Published:Updated:

கால் புண்ணை பார்க்காமல் கண்மூடிக்கொள்ளும் திராவிட மாடல் அரசும், தி.மு.க நிர்வாகிகளும்! #VoiceOfAval

முதல்வர் ஸ்டாலின்

`அடிமைகளாகக் கிடந்த உங்களுக்கு எங்கள் அரசு என்னவெல்லாம் செய்தது, செய்கிறது தெரியுமா?’ என்ற `பெருந்தன்மை’ தொனியில் பெண்களிடமும், பட்டியலின மக்களிடமும் பேசும் அருவருக்கத்தக்க மேடை பேச்சுகளை, முழக்கங்களை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள் முதல்வரே!

கால் புண்ணை பார்க்காமல் கண்மூடிக்கொள்ளும் திராவிட மாடல் அரசும், தி.மு.க நிர்வாகிகளும்! #VoiceOfAval

`அடிமைகளாகக் கிடந்த உங்களுக்கு எங்கள் அரசு என்னவெல்லாம் செய்தது, செய்கிறது தெரியுமா?’ என்ற `பெருந்தன்மை’ தொனியில் பெண்களிடமும், பட்டியலின மக்களிடமும் பேசும் அருவருக்கத்தக்க மேடை பேச்சுகளை, முழக்கங்களை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள் முதல்வரே!

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

`திராவிட மாடல் அரசு’ என்பதை தன் அடையாளமாக நிறுவ முயன்று வருகிறது தமிழகத்தை ஆளும் தி.மு.க. ஆனால், சமீபத்தில் அடுத்தடுத்து சர்ச்சையாகி வரும் தி.மு.க அமைச்சர்களுடைய பேச்சும் செயல்பாடுகளும், திராவிட அரசியல் கோட்பாடு அவர்கள் கட்சிக்குள்ளேயே காலாவதியாகி வருவதையே காட்டுகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் அங்குள்ள பெண்களிடம் பேசும்போது, தி.மு.க அரசு பெண்களுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே வருகிறார். அப்போது, `பஸ்ஸுல ஓசியில போறீங்க’ என்று, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுகிறது அரசு. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு அரசு வழங்கும் சம்பளம் 30,000 ரூபாய். காம்பென்சேட்டரி அலவன்ஸ் (அகவிலைப்படி), டெலிபோன் அலவன்ஸ், வாகன அலவன்ஸ் உட்பட அலோவன்ஸ்கள் மட்டும் 1,05,000 ரூபாய். சட்டசபை கூட்டங்களில் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கான தினசரி படி ரூ.500. தனியாக அல்லது துணையுடன் மேற்கொள்ளும் ரயில் பயணத்துக்கு என ஒரு வருடத்துக்கு 20,000 ரூபாய் வழங்கப்படுகிறது. லெட்டர் பேடு, பேனா உள்ளிட்ட மாதாந்தர ஸ்டேஷனரி சப்ளை முதல் மருத்துவக் காப்பீடு வரை உண்டு.  

சலுகை - சித்திரிப்பு
சலுகை - சித்திரிப்பு

மாதத்துக்கு ரூபாய் 250 மட்டுமே வாடகையாக வசூலிக்கப்படும் எம்.எல்.ஏ விடுதியில், கேன்டீன் சேவை, வங்கி சேவை, மருத்துவ சேவை, ஏசி ஜிம் சேவை, யோகா வகுப்புகள், பேட்மின்டன் கோர்ட், அறையில் எல்.இ.டி டிவி, ஏ.சி, செட் - டாப் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உண்டு.

