Published:Updated:

கருணாநிதியின் நண்பர் மட்டுமல்ல ஆசிரியருமாகிய பேராசிரியர் க.அன்பழகன்! #HBD100

அன்பழகன்
News
அன்பழகன்

ஒருபுறம் மொழிப்பற்று, இனப்பற்று, எழுத்துப்பணி, இயக்கப்பணி, மக்கள்பணி ஆகியவை அன்பழகனின் தனித்த அடையாளமாக இருந்தாலும், மறுபுறம் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தோழன் என்பதே அவரின் பெருமைமிகு அடையாளமாக கடைசிவரை இருந்தது.

''ஒரு புயற்பொழுதில்

கலைஞரும் நீயும்

இரு கரங்களாகக்

காத்திராவிட்டால்

திராவிட தீபம்

அணைந்து போயிருக்கும்!"

கவிக்கோ அப்துல் ரகுமானின் இந்தக் கவிதை வரிகளுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழகத்தை பல்லாண்டுகாலம் கட்டிக்காத்த இரட்டையரில் ஒருவரான, மறைந்த க.அன்பழகனுக்கு இன்று நூறாவது பிறந்தநாள். தி.மு.க தொண்டர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள், உணர்வாளர்கள் நேற்றில் இருந்தே வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நாளில், திராவிட இயக்கங்களுக்கும் தமிழக மக்களுக்கும் அன்பழகன் ஆற்றிய பணிகள் குறித்து சற்று திரும்பிப் பார்ப்போம்.

அன்பழகன் - கருணாநிதி
அன்பழகன் - கருணாநிதி

தி.மு.க-வின் - அதன் தோற்றுநரான அண்ணாவின் - பலமே மாணவர்களும் தம்பிகளும்தான். அதில் தம்பிகளில் மூத்த தம்பியாக தளபதியாக கருணாநிதி நிற்க, மாணவனாக, பின் பேராசியராக அண்ணாவின் தளபதியாக நின்றவர்தான் க.அன்பழகன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், காட்டூர் எனும் கிராமத்தில், கல்யாணசுந்தரம் - சுவர்ணாம்பாள் தம்பதிக்கு மகனாக,1922-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, பிறந்தவர் இராமையா. முன்னாள் காங்கிரஸ்காரராகவும் பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பிறகு அதிலும் இணைந்து பணியாற்றினார் கல்யாணசுந்தரம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவர் வாழ்ந்த பகுதியில், அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டங்களுக்குப் பெரியாரும் அண்ணாவும் வர, அப்போதே அவர்களைச் சந்திக்கும் அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது சிறுவன் ராமையாவுக்கு. சின்னஞ்சிறிய வயதிலேயே, சுயமரியாதைக் கொள்கைகள் தாங்கிய அந்தச் சிறுவன் வளர்ந்தபிறகு துடிப்புமிக்க சுயமரியாதைக் கொள்கை பிரசாரகராக மாறினான். தன் பெயரையும் தனித் தமிழில் அன்பழகன் என மாற்றிக்கொண்டான். வசீகர மொழியாலும் துல்லியமான தரவுகளாலும், தன் பேச்சை கேட்போர் அனைவரையும் கட்டிப் போட்டான். எல்லோரும் அண்ணாவின் பேச்சுக்காக காத்திருக்க, அண்ணாவையே தன் பேச்சால் கலங்கடித்தான் அந்த இளைஞன்.

"தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்திக்கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா நினைவிடத்துக்கு அருகில், மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையில், புயலின் கோரத் தாக்கத்தால், மக்களும் - மரங்களும் பெரும் அழிவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையில், வரும் 19-ம் தேதி, எனது 97-வது பிறந்த நாள் விழாவைத் தவிர்த்திட விழைகிறேன்."
அன்பழகன் (2018 டிசம்பரில் பேசியது)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படித்தான், 1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் நடத்திய சிக்கந்தர் விழாவில் அன்பழகனுக்கும் கருணாநிதிக்கும் அறிமுகம் கிட்டுகிறது. தன் ஊரில் நடக்கும் கூட்டங்களுக்கு அன்பழகனை, கருணாநிதி பேச அழைக்க இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். அந்த நட்பு கருணாநிதி மறையும் வரையிலும் கிட்டத்தட்ட 74 ஆண்டுகள் நீடித்தது. காங்கிரஸ்காரர்களின் கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தான் படிக்கும் காலத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பினார் அன்பழகன். அறிஞர் அண்ணாவையும் தன் பல்கலைக்கழகத்தில் பேச வைத்து மாணவர்களின் மனங்களில் திராவிட இயக்கக் கொள்கைகளை விதைத்தார்.

