Published:Updated:

புதிதாக 500 கலைஞர் உணவகங்கள்; திமுக அரசின் திடீர் முடிவின் பின்னணி என்ன?!

அம்மா உணவகம் - கலைஞர் உணவகம்

தமிழகத்தில் புதிதாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படவிருப்பதாக, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 500 கலைஞர் உணவகங்கள்; திமுக அரசின் திடீர் முடிவின் பின்னணி என்ன?!

தமிழகத்தில் புதிதாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படவிருப்பதாக, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
அம்மா உணவகம் - கலைஞர் உணவகம்

அம்மா உணவகம்:

கடந்த 2013-ம் ஆண்டு, சென்னையில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் மலிவு விலை உணவகத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் இந்தத் திட்டம் 73 இடங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்தது. இந்த நிலையில், இந்த மலிவு விலை உணவகம் `அம்மா உணவகம்' என்று சென்னை மாநகராட்சியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அம்மா உணவகம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அம்மா உணவகம் திட்டத்தைத் தொடங்கி வைத்த ஜெயலலிதா
அம்மா உணவகம் திட்டத்தைத் தொடங்கி வைத்த ஜெயலலிதா

மலிவு விலையில் மூன்று வேளையும் உணவு கிடைத்ததால், இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கூலி வேலை செய்பவர்கள் தொடங்கிப் பல ஏழை எளியோருக்கு இந்த உணவகம் பெரும் வரப்பிரசாதமாக மாறியது என்றே சொல்லலாம். இந்தத் திட்டத்துக்குக் கிடைத்த மக்களின் ஆதரவைத் தொடர்ந்து ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்கூட அம்மா உணவகம் போன்ற திட்டத்தை அந்த மாநில அரசுகள் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு:

தற்போது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த கொரோனா பேரிடர் காலத்திலும், சென்னை பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களிலும் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட இலவச உணவு, தமிழகத்தில் பலரின் பசியைப் போக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததுமே அம்மா உணவகம், கலைஞர் உணவகம் என்று பெயர் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

தி.மு.க., தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பே, சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டுவந்த அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதா படத்தைக் கிழித்தெறிந்து, அந்த உணவகத்தை தி.மு.க-வினர் சிலர் சூறையாடினர். இந்த விவகாரம் கட்சித் தலைமைக்குச் செல்ல, அந்தச் செயலில் ஈடுபட்ட கட்சி உறுப்பினர்களைக் கழகத்திலிருந்து நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை பெருமழை சமயத்தில் அம்மா உணவகத்தில் திடீர் விசிட் அடித்து உணவு எப்படியிருக்கிறது என்று முதல்வர் சோதனை செய்த சம்பவங்களும் நடந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்ச்சைகள்:

இந்தக் காட்சிகள் ஒருபுறம் நடக்க, இன்னொரு பக்கம் அம்மா உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள் என்ற சர்ச்சையும் கிளம்பியது. சென்னையிலுள்ள அம்மா உணவகங்களில் 10 நாள்களுக்கும் மேலாக இரவு சப்பாத்தி போடுவது நிறுத்தப்பட்டது. அதற்கு விளக்கமளித்த மாநகராட்சி, ``சென்னை மாநகராட்சியிலுள்ள 403 அம்மா உணவகங்களும், பல்வேறு நிதி நெருக்கடியிலும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இந்த உணவகங்களுக்குத் தேவையான அரிசியும் கோதுமையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகக் கிடைக்கின்றன.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, எண்ணெய், சமையலுக்குத் தேவையான பொருள்கள் கூட்டுறவுப் பண்டக சாலைகளிலிருந்து பெறப்படுகின்றன. கோதுமை, தனியார் ஆலைகளில்தான் மாவாக அரைக்கப்படும். தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, ஒருசில மண்டலங்களில் மட்டும் இரவு சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாகத் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. தற்போது அனைத்து உணவகங்களிலும் சப்பாத்தி கிடைக்கிறது. எந்த உணவகத்தில், எந்த ஊழியர்களும் நீக்கப்படவில்லை. அனைத்து உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தது.

கலைஞர் உணவகம்

இந்த நிலையில் சமீபத்தில், டெல்லியில் மாதிரி சமுதாய சமையற்கூடம் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படவிருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு அ.தி.மு.க சார்பில் அம்மா உணவகத்தை மூட தி.மு.க அரசு திட்டமிடுகிறது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. `அம்மா உணவகம் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தி.மு.க செயல்படுகிறது' என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

அம்மா உணவகத்தில் முதல்வர் சோதனை
அம்மா உணவகத்தில் முதல்வர் சோதனை

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமத்துவ சமுதாய உணவுக்கூடம் அமைக்க வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நாட்டில் பட்டினிச் சாவு குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.

அரசு தகவல்:

அந்த அறிக்கையில், ``தமிழகத்தில் யாரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. தமிழகம் முழுவதுமுள்ள சமுதாய உணவுக்கூடங்களில் மிகக் குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாகப் பொதுவிநியோக உணவுத் திட்டம் மற்றும் சமுதாய உணவுக்கூடம் நடைமுறையில் உள்ளது. இந்த கொரோனா பேரிடர் காலங்களில்கூட தடையின்றி உணவு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் `அம்மா உணவகம்’ என்ற பெயரில் 654 உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த உணவகங்கள் மூலம் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் என்று மலிவு விலையில் வழங்கப்பட்டுவருகின்றன" என்று கூறப்பட்டிருந்தது.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

மேலும், ``இதன் மூலம் ஏழை மக்கள் பயனடைந்துவருகிறார்கள். இதற்கான 100 சதவிகித நிதியை மாநில அரசு கொடுத்துவருகிறது. பள்ளி மாணவர்களுக்கு உணவோடு முட்டையும் வழங்கப்படுகிறது. கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுவதன் மூலம் நாளொன்றுக்கு 66 ஆயிரம் மக்கள் பயனடைகிறார்கள். தமிழகத்தில் பட்டினி என்பதே இருக்கக் கூடாது என்பதற்காக, `கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் தற்போது 500 உணவகக் கூடங்கள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. சமுதாய உணவகக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றில் நாட்டிலேயே தமிழகம் முன்னுதாரணமாக இருந்துவருவதால் தமிழகத்தில் பட்டினிச் சாவு என்பதே கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அம்மா உணவகங்களோடு கூடுதலாக, கலைஞர் உணவகங்கள் கொண்டுவரப்படும் என்று அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கும் அம்மா உணவகங்களை மூடவோ அல்லது பெயர்மாற்றம் செய்யவோ கூடாது என்று எதிர்க்கட்சி கோரிக்கை வைத்துள்ளது. முன்பு முதல்வர் ஸ்டாலின் கூறியபடி அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா அல்லது இருட்டடிப்பு செய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism