Published:Updated:

பதுங்கும் தி.மு.க - அச்சமா... வியூகமா?

நவம்பர் 5-ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் பிரதமர் மோடியின் உரையை எல்.இ.டி திரை அமைத்து பா.ஜ.க-வினர் ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

ஏப்ரல் 2018-ல் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, நகரெங்கும் கறுப்பு பலூனைப் பறக்கவிட்டு பிரதமரையே தெறிக்கவிட்டது தி.மு.க. அக்கட்சியின் எதிர்ப்பு காரணமாக, சென்னை ஐஐடி வளாகத்தின் சுவரைத் துளையிட்டு, பிரதமரின் கான்வாய் பயணித்தது வரலாறு. ‘அப்படியெல்லாம் பா.ஜ.க-விடம் மல்லுக்கட்டிய தி.மு.க., தற்போது மத்திய அரசிடம் பதுங்கத் தொடங்கியிருக்கிறதோ’ என்கிற சந்தேகத்தை முன்வைக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு நியமனம் உள்ளிட்ட சில சம்பவங்கள்தான் தி.மு.க-வின் மீது இந்தச் சந்தேக ரேகைகள் படரக் காரணமாகியிருக்கின்றன!

பாலகுருசாமி
பாலகுருசாமி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்குழுவின் ஒருங்கிணைப் பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி. மத்திய அரசின் மும்மொழிக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவாக, ஆகஸ்ட் 2020-ல் பாலகுருசாமி கருத்து தெரிவித்திருந்த சமயத்தில், “தான் ஒரு கல்வியாளர் என்ற நிலை தாண்டி, பழுத்த அரசியல்வாதிபோல, தனது இந்தி மொழி மீதான விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார் பாலகுருசாமி. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கைக்கு அவர் பச்சைக்கொடி காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று கடுமையாகச் சாடியிருந்தார் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி. இன்று அந்த பொன்முடி மாநில உயர்கல்வித்துறை அமைச்சர். அவர் கட்டுப்பாட்டுக்குள் வரும் உயர்கல்வித்துறைதான் பாலகுருசாமியை ‘துணைவேந்தர் தெரிவுக்குழு’-வின் ஒருங்கிணைப் பாளராக நியமித்திருக்கிறது. இந்த முடிவை ஆளுநர் மாளிகைதான் எடுத்ததாக அதிகாரிகள் காரணங்களை அடுக்குகிறார்கள். இதே வழிமுறையில்தான் சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக்கினார் அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதைக் கண்டித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘கல்வியைக் காவிமயமாக்க வேண்டாம்’ என்றார். ‘அன்று உரக்கக் குரல் எழுப்பிய தி.மு.க., இன்று மெளனம் காப்பது ஏன்?’ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. ‘மத்திய அரசிடம் தி.மு.க பதுங்குவதன் பின்னணி, அச்சமா... வியூகமா?’ என்கிற விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடாகியிருக்கிறது.

முஸ்தஃபா
முஸ்தஃபா

“எதிர்த்தால் சிக்கல் வரும்...” அச்சத்தில் தி.மு.க!

‘தமிழ்நாடு முஸ்லிம் லீக்’ தலைவர் முஸ்தஃபா நம்மிடம் பேசுகையில், “பா.ஜ.க-விடம் தி.மு.க பயந்துகொண்டுதான் இருக்கிறது. எடப்பாடி முந்தைய ஆட்சியில் எப்படிச் செயல்பட்டாரோ, அதேபோலத்தான் ஸ்டாலினும் செயல்படுகிறார். முந்தைய ஆட்சிக்காலத்தில் தி.மு.க செய்த ஊழல்கள், அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு வழக்குகள் எனப் பல்வேறு ஆதாரங்களை மோடி கையில் வைத்திருக்கிறார். தி.மு.க அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள்மீது அமலாக்கப் பிரிவில் வழக்குகள் உள்ளன. எனவே, ‘நேரடியாக மத்திய அரசை எதிர்த்தால் சிக்கல் வந்துவிடுமோ...’ என்று ஸ்டாலின் அச்சப்படுகிறார்.

ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தேர்தல் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களுடன் இன்றுவரை தொடர்பிலும் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் சித்தாந்தங்களை மென்மையாக தி.மு.க கையாள்கிறது என்பதில் சந்தேகமில்லை” என்றார் காட்டமாக. இதையொத்த கருத்து தி.மு.க-வுக்குள்ளும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அரியணை ஏறியவுடன், தாங்கள் ஏறிவந்த சித்தாந்தப் பாதையை தி.மு.க மறந்துவிட்டதாக அக்கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் விமர்சிக்கிறார்கள்.

பதுங்கும் தி.மு.க - அச்சமா... வியூகமா?

கைதுசெய்யப்படாத ஹெச்.ராஜா... புறக்கணிக்கப்பட்ட பெரியாரின் புத்தகம்!

