சமூகம்
Published:Updated:

“அவங்களை நிறுத்தச் சொல்லு... நாங்க நிறுத்துறோம்!”

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
துரைமுருகன்

மதுபான ஆலைகள் விவகாரம்... துரைமுருகன் தடாலடி

ஊரடங்கு காலத்தில் குடியை மறந்து குடும்பத்துடன் நிம்மதியாக இருந்தவர்களையும், டாஸ்மாக் கடை நெரிசலில் நிற்கவைத்தது தமிழக அரசு.

உயர் நீதிமன்றம் தலையிட்டு, மதுக்கடைகளை மூடச் சொல்லும் அளவுக்கு விஷயம் விபரீதமாகியிருக்கிறது. மதுக்கடை திறப்புக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘மது ஆலைகளை நடத்துபவர்களில் பலரும் தி.மு.க-வைச் சார்ந்தவர்கள். இதைவைத்து தி.மு.க மலிவான அரசியல் செய்கிறது’ என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் தி.மு.க-வின் துரை முருகனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கொரோனா பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன?”

துரைமுருகன்
துரைமுருகன்

‘‘மார்ச் மாதம் சட்டமன்றம் தொடங்கியபோதே கொரோனா பாதிப்புகுறித்து எச்சரித்தேன். எனக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், ‘அண்ணன் துரைமுருகனுக்கு 70 வயதுக்குமேல் ஆகியிருக்கும். கொரோனா பாதிக்கும் என அவர் அச்சப்பட வேண்டாம். அண்ணனை பத்திரமாக நான் காப்பாற்றுகிறேன்’ என்றார். ‘நாங்கள் இனி சபைக்கு வரவே மாட்டோம்’ என்று சொன்ன பிறகே, சபையை ஒத்திவைத்தார்கள். ‘சர்வ கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரின் கருத்தையும் கேளுங்கள்’ என்றோம். `முடியாது’ என்று அடம்பிடித்தார்கள். அதன் விளைவாகத்தான் தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுகிறது.

‘பொருளாதாரத்தைப் பற்றிச் சிந்திக்க, குழுவை அமைக்கப் போகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களின் பொருளாதாரச் சிந்தனை, குருவி தலையில் பனங்காயும்... கொக்கு தலையில் வெண்ணெய்யையும் வைக்கும்படியாகத்தான் இருக்கப்போகிறது.’’

‘‘இந்த மாதிரியான சூழலிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது. மூடப்பட்ட மதுக்கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. அதற்கான அவசியம் ஏன் வந்தது?’’

‘‘மாநில சர்க்காருக்கு, பணம் தேவைப்படுகிறது. மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை ஒதுக்கவில்லை. நிதியை ஏன் குறைத்தீர்கள் என்று கேட்கக்கூட இங்கு உள்ள ஆட்சியாளர்களுக்கு தைரியமில்லை. இதனால்தான் மதுக்கடையைத் திறந்தாலாவது வருவாய் கிடைக்கும் என நினைக்கிறார்கள்.’’

‘‘ஆளுங்கட்சியினர், ‘மதுபானம் விற்பது அரசு என்றாலும், அதை உற்பத்தி செய்யும் பெரும்பாலான மது ஆலைகளை நடத்துவது தி.மு.க-வைச் சார்ந்தவர்கள்தான். தி.மு.க-வினர் முதலில் மது ஆலைகளை மூடத் தயாரா?’ என்று சவால்விட்டிருக்கிறார்களே?’’

‘‘எந்த ஓர் ஆலையை மூடுவதற்கும் இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. தி.மு.க-காரனுக்குச் சொந்தமான மதுபான ஆலை உட்பட அனைத்து மது ஆலைகளையும் இழுத்து மூடுங்கள். ஏன் மூடுகிறீர்கள் என்று நாங்கள் கேட்க மாட்டோம். அதன் பிறகு டாஸ்மாக் கடைகளையும் மூடிவிட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவார்களா... இவர்களின் சவாலே, அனுபவமில்லாத ஆட்சியாளர்கள் என்பதைத்தான் காட்டுகிறது.’’

‘‘அவர்கள் இழுத்து மூடுவது இருக்கட்டும்... ஏன், உங்கள் கட்சிக்காரர்கள் தாங்களாக முன்வந்து தங்களுடைய மதுபான ஆலைகளை முதலில் மூடி, ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தலாம் அல்லவா?’’

‘‘ரூபாய் போட்டு திறந்த ஆலைகளை மூடி விட்டுப் போக, நாங்கள் மட்டும் இளிச்சவாயன் களா? நாங்கள் மூடிவிட்டால் ஊரில் இருக்கிறவன் சம்பாதித்துக்கொண்டே இருப்பான். முதலில் எல்லா மதுபான ஆலைகளையும் மூடச் சொல்லுங்கள். அப்போது, நாங்களே எங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் ஆலைகளை மூடுகிறோம்.’’

‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு சாத்தியமா?’’