அன்பழகன் அண்ணாவுடன்
அன்பழகன் அண்ணாவுடன்

கல்லூரிப் படிப்பு முடிந்து, இயக்கத்துக்காக பணியாற்றத் துடித்த அன்பழகனை தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்தான், "படித்த இளைஞன் நீ ஆசிரியனாக இரு" என் ஆறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன்படி பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே தான் நடத்தி வந்த, `புதுவாழ்வு' இதழின் மூலம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பி வந்தார் அன்பழகன். பின்னர் பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா, தி.மு.கழகத்தை தோற்றுவிக்க அதில் இணைந்து அண்ணாவின் தளபதியானார். 1957-ல் தி.மு.க பங்கேற்ற முதல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்பழகன். தொடர்ந்து சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஒருமுறை, நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறை, சட்டமன்ற உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராகவும் மக்கள் பணியாற்றிருக்கிறார். சுகாதாரத்துரையிலும் கல்வித்துறையிலும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருப்பதில் அன்பழகனின் பணி அளப்பரியது.

''பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய கார்ல் மார்க்ஸுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டிட தலைவர் கருணாநிதிக்கு உற்ற பெருந்துணையாக எப்போதும் உடன் இருந்தவர் பேராசிரியர். இப்போதும் அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், தி.மு.க-வின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவும் உங்களின் ஒருவனான எனக்கு எப்போதும் தந்தையைப் போல் துணைநிற்கிறார்.''
மு.க.ஸ்டாலின். (அன்பழகனின் 97-வது பிறந்தநாளில்)

தவிர, `வாழ்க திராவிடம்’, சீதையின் காதல், தமிழர் திருமணமும் இனமானமும், கலையும் வாழ்வும், `வகுப்புரிமைப் போராட்டம்’ என பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் அன்பழகன். ஒருபுறம் மொழிப்பற்று, இனப்பற்று, எழுத்துப்பணி, இயக்கப்பணி, மக்கள்பணி ஆகியவை அன்பழகனின் தனித்த அடையாளமாக இருந்தாலும், மறுபுறம் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தோழன் என்பதே அவரின் பெருமைமிகு அடையாளமாக கடைசிவரை இருந்தது.

க.அன்பழகன்
க.அன்பழகன்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அடுத்த யார் முதல்வராக வருவது என்பதில் தி.மு.கழகத்தில் இருவேறு கருத்துகள் நிலவின. கருணாநிதி தலைமையிலும் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையிலும் இருவேறு அணிகள் பிரிந்தன. அதில் தன் கல்லூரி நண்பர், தன், தமிழ் இலக்கிய மன்றத் தோழர் நெடுஞ்செழியனின் பக்கம் செல்லாமல் கருணாநிதியின் பக்கம் நின்றார் அன்பழகன். அண்ணாவுக்குப் பிறகு இயக்கத்தை வழிநடத்த, தன்னைவிட, நெடுஞ்செழியனை விட, மற்ற எல்லோரையும்விட கருணாநிதிதான் சரி என்பதை அப்போதே அறிந்திருந்தார் அன்பழகன். அதைப் பின்னாளில் தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார் அவர். எம்.ஜி.ஆர் தி.மு.க கழகத்தை உடைத்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது, நம்பிக்கைக்குரிய பலர் அவருடன் செல்ல 'நண்பேண்டா' என கருணாநிதியின் கரம் பற்றி நின்றார் அன்பழகன்.

அதனால்தான், தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னால்,

'மனிதன்

அன்பழகன்

சுயமரியாதைக்காரன்

அண்ணாவின் தம்பி

கலைஞரின் தோழன்'

இப்படித்தான் அறிமுகப்படுத்திக்கொள்வேன் எனக் கூறி, தன் வாழ்நாள் முழுவதும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார் அன்பழகன்.