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர், “இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை இழிவுபடுத்திப் பேசியதாக பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா மீது 2018-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த அக்டோபர் 7-ம் தேதி அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை நீதிமன்றம். உத்தரவு வந்தவுடன் அரசு ஆக்‌ஷனில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ஹெச்.ராஜா மீது கைவைக்க தி.மு.க அரசு அஞ்சியது. அக்டோபர் 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்ததில் தொடங்கி, வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபாடு, காளையார்கோயில் மருது பாண்டியர் குருபூஜையில் மரியாதை எனத் தமிழகம் முழுவதும் ஜாலியாக டூர் அடித்தார் ராஜா. நவம்பர் 15-ம் தேதி அவராக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்வரை, அவர்மீது அரசு கைவைக்கவே இல்லை. ‘ஹெச்.ராஜாவைக் கூட கைதுசெய்ய தி.மு.க-வுக்குத் திராணி இல்லையா?’ என தி.மு.க கட்சித் தொண்டர்களே கேள்வி எழுப்புகிறார்கள். இதில் உட்சபட்ச காமெடி என்னவென்றால், பிடிவாரன்ட்டில் இருக்கும்போதே ஹெச்.ராஜா, கவர்னரைச் சந்தித்து ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ என்று மனு கொடுத்ததுதான்.

நவம்பர் 5-ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் பிரதமர் மோடியின் உரையை எல்.இ.டி திரை அமைத்து பா.ஜ.க-வினர் ஒளிபரப்பியிருக்கிறார்கள். இது தொடர்பாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது போலீஸில் புகாரும் அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றிருந்தால், ‘கோயில் என்ன ஆர்.எஸ்.எஸ் கூடாரமா?’ என தி.மு.க கொதித்திருக்கும். ஆனால், இப்போது எந்தச் சத்தமும் இல்லை. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் இதைச் செய்ய யார் அனுமதி கொடுத்தது?

பதுங்கும் தி.மு.க - அச்சமா... வியூகமா?

திருப்பூரிலுள்ள, ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் புத்தகத்தை சிலர் அந்தப் பள்ளியின் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள். இதைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் பள்ளி முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, ‘அந்தப் புத்தகத்தை பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்ய மாட்டோம்’ என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பா.ஜ.க-வினரிடம் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். இதை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்திருக்கிறார். நடப்பது தி.மு.க ஆட்சி. பெரியாரின் கொள்கைகளை மதிப்பவர்தான் முதல்வராக இருக்கிறார். ஆனால், பா.ஜ.க போராட்டம் நடத்தியவுடன், அரசு அதிகாரிகள் வட்டாரம் பின்வாங்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் சமாதானமும் பேசுகிறது. ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்று அறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் அறிவித்தார். அப்பேர்ப்பட்ட பெரியாரின் புத்தகம் ஒரு கும்பலின் மிரட்டலால் புறக்கணிக்கப் படலாமா?

பதுங்கும் தி.மு.க - அச்சமா... வியூகமா?

நோ ரியாக்‌ஷன்... மெளனத்தில் தி.மு.க!

துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தச் சொல்லி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டெல்லி உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. அவரும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்களை அழைத்து முதற்கட்டமாகக் கூட்டமும் போட்டுவிட்டார். நவம்பர் 11-ம் தேதி, ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்’ என்றிருக்கிறார். பழைய தி.மு.க-வாக இருந்திருந்தால், இந்த வார்த்தைக்கு அறிவாலயத்திலிருந்து அர்ச்சனை அறிக்கை வந்து விழுந்திருக்கும். ஆனால், ஆட்சியிலிருப் பதால் ஆளுநரின் ஆய்வு முன்னெடுப்புகளைக் கண்டும் காணாததுபோலக் கடந்து செல்கின்றனர். அதேபோல ‘இல்லம் தேடிக் கல்வி திட்டமென்பது, மத்திய அரசின் கல்விக்கொள்கையோடு ஒத்திசைந்துபோவதே’ என தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க., திராவிடர் கழகம் உள்ளிட்டவை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அதை திராவிடத் திட்டமென்கிறார் முதல்வர். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மத்திய அரசைச் சீண்டி வந்தவர்கள், இப்போது அது குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை. இப்படி கடந்த ஆறு மாதங்களில், தி.மு.க-வின் நிலைப்பாடே மத்திய அரசைப் பகைத்துக்கொள்ள வேண்டாமென்கிற நோக்கத்தில்தான் அச்சத்தோடு பயணிக்கிறது” என்றனர்.

தி.மு.க-வின் இந்த அச்சப் பின்னணி இதோடு நிற்கவில்லை. சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் தொடர்பான சீராய்வு மனுவைச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘திட்டத்தின் பூர்வாங்கப் பணிகள் மீண்டும் தொடங்கும்’ என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கூறியுள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்தத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் தி.மு.க எம்.பி-க்கள் மனு அளித்தனர். அப்போது எதிர்த்து ஆவேசம் காட்டிய தி.மு.க., உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளிவந்திருக்கும் நிலையில், அது குறித்து எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. நவம்பர் 14-ம் தேதி, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ அமைப்புகளின் இயக்குநர் களுக்கான பதவிக்காலத்தை ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்க அனுமதி அளித்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. இதை இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கண்டித்துவரும் நிலையில், தி.மு.க-விடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எந்தெந்தக் கொள்கைகளுக்காகவெல்லாம் தி.மு.க ஓங்கி ஒலித்ததோ, அங்கேயெல்லாம் இப்போது அளவுக்கு அதிகமாக மௌனம் காக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பாக்கியராசன்
பாக்கியராசன்