‘‘அதுபற்றி நான் இப்போது சொல்ல முடியாது. பொதுக்குழு, செயற்குழு இருக்கின்றன. அவற்றை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் அறிக்கை விடுவோம். நான் ஏதாவது உங்களிடம் சொல்ல... ஜூனியர் விகடனில் கட்டுரை வந்த பிறகு எல்லா டி.வி-களிலும் நான்கு நான்கு பேர் விவாதம் செய்வார்கள். அதெல்லாம் எதற்கு இப்போது? மதுவிலக்கு தொடர்பாக நேரம் வரும்போது முடிவுசெய்வோம்.”

‘‘மதுவிலக்கு பற்றி இப்போது சொல்ல முடியாது என்கிறீர்கள். ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, மதுவிலக்கை வாக்குறுதியாகத் தந்தீர்களே... அது அவ்வளவுதானா?’’

துரைமுருகன்
துரைமுருகன்

‘‘அரசியலில் எப்போதும் ஒரே காரணம் இருக்காது. நாங்கள்கூட திராவிட நாடு கேட்டிருந் தோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் கிடைக்கவில்லை. சில நேரங்களில், சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்துதான் தேர்தல் சமயங்களில் வாக்குறுதி தரப்படும். அதற்காக, 1919-ம் ஆண்டில் வாக்குறுதி கொடுத்தீர்களே... அது என்ன ஆனது என்றெல்லாம் கேட்கக் கூடாது. அதுபோல்தான் மதுவிலக்குக் கொள்கையிலும் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுப்போம். நாளைக்கு என்ன நடக்கும் என அரசியலில் இன்றே தெரியாது.’’

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கொரோனா தொடங்கி டாஸ்மாக் வரை எதைத் தொட்டாலும் தி.மு.க-வின் அரசியல் சாயம் தெரிகிறது’ என்று விமர்சனம் செய்கிறாரே?’’

‘‘இவற்றில் நாங்கள் என்ன அரசியல் செய் கிறோம்? மக்கள் அருகருகே நெருங்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். மதுக் கடையைத் திறந்த முதல் நாளிலேயே பார்த்தோம். எவ்வளவு கூட்டம்... மது வாங்க வந்த அனைவருமே முண்டியடித்துக்கொண்டு நெரிசலில் நின்றிருந்தார்கள். இது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்கவில்லையா... இதில் என்ன அரசியல் சாயத்தை முதலமைச்சர் கண்டுபிடித்துள்ளார்?’’

‘‘நடிகர் ரஜினிகாந்த், ‘டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் கமல்ஹாசனும் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதைப் பற்றி?’’

‘‘தீவிரமான அசதியிலிருந்து திடீரென எழுந்து சொல்கிற மாதிரிதான் ரஜினி, கமலின் கருத்துகளைப் பார்க்கிறேன். எதிர்ப்பு தெரிவிப் பதுடன் அவர்கள் அதை மறந்துவிடுவார்கள். பிறகு எப்போது கருத்து சொல்வார்கள் என யாருக்குமே தெரியாது. மறுபடியும் மதுக்கடையைத் திறந்தால் ரஜினி மறியலுக்கு நிற்க வேண்டும். அதையெல்லாம் அவர் செய்ய மாட்டார். என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் ரஜினியை நல்ல மனிதராகப் பார்க்கிறேன். கமல்ஹாசன் கட்சியில் ஆளே இல்லை. அவ்வளவுதான் இவர்கள்.’’

‘‘தி.மு.க கார்ப்பரேட் நிறுவனத்தைப்போல் இயங்கத் தொடங்கியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளதே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. பிரஷாந்த் கிஷோரை மனதில் வைத்துக்கொண்டு இப்படி விமர்சனம் செய்கிறார்கள். பிரஷாந்த் கிஷோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு கட்சியினர் அழைத்தார்கள். அ.தி.மு.க-வின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. தி.மு.க-வுக்காக வந்துள்ளார். இதை அ.தி.மு.க-வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இப்படியெல்லாம் விமர்சிக்கிறார்கள். பாவம் அவர்கள்.’’

‘‘தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவி குறித்து உங்கள் கருத்து என்ன?’’

‘‘நான் ஏற்கெனவே பொருளாளராக இருந்தேன். பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதால் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தேர்தல் தேதியை நிர்ணயித்தபோதுதான் கொரோனா வந்து தடுத்துவிட்டது. கிணற்றுத் தண்ணீரை ஆறு கொண்டுபோய்விடாது. ‘தேதியை ஒத்திவையுங்கள்’ என்று சொன்னோம். அதன்படி, ‘60 நாள்களுக்குள் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற விதி, 120 நாள்களாகத் திருத்தப்பட்டுள்ளது. இனி பொதுக்குழு கூடும். போட்டியிருந்தால் தேர்தல் நடக்கும். போட்டியில்லாவிட்டால் ஒரு மனதாகத் தேர்ந்தெடுப்பார்கள்.’’