காஸ் சிலிண்டர் முதல் லைசன்ஸ் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு, விண்ணப்பிக்கும் பட்சத்தில் '0.32 ரிவால்வர்' வரை வழங்கப்படுகிறது. தவிர, 25,000 பென்ஷன் உட்பட முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கான சலுகைகளும் உண்டு.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

இத்துணையும் உங்களுக்கு எப்படி வழங்கப்படுகிறது அமைச்சர் பொன்முடி? மக்களின் வரிப்பணத்தில். 1989 - 1991 சுகாதாரத்துறை அமைச்சர், 1996 - 2001 போக்குவரத்துத் துறை அமைச்சர், 2006 - 2011 உயர் கல்வித்துறை அமைச்சர், 2021 முதல் உயர் கல்வித்துறை அமைச்சர் என, அமைச்சர் பணியாற்றியதற்காக மக்கள் உங்களுக்கு 14 வருடங்கள் சம்பளமும், சிறப்பு வசதிகளும் தந்திருக்கிறார்கள். சாமானியன் அர்ப்பணிப்புடன் உழைத்துதான் தன் சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்பதுபோல, அரசியல்வாதிகளுக்கு எந்த அவசியமும் இல்லை. அந்த வகையில் அரசியல்வாதிகள் தொகுதிப் பணி செய்தாலும், செய்யாவிட்டாலும் உங்கள் சம்பளமும் படிகளும், சிறப்பு வசதிகளும் ஆட்சிக்காலம் வரை கேள்வியற்று தக்க மரியாதையுடன் உங்களுக்கு வழங்கப்படும், மக்களாகிய நாங்கள் வழங்குகிறோம். அனைத்தையும் பெற்றுக்கொண்டு, எங்கள் பெண்களைப் பார்த்து சொல்கிறீர்கள்... `ஓசி’ என்று.

`அது எதார்த்தமான பேச்சு. அமைச்சர் கூட்டத்திலிருந்த பெண்களை நோக்கி, `இப்போ பஸ்ல எப்படி போறீங்க?’ என்று கேட்க, அவர்களிடமிருந்து `ஓசியில...’ என்று பதில் வர, அதைத்தான் அமைச்சர் குறிப்பிட்டு பேச்சை தொடர்ந்தார்’ என்ற முட்டுகளுடன் வருகிறார்கள் உடன் பிறப்புகள். அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம், வரலாற்றில் முனைவர் பட்டம், பேராசிரியர் பணி அனுபவமும், 1989-ம் ஆண்டு முதல் தி.மு.க-வில் முக்கிய பொறுப்புகள் வகித்து வரும் சீனியருமான நீங்கள்... என்ன செய்திருக்க வேண்டும்? அந்தப் பெண்கள் அறியாமையில் அதை ஓசி என்று குறிப்பிட்டாலும், `ஓசி என்று சொல்லாதீர்கள், அப்படிச் சொல்வது தவறு. உண்மையில் அது உங்கள் உரிமை’ என்று அல்லவா அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்?‘

பிங்க் பஸ்
பிங்க் பஸ்

`தேர்தலின்போது இலவசங்களை அறிவிக்கக் கட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என பா.ஜ.க உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தங்களையும் ஒரு தரப்பாக இணைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது தி.மு.க. அதில், `பல்வேறு தரப்பு மக்களைக்கொண்ட நாட்டில், ஒவ்வொரு பகுதி மக்களுக்கான தேவை வெவ்வேறாக இருக்கிறது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்ப மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கின்றன. இதை இலவசங்களாகக் கருத முடியாது. வருமானம், அந்தஸ்து, வசதி வாய்ப்புகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், சமூக ஒழுங்கு மற்றும் பொருளாதார நீதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.  

இப்படி, `தேர்தலில் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள்’ என்பதை, அவை இலவசம் அல்ல, மக்கள் நலத் திட்டங்கள், மாநிலத்தின் கனவுத் திட்டங்கள் என்று உச்ச நீதிமன்றம் வரை விளக்கம் கொடுக்கிறது தி.மு.க. ஆனால், தனது அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர், பெண்கள் நலத்திட்டத்தை `ஓசி’ என்று குறிப்பிடும்போது, அதற்கான எந்தக் கண்டிப்பும் கட்சித் தலைமையிடமிருந்து இல்லை.

மகளிர்
மகளிர்

இந்தச் சம்பவம் மட்டுமல்ல, `சமூக நீதி’ என்று சொல்லிக்கொண்டு அதற்கு எதிரான செயல்பாடுகளை பொதுவெளியிலேயே தங்கள் அமைச்சர்கள் வெளிப்படுத்தியபோதும், தன் வாயில் பெரிய பூட்டை போட்டுக்கொண்டு ஸ்டாலின் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்து வருவதற்கு என்ன அர்த்தம் கொள்ள வேண்டும் நாம்?

கடந்த ஆகஸ்ட் மாதம், தலைமைச் செயலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை மேயர் பிரியா ராஜனை அமைச்சர் கே.என்.நேரு பொது நிகழ்ச்சியில் ஒருமையில் பேசிய வீடியோ சர்ச்சையானது. அப்போது நாம் எதிர்பார்த்தது போலவே, `அமைச்சர் ஒருமையில் பேசவில்லை, என்னை உரிமையில் பேசினார்’ என்று பிரியாவை வைத்தே ஒரு விளக்கம் வெளியிட வைத்தனர். `சொல்லும்மா’ என்று அதட்டல் தொனியில் நேரு பேசுவது என்ன வகை நாகரிகம்?

விழாவில் அமைச்சர் நேருவுடன் 
மேயர் பிரியா
விழாவில் அமைச்சர் நேருவுடன் மேயர் பிரியா

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டபோது, `இது வெறும் பிரதிநிதித்துவ அடையாள அரசியலே’ என்ற கருத்துடன் அதை எதிர்த்தது தி.மு.க. ஆனால், `பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயர், வடசென்னையைச் சேர்ந்த முதல் மேயர்’ என்பதெல்லாம் உண்மையில் பிரதிதித்துவ அடையாள அரசியலே என்பது, பிரியா - நேரு வீடியோ சர்ச்சையில் வெளுத்துப்போனது. அதைவிடக் கொடுமையாக, இந்த சர்ச்சையிலும் நேருவிடமிருந்தோ, கட்சித் தலைமையிடமிருந்தோ ஒரு விளக்கம்கூட இல்லை. `பெண் தொடர்பான, அதுவும் பட்டியலினப் பெண் தொடர்பான சர்ச்சைக்கு எல்லாம் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம், கடமை தனக்கில்லை’ என்பதுதானே அதற்கு அர்த்தம்?      

அமைச்சர் பொன்முடி இந்த மாதம், விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, `பெண்களுக்கு திராவிட மாடல் அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை’ அங்கும் எடுத்துக்கூற விரும்பியிருக்கிறார். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரான, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைப் பார்த்து, `ஏம்மா… நீ எஸ்.சி தானே?’ என்று அவர் கேட்டது அதிர்ச்சி. ஒரு பொது மேடையில் வைத்து, ஒடுக்கப்பட்ட சாதியல்லாத ஒருவர், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேந்தவரை, `நீ எஸ்.சிதானே?’ என்று கேட்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயவல்ல குற்றம்.

சாதி பாகுபாடு
சாதி பாகுபாடு

அதைவிட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, இத்தனை வருடங்களாகத் திராவிட பாசறையில் வளர்ந்ததாக தங்களை மார்தட்டிக்கொள்ளும் இவர்களுக்கு எல்லாம் உண்மையில் சாதிய ஆதிக்கம் துளியும் அகலவில்லை என்பதைத்தான். `நீ என்ன சாதியென்று ஒருவரிடம் கேட்கக்கூடாது’ என்ற பால பாடமேகூட அவர்களுக்கு மனதில் பதியவில்லை எனில், சாதி ஆதிக்கத்தில் இருந்து அவர்கள் நகரவே இல்லை, கருத்தியல் மாற்றம் அவர்களுக்குள் நிகழவே இல்லை என்றே அர்த்தம். மேலும், ஒன்றியக் குழு தலைவரான அந்தப் பெண்ணை ஒருமையில் அழைக்கும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது? ஆக, ஆணாதிக்கமும் பொதுவெளியில் வெரிஃபைடு. இதற்குத் தலைமையின் ரியாக்‌ஷன்..? மியூட்!

சில நாள்களுக்கு முன், தன்னை சந்திக்க வந்த நாடோடியின (நரிக்குறவர்) சமூக பிரதிநிதிகளை, தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சாதிய ஆணவத்துடன் எதிர்கொண்டதாக சர்ச்சை ஆனது. தமிழக `நரிக்குறவர்’ மற்றும் குருவிக்காரர் சமூக மக்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், வட மாநிலத்தைச் சேர்ந்த குருவிக்காரர் இன மக்களை `நரிக்குறவர்’ என்ற பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு, விருதுநகரில் `நரிக்குறவர்’ இனத்தை சேர்ந்த மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து போராடினர். அவர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை பார்க்கச் சென்றபோது, அமர நாற்காலி வழங்கப்படாமல் நிற்கவைத்தபடி அவர்களிடம் அமைச்சர் பேசுவதுபோன்ற புகைப்படம் வெளியாகி கண்டனத்துக்கு உள்ளானது. அமைச்சரின் இந்தத் தீண்டாமை செயல்பாட்டுக்கு எதிராக அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் கோரிக்கை
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் கோரிக்கை

இம்முறையும் அரசு ‘பாயின்ட் வரட்டும் பாயின்ட் வரட்டும்’ என்று வாய்மூடுமா, விளக்கம் கொடுக்குமா என்று எதிர்பார்த்த நிலையில், `கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளைத் திரித்து, மறைத்து, வெட்டி, ஒட்டி, மோசடி செய்து வெளியிடும் நச்சுக் கூட்டம் அதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது’ என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

`திராவிட மாடல்’ தி.மு.க அரசிலும், கட்சியிலும் உள்ள கால் புண் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது. கட்சி நிர்வாகிகளுக்குத் தேவை கண்டிப்பு எனும் கசப்பு வைத்தியம். மாறாக, கட்சிக்கு அவப்பெயராகிவிடும் என அவர்களை விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்பது புண்ணை புரையோடவே வைக்கும். உங்கள் கட்சி பிரச்னை பற்றி எங்களுக்குக் கவலையில்லை.

ஆனால் ஆட்சி பிரச்னை என்று வரும்போது...

`அடிமைகளாகக் கிடந்த உங்களுக்கு எங்கள் அரசு என்னவெல்லாம் செய்தது, செய்கிறது தெரியுமா?’ என்ற `பெருந்தன்மை’ தொனியில் பெண்களிடமும், பட்டியலின மக்களிடமும் பேசும் அருவருக்கத்தக்க மேடை பேச்சுகளை, முழக்கங்களை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள் முதல்வரே! அப்படி பேசிய அனைவரையும் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பதவிகளைக் கொடுத்த நீங்களும் மன்னிப்புக் கேளுங்கள். இப்படி பேசியதற்காக ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுங்கள்.

திராவிட மாடல், தமிழ் மாடல் அல்லது தேசிய மாடல் என்பவற்றைவிட  மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மாடல்… எவ்வுயிரையும் தம்முயிர் போல் மதிக்கும் மாடல்தான் என்றைக்கும் தேவை!

முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பின்குறிப்பு: இவர்களெல்லாம் இப்படி பேசியதற்காக தி.மு.க-விலோ, அதன் கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளோ பேச்சுக்குக்கூட ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை. அது அவர்களின் கூட்டணி தர்மமாக இருக்கலாம். ஆனால், அதி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட வீரதீர சூரர்களும்கூட வாய்மூடிக் கிடப்பதேன்? ஒருவேளை ஆணாதிக்க, சாதி ஆதிக்க கூட்டணி தர்மமோ?!

- அவள்

#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச் சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!