கருணாநிதியும் அன்பழகனின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ சீட், அமைச்சர் பதவி என்பதையெல்லாம் தாண்டி, "திராவிட இயக்க ஆரம்ப காலத்தில் எங்களைப் போன்ற மாணவர்களை எல்லாம் வழிநடத்திய பேராசியர் அன்பழகன்'' என ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் கருணாநிதி. "தி.மு.க, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பற்றி பேசுவதை விட்டு, அப்போதைய அரசியல் சூழல்களைப் பற்றி மட்டும் பேசி, அதன் போக்கிலேயே கட்சி வளைந்தபோதெல்லாம் கட்சியை கொள்கையின் பக்கம திருப்பி, இப்போதும் எங்களுக்கெல்லாம் ஒரு ஆசிரியராகச் செயல்படுவர் அன்பழகன்'' என அதே மேடையில் சொல்லிப் பெருமைப்பட்டார் கருணாநிதி. "நாங்கள் உங்களுக்காகப் பேசுகிறோம்... பேராசிரியர் எங்களுக்காகப் பேசுகிறார்... அதன் அர்த்தம் என்னவென்றால்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எங்கள் உரையில் இருக்கும். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பேராசிரியரின் உரையில் இருக்கும்” என பல மேடைகளில் பேசியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி (இனமானப் பேராசிரியர் `வாழ்வும் – தொண்டும்’ நூல் வெளியீட்டில்)
அன்பழகனுக்கும் எனக்கும் 70 ஆண்டு கால நட்பு. இந்த நட்பு, தி.மு.க-வை வளர்க்க உறுதுணையாக இருந்துள்ளது. ஒற்றுமையாக இருந்து நாங்கள் பெற்ற வெற்றிகள் ஏராளம். எங்கள் ஒற்றுமையைக் கண்டு வயிற்றெரிச்சல் படுபவர்கள் வேறு இயக்கங்களில் உள்ளார்கள். திராவிடத்தைக் கேலி பேசும் இளைஞர்கள் இன்று இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். அப்படிப் பேசும் இளைஞர்கள் திராவிடத்தால் வளர்ந்த இளைஞர்கள் என்பதையும் அறிவேன்.

கருணாநிதிக்கு அப்போதிருந்த பேருக்கும் புகழுக்கும் அவர் அப்படிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. வேறு எந்தத் தலைவரும் இப்படிப் பேசுவார்களா எனவும் தெரியவில்லை. ஆனால், அன்பழகனுடனான நட்பு அவரை அப்படிப் பேச வைத்தது. கருணாநிதி, அன்பழகன் நட்பென்பது தனிப்பட்ட இரு மனிதர்களின் நட்பாக மட்டுமல்லாமல், திராவிட இயக்கக்கொள்கையைக் காத்திடும் நட்பாக, தி.மு.கழகத்தை காத்திடும் நட்பாக, தமிழக மக்களின் நலனை மேம்படுத்தும் நட்பாகவே கடைசி வரையிலும் இருந்தது. அன்பழகன் எனும் சுயமரியாதைக்காரனின் வாழ்வில் கருணாநிதியுடனான நட்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

அன்பழகன் கருணாநிதியுடன்
அன்பழகன் கருணாநிதியுடன்

கருணாநிதி இறந்து ஒரு மாதத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில், கருணாநிதி குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகனிடத்தில் "கருணாநிதி இல்லாத இந்தக் காலத்தில் நீங்கள் எந்த இடத்தில் எல்லாம் அவரை மிஸ் செய்கிறீர்கள்?” என நெறியாளர் கேள்வி கேட்க, "காலையில எழுந்தவுடனே எங்க போறதுன்னு தெரியல சார்'' என நா தழுதழுக்க துரைமுருகன் பதில் சொல்ல ஒருகணம் சிலிர்த்துப் போனது. துரைமுருகனின் வாய் வழி வந்த இந்த வார்த்தைகளை நான் காட்சியாக உணர்ந்தது, கருணாநிதி இறப்புக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அன்பழகன், கருணாநிதியின் சடலத்தின் முன்நின்று, இனி எனக்கு எதுவுமே இல்லை என்பதுபோல ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்தபோதுதான். தன் கட்சித் தலைவனுக்கு நல்ல தோழனாக மட்டுமல்லாமல் கொள்கை ஆசிரியனாகவும் விளங்கியவர் அன்பழகன். கடந்த வருடம் மார்ச் மாதம் 7-ம் தேதி அன்பழகன் உடல்நிலைக் குறைவால் மறைந்திருந்தாலும். திராவிட இயக்க உணர்வாளர்கள் மத்தியில் அவர் என்றென்றும் வாழ்வார்.

இனமான பேராசிரியர்!
இனமான பேராசிரியர்!