Published:Updated:

எம்.ஜி.ஆர். சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை: அதிமுகவை அதிரவைத்த திமுக அரசின் 'மூவ்'

எம்.ஜி.ஆர் - கருணாநிதி

சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி ஆர் சிலைக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை: அதிமுகவை அதிரவைத்த திமுக அரசின் 'மூவ்'

சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி ஆர் சிலைக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Published:Updated:
எம்.ஜி.ஆர் - கருணாநிதி

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளான மே 3-ம் தேதி, ``தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்துச் சொல்ல, ``மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை’ எனப் பதிலளித்தார் மு.க.ஸ்டாலின். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டின் அரசியல் களம், கடந்த காலங்களைப் போல் இருக்காது என்கிற எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது அவரின் அந்தப் பதில். எதிர்பார்த்ததைப் போலவே, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களான, பா.ம.க நிறுவனர், ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டவர்களிடம் தொலைபேசி வழியாக வாழ்த்துப் பெற்றார் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல, தன் தாயார் தாயாளு அம்மாள், ஆற்காடு வீராசாமி, ஆகியோரிடம் நேரில் சென்று வாழ்த்துப் பெற்றது மட்டுமல்லாமல் ஆர்.எம்.வீரப்பன், சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்ற தோழமைக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்தவரிசையில், எம்.ஜி.ஆருக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செய்யப்படும் என அறிவித்து அதிமுகவினரை மட்டுமல்லாது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மு.க.ஸ்டாலின். அந்தவகையில், சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி ஆர் சிலைக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தவிருப்பதாகவும் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தல் காலத்தில், எம்.ஜி.ஆர் என் பெரியப்பா என்றும் அவருடனான நினைவுகள் குறித்தும் ஸ்டாலின் பகிர்ந்துகொண்டபோது தேர்தலுக்காக அவர் இப்படிப் பேசிவருவதாக அதிமுகவினர் எதிர்வினை ஆற்றினர். ஆனால், தற்போதைய இந்த அணுகுமுறை, தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத ஒரு நாகரிகமான அரசியல் அணுகுமுறை என அரசியல் விமர்சகர்கள் இந்தச் செயலைப் பாராட்டி வருகின்றனர். அதேவேளை, ```ஆட்சிக்கு வந்தபிறகு தலைவர்கள் பலருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பல அறிவிப்புகளைச் செய்தார் ஸ்டாலின். அது அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை தன் ஆதரவாளர்களாக மாற்றுவதற்கான ஒரு அரசியல்தான். குறிப்பாக வன்னிய சமூகத்தைச் சார்ந்து பல அறிவிப்புகளைச் செய்தார் ஸ்டாலின். அந்தவரிசையில், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காகவும் எம்.ஜி.ஆர் வாக்குவங்கியைத் தனதாக்குவதற்குமான ஒரு வேலைதான் இது '' என்கிற விமர்சனங்களையும் சிலர் முன்வைக்கின்றனர்.

MGR
MGR

இந்தநிலையில், முதல்வரின் இந்த அணுகுமுறை குறித்து , திமுக வட்டாரத்தில் பேசினோம்,

`` இப்போதும் சரி தேர்தலுக்கு முன்பாகவும் சரி எம்.ஜி.ஆர் மீதிருக்கும் உண்மையான மரியாதையைத்தான் எங்கள் தலைவர் வெளிப்படுத்தி வருகிறார். ஏன், எம்.ஜி.ஆர் - கலைஞர் இருவரும் அரசியல் செய்த காலகட்டத்தில் நாகரிகமான அரசியல்தான் நிலவி வந்தது. ஜெயலலிதா அதிமுகவுக்கு பொறுப்பேற்றபிறகுதான் நிலைமை தலைகீழாக மாறியது. மீண்டும் ஒரு நாகரிகமான அரசியலை முன்னெடுக்க எங்கள் தலைவர் விரும்புகிறார். அதுமட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் எம்.ஜி.ஆரின்மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் எங்கள் தலைவர் ஸ்டாலின், அவரின் படங்களை விரும்பிப் பார்க்கும் அவரின் ரசிகரும்கூட. எம்.ஜி.ஆரே என்ன படம் பார்த்தாயா என்று தனியாகக் கூப்பிட்டுக் கேட்குமளவுக்கு இருவருக்குமான புரிதல் இருந்திருக்கிறது.

தவிர, எம்.ஜி.ஆரின் கொடைகுணத்தை பறைசாற்றும் விதத்தில் அவரின் நினைவிடத்தை குடை போன்று அமைத்தவர் கலைஞர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் சிலையும் எங்கள் ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டதுதான். இப்போது மட்டுமல்ல, வாக்குவங்கிக்காகவோ தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காகவோ தி.மு.க எப்போதும் செயல்பட்டது இல்லை. எங்கள் தலைவர் ஸ்டாலினும் அப்படிப்பட்டவர் அல்ல'' என்கிறார்கள்.

தி.மு.க - அ.தி.மு.க
தி.மு.க - அ.தி.மு.க

அதிமுக வட்டாரத்தில் பேசினோம், ``எல்லோரையும் போல ஸ்டாலினும் எம்ஜி.ஆரை தேர்தலுக்கு முன்பாகச் சொந்தம் கொண்டாடினார். ஆனால், எம்.ஜி.ஆரின் அபிமானிகள் இரட்டை இலைக்குத்தான் வாக்களித்தனர். எம்.ஜி.ஆரின் பெயரைச் சொந்தம் கொண்டாடும் உரிமை யாருக்கு இருக்கிறது என அவரின் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். முதல்வரின் இந்த அணுகுமுறையில் அரசியல் இல்லாமல் இல்லை. ஆனால், அரசு சார்பாக ஒரு விஷயத்தை முன்னெடுக்கும்போது அதற்கு எதிராகக் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது என்பதற்காகவே எங்கள் தலைவர்கள் அமைதியாக இருக்கின்றனர். அதேபோல, எம்.ஜி.ஆர் அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர் என்பதிலும் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism