்கள் கேள்விக்கு இதுதான் என் பதில்!’’

‘‘தி.மு.க எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.11,000 நிதி வழங்கியிருக்கிறார். இதை என்னவென்று புரிந்துகொள்வது?’’

‘‘தி.மு.க-விலுள்ள சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ராமர் கோயில் கட்ட நிதி கொடுக்கிறார் என்றால், தி.மு.க எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய கட்சியாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.’’

‘‘அப்படியென்றால், பாபர் மசூதி இடிப்பு முதல் ராமர் கோயில் தீர்ப்பு வரையிலான அனைத்தையும் தி.மு.க ஏற்றுக்கொள்கிறதா?’’

‘‘தி.மு.க தலைவர், கட்சி நிதியிலிருந்து ஒரு தொகையைக் கொடுத்திருக்கிறாரா... இல்லையே! சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தி.மு..க எம்.எல்.ஏ ஒருவர் தனிப்பட்ட வகையில், மாற்று மதத்தினரின் உணர்வைப் புரிந்துகொண்டு நன்கொடை கொடுத்திருக்கிறார். அதாவது, தனக்குச் சரியென்று தோன்றியதைச் செய்திருக்கிறார். இதை மத நல்லிணக்கச் செயலாகத்தான் நான் பார்க்கிறேன். இந்துக்கள் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்வதும், கந்தூரி திருவிழாவுக்கு இந்துக்கள் நிதியுதவி செய்வதும் இன்றைக்கும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.’’