‘நாம் தமிழர் கட்சி’யின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் பேசுகையில், “ஒன்றிய அரசு என்ற சொல்லாடல்தான் தி.மு.க-வின் அதிகபட்ச பா.ஜ.க எதிர்ப்பாக இருக்கிறது. அதைத் தவிர, கடந்த ஆறு மாத கால ஆட்சியில் பா.ஜ.க-வை எந்த இடத்திலும் அவர்கள் எதிர்க்கவில்லை. பா.ஜ.க-வை எதிர்ப்பதைப் போலத் தோற்றத்தைத்தான் உருவாக்கினார்கள். இந்த ஆட்சியின் தொடக்கத்தில், கொரோனா மீட்புப் பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்குத் தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதில் ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான சேவா பாரதியையும் அழைத்தார்கள். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க சித்தாந்தங்களை மக்களிடம் ஊடுருவ இவர்களே வழிவகை செய்தார்கள். அதுமட்டுமல்ல, சேவா பாரதி அமைப்பு நடத்திய விழாக்களில் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டனர். கேரளாவில் இந்த அமைப்பை அந்த மாநில அரசு அனுமதிக்கவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மாநில சுயாட்சி குறித்துப் பேசுபவர்கள், ஆளுநருக்கு எதற்காக பவர் பாயின்ட் பிரசன்டேஷன் அனுப்புகிறார்கள்? எப்படிப் பார்த்தாலும், இந்த அரசு பா.ஜ.க-வுக்குப் பணிந்துதான் போய்க்கொண்டிருக்கிறது” என்றார்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

“வீ ஆர் மார்ச்சிங்...” இது தி.மு.க-வின் வியூகம்!

‘நிச்சயமாக தி.மு.க பதுங்குவது அச்சத்தால் அல்ல அது வியூகம்’ என்கிறது ஆட்சியாளர்கள் தரப்பு. நம்மிடம் பேசிய மூத்த தி.மு.க அமைச்சர் ஒருவர், “எதிர்ப்பது ஒருவகை அணுகுமுறை என்றால், மென்மையாக, அதேசமயம் நம் பிடியை விட்டுக்கொடுக்காமல் மக்கள்நலனுக்காக இணைந்து செயல்படுவதும் ஒருவகை அணுகுமுறைதான். அதேசமயம், தி.மு.க-வின் அடிப்படை ஆதாரமான சித்தாந்தத்தில் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். உதாரணமாக, `இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எப்போதும் இடமில்லை. நீட் தேர்வு எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆளுநர் தலையீடு விஷயத்திலும் மாநில அரசின் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவில்லை. பா.ஜ.க தரப்பில் முன்னெடுக்கப்படும் மதம் தொடர்பான சர்ச்சைகளில், தி.மு.க பலியாகாது. அதேசமயம், மக்களின் ஆன்மிக உரிமைகளுக்காகப் பெரியாரின் வழியில் எப்போதும் தி.மு.க களத்தில் நிற்கும். மற்றொன்றையும் இங்கு கவனத்தில்கொள்ள வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி வந்தால் மட்டுமே, மாநில அரசை இடர்ப்பாடு இல்லாமல் நடத்த முடியும் என்பதுதான் யதார்த்தம். வெள்ள பாதிப்பால் மக்கள் துயரடைந்திருக்கும் நிலையில், நிவாரண உதவியை அறிவிக்கக்கூட முடியாத அளவுக்கு அரசின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக, சமீபத்தில் 805.92 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இதை அவசர காலத்துக்கு எடுத்து மடைமாற்றிக்கொள்ளலாம். ஆனால், நாளை ஆளுநரோ, மத்திய அரசோ அழைத்து, கணக்கு கேட்டால் தி.மு.க அரசுதான் விழிக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான், சித்தாந்தரீதியில் எப்போதும் எதிர்க்கவும், மக்கள்நலன் சார்ந்த நடைமுறையில் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கவும் முடிவெடுத்திருக்கிறார் முதல்வர்” என்றார். இது குறித்து தி.மு.கழக எம்.பி திருச்சி சிவாவிடம் பேசினோம். “நாங்கள் பயப்படவும் இல்லை. பதுங்கவும் இல்லை. வீ ஆர் மார்ச்சிங்...’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

“கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில், அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தல் முடிவுகள்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பலமாக எதிரொலிக்கும். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பா.ஜ.க ஆட்சியை இழந்தால், ஸ்டாலினிடம் பத்து மம்தா பானர்ஜியைப் பார்ப்பீர்கள்” என்றார் முதல்வருக்கு நெருக்கமான ஓர் அமைச்சர்.

தி.மு.க-வின் மௌனங்களும் மென்மைப் போக்கும் வியூகமா... அச்சமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு