Published:Updated:

` ரகசியமாகவா பணம் வாங்கினோம்...?!' - அறிவாலயத்தின் 40 கோடி கணக்கால் கொதிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் முடிந்ததும் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

Stalin
Stalin

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி அசைக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. அந்தக் கூட்டணி தேனியில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்தது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், சி.பிஐ, சி.பி.எம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

stalin
stalin

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் முடிந்ததும் தங்கள் செலவுக் கணக்கை, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். தி.மு.க தனது தேர்தல் செலவு குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது. அதில், கூட்டணிக் கட்சிகளுக்கான செலவு விவரங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 15 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும், இன்னொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தி.மு.க தேர்தல் செலவாக கணக்குக் காட்டியது ரூ.79.26 கோடி எனவும் அதில் இந்த மூன்று கட்சிகளுக்கு மட்டும் 40 கோடி ரூபாய் அளித்தாகவும் தகவல் வெளியானது.

மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடைய பிரசார செலவுகளுக்காக ரூ 58,93,994 ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் அதில் பெரும்பங்கு விமான செலவுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க நிதி வழங்கியது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். `` கட்சிக்கூட்டத்தில் இருக்கிறேன். பிறகு இதுகுறித்துப் பேசுகிறேன்" என்றார்.

அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனிடம் பேசினோம். ``இது வழக்கமான ஒன்றுதான். கூட்டணி கட்சிகளுக்கு உதவுவது காலம்காலமாக நடைமுறையில் உள்ளதுதான். பணப் பரிமாற்றம் வங்கி மூலம் நடந்துள்ளது. இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை.

ஏதோ ஓர் அறையில் தனிப்பட்ட முறையில் ரகசியமாகப் பணம் கைமாறப்பட்டிருந்தால்தான் அது வேறு. ஆனால், அப்படி நடக்கவில்லை. வேண்டுமென்றே எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்” என்றவரிடம், ` உங்கள் கட்சி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இதுகுறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளதா?' என்றோம்.

` ரகசியமாகவா பணம் வாங்கினோம்...?!' - அறிவாலயத்தின் 40 கோடி கணக்கால் கொதிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்

அதற்குப் பதிலளித்த முத்தரசன், ``இன்னும் நாங்கள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. அதில் நிச்சயம் முழு தகவல்களும் இடம்பெறும்" என்றார்.

அறிவாலயத்தின் நிதியுதவி குறித்துப் பேசும் தி.மு.க நிர்வாகிகளும், `` இது வழக்கமான நடைமுறைதான். வெளிப்படையாக நடந்துள்ள நிதியுதவி இது. ஆனால், தேவையில்லாமல் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படிக் கிளப்பிவிடுகிரார்கள்” என்றனர்.

தி.மு.க தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து விளக்கம் பெற கொ.ம.தே கட்சி ஈஸ்வரனைத் தொடர்பு கொண்டோம். அவரிடம் இருந்து உரிய பதில் வரவில்லை. இதுதொடர்பாக, அவர் தரப்பில் விளக்கம் அளித்தால், உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்.

மக்களவைத் தொகுதிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வீதமும், இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தலா 20 லட்சம் வீதமும் செலவு செய்திருப்பதாகத் தி.மு.க தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.