அலசல்
சமூகம்
Published:Updated:

கனிம வளம்... காற்றாலை... பேனா சிலை... மீனவர்களுக்கு எதிராக செயல்படுகிறதா தி.மு.க அரசு?

கனிம வளம்
பிரீமியம் ஸ்டோரி
News
கனிம வளம்

மீனவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் தி.மு.க-வுக்குக் கிடையாது

`பா.ஜ.க அரசின் மீனவர்களுக்கு எதிரான திட்டங்களிலிருந்து தி.மு.க எங்களைக் காப்பாற்றும் என நினைத்து ஓட்டுப் போட்டோம். ஆனால், எங்கள் முதுகில் குத்திவிட்டது தி.மு.க அரசு’ என்று கொந்தளிக்கிறார்கள் தமிழ்நாட்டு மீனவர்கள்.

``உலக வர்த்தகக் கூட்டமைப்புடன் சேர்ந்துகொண்டு, மீனவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவர முயன்ற கடற்கரை மேலாண்மைச் சட்டம் 2020, தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம் 2021, ஆழ்கடல் மீன்பிடிச் சட்டம், கடல்நீர் வழிப்பாதைச் சட்டம் போன்ற நாசகாரச் சட்டங்களை நிறுத்திவைக்கக் கோரி டெல்லி வரை சென்று போராடிவிட்டோம். ஒன்றிய மீன்வள அமைச்சரே, ‘உங்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறோம், மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்கிறோம்’ என்று கூறி தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறார். ஆனால், தமிழ்நாடு அரசோ கொஞ்சமும் இரக்கமில்லாமல் தன்னிச்சையாகவும், ஒன்றிய அரசுடன் கூட்டுச் சேர்ந்தும் மீனவர்களுக்கு எதிராகப் பல திட்டங்களை அறிவித்து அநியாயம் செய்கிறது’’ என பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார் தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி.

கனிம வளம்... காற்றாலை... பேனா சிலை... மீனவர்களுக்கு எதிராக செயல்படுகிறதா தி.மு.க அரசு?

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ``கடலையும் கடற்கரையையும் கார்ப்பரேட்டுக்கு ஏகபோக குத்தகைக்குக் கொடுக்கும் நாசகாரத் திட்டங்களை, கடந்த ஒன்றரை ஆண்டாகச் செயல்படுத்திவருகிறது தி.மு.க அரசு. குறிப்பாக, கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரையுள்ள மீன்பிடிப் பகுதியை எட்டு மண்டலங்களாகப் பிரித்து, சுமார் 8,000 ச.கி.மீ அளவுக்குக் கடலில் காற்றாலை அமைக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. கடலில் காற்றாலை போட்டால் மீனவர்கள் எங்கு சென்று மீன்பிடிப்பது... இதனால் ஏற்படும் விபத்து, வலைகள், படகுச் சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அரசு மீனவர்களின் கருத்தையும் கேட்கவில்லை.

கனிம வளம்... காற்றாலை... பேனா சிலை... மீனவர்களுக்கு எதிராக செயல்படுகிறதா தி.மு.க அரசு?
கனிம வளம்... காற்றாலை... பேனா சிலை... மீனவர்களுக்கு எதிராக செயல்படுகிறதா தி.மு.க அரசு?

தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட கடற்கரையோரங்களில் புதைந்து கிடக்கும் அரியவகை கனிமங்களை, வணிக நோக்கில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த மத்திய அரசின் ‘இந்தியன் ரேர் எர்த்ஸ்’ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. `இந்தக் கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது வெளிப்படும் கதிர்வீச்சால் சுற்றுவட்டார மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். கனிமத்தை அள்ளுவதால் கடல் அரிப்பு ஏற்படுவதோடு, கழிவுகளை மீண்டும் கடலில் கொட்டுவதால் மீன் வளமும் பாதிக்கப்படும். ஏற்கெனவே சில தனியார் நிறுவனங்கள் இந்தப் பகுதிகளில் தாதுமணல், கனிம வளங்களை எடுத்து கடற்கரையையே நாசமாக்கியிருக்கும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசே இதை அதிகாரபூர்வமாகச் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பது வேதனை. மேலும், அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கம், ஒன்றிய அரசின் மரக்காணம் முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம், கடலில் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டம் போன்றவற்றிலும் தி.மு.க அரசு மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது. இவை தவிர சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவரவும் முனைப்பு காட்டுகிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டங்களிலிருந்து மீனவர்களை தி.மு.க காப்பாற்றும், காவல் அரணாக நிற்கும் என நினைத்தோம். ஆனால், பா.ஜ.க மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு எங்கள் முதுகில் குத்திவிட்டது இந்த அரசு!” எனக் குற்றம்சாட்டினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அதேபோல, தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் கு.பாரதி, ``மெரினா கடலில் அரசு செலவில் கருணாநிதியின் பேனாவுக்கு ரூ.81 கோடியில் சிலை வைக்கப்போகிறார்கள். ஏற்கெனவே, வடசென்னையின் தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளில் கலந்து சென்னைக் கடலை மாசுபடுத்தி வருகின்றன. மீன்பிடி குறைந்து, வலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளே மிஞ்சுகின்றன. மேலும், சென்னை கடலையொட்டி எழுப்பப்பட்ட துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்வதும், பிற பகுதிகளில் கடலரிப்பும் ஏற்பட்டுவருகிறது. பேனா சிலை இந்தப் பிரச்னைகளின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

கனிம வளம்... காற்றாலை... பேனா சிலை... மீனவர்களுக்கு எதிராக செயல்படுகிறதா தி.மு.க அரசு?

இது குறித்து, அ.தி.மு.க முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ``மீனவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் தி.மு.க-வுக்குக் கிடையாது. உதாரணமாக, கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில், `கச்சத்தீவைத் தாரை வார்த்து கொடுத்துவிட்டீர்கள்... அதனால்தான் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்’ என நான் தெரிவித்தேன். அதற்கு பதிலளித்த கருணாநிதி, `மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள்’ என்று கொச்சைப்படுத்திப் பேசினார். ஸ்டாலினும், `மீனவ மக்களை, பழங்குடி மக்களாக அறிவிப்போம்’ எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரான திட்டங்களையெல்லாம் கொண்டுவந்திருக்கிறார். இப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீனவர் நலன், மீன்வளம் பற்றி அக்கறையே கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் எத்தனை மீனவ கிராமங்கள் இருக்கின்றன, மீனவர்களின் பிரச்னை என்ன.... அவர்களுக்கு என்ன மாதிரியான திட்டங்களைக் கொண்டுவருவது என்று எதுவுமே தெரியாது. மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்தால்தானே இதுவெல்லாம் புரியும். எதுவுமே தெரியாதவரை வைத்து என்னதான் செய்யமுடியும்?” எனக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

 சின்னத்தம்பி, கு.பாரதி, ஜெயக்குமார்
சின்னத்தம்பி, கு.பாரதி, ஜெயக்குமார்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டோம். ``மீனவர்களை பாதிக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் முதல்வர் நிச்சயம் கொண்டுவர மாட்டார். மீனவர்களின் கருத்தைக் கேட்காமல் எதையும் முதல்வர் நிறைவேற்ற மாட்டார். மீனவர்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஒன்றிய அரசுடன் கூட்டுச் சேர்ந்துதான் இப்படித் செய்கிறோம் என்று சொல்வது மிகவும் தவறு.

மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் மீன்வளத்துறை அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. அது நிர்வாகம்தான்! மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன் இப்போது மருத்துவத்துறை அமைச்சராக இல்லையா? அப்படித்தான், சாதி, மதம், தொழில் பார்க்காமல்தான் ஒவ்வோர் அமைச்சரையும் முதல்வர் தேர்ந்தெடுத்திருக் கிறார். மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார்” என்றார்.

முடிவெடுப்பாரா முதல்வர்?