Published:Updated:

திமுக அரசு Vs சிதம்பரம் தீட்சிதர்கள்... மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை!

நடராஜர் கோயில்

``ஆதாரங்களை வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."

திமுக அரசு Vs சிதம்பரம் தீட்சிதர்கள்... மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை!

``ஆதாரங்களை வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."

Published:Updated:
நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பொதுமக்கள் பல்வேறு புகார்களை அரசுக்கு அனுப்பிவந்தார்கள். குறிப்பாக, கனகசபைமீது ஏறி சாமி தரிசனம் செய்யச் சென்றவரைத் தாக்கியது, ஆதிதிராவிட பெண் ஒருவரைச் சாதிப் பெயரைத் சொல்லித் திட்டியது, கணக்கு வழக்குகளில் முறைகேடு எனப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், கடந்த ஜூன் 7-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜர் கோயிலுக்குச் சென்று கணக்கு வழக்குகளைக் காண்பிக்குமாறு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் அதிகாரிகளை வெளியே செல்லுங்கள் என்று கூறினார்கள். அதிகாரிகள் வெளியேற மறுத்ததால் அவர்களை தீட்சிதர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளும் அதிகாரிகள் நடராஜர் கோயிலுக்குச் சென்று கணக்கு வழக்கு செலவு விவரங்களைக் காண்பிக்குமாறு கூறினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகளின் ஆய்வுக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். பின்னர், சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான கருத்துக்கேட்பு கூட்டத்தை ஜூன் 20, 21 ஆகிய இரண்டு நாள்கள் இந்து சமய அறநிலையத்துறை நடத்தியது.

இதில், ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அறநிலையத்துறைக்கு வந்தன. இந்தப் புகார்கள் ஆதாரமற்றவை என தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுமக்கள் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து, அறநிலையத்துறை ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று தீட்சிதர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதன்பேரில், ஆகஸ்ட் மாதம் சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் கடந்த 2005-2010-ம் ஆண்டுகள் வரையிலான கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர். மேலும், 1955-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இருக்கும் நகைகளை மறு மதிப்பீடு செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு மறுபடியும் தீட்சிதர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி, 'சட்டப்படி அவர்கள் ஆய்வு செய்தபோது எந்தத் தவற்றையும் கண்டுபிடிக்கவில்லை. மறுபடியும் ஆய்வுசெய்ய வேண்டும் என்று சொல்வது உள்நோக்கம்கொண்டது' என்று தெரிவித்தார்கள். இந்தச் சூழலில், சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், நடராஜர் கோயில் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்
அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்

அந்தக் கடிதத்தில், "சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்றும், அதன் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிடக் கூடாது, நீதிமன்றத்தின் உத்தரவு நகல், அறநிலையத்துறையின் விதிகள் சபாநாயகர் கோயிலுக்குப் பொருந்தாது என்ற நீதிமன்ற உத்தரவின் நகல், இந்தக் கோயில் தீட்சிதர்களால் அவர்களின் சமுதாயத்துக்காகக் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள், அந்ந நிலம் மன்னர்களால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வாங்கப்பட்டதா உள்ளிட்ட ஆதாரங்களை 15.11.2022-க்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்லையென்றால் அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் கூறப்பட்டிருந்தது.

சிதம்பரம் தீட்சிதர்கள்
சிதம்பரம் தீட்சிதர்கள்

இந்த கடிதத்துக்கு நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், "இந்தியச் சட்டவிதிகளை மீறி கோயிலை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என அறநிலையத்துறை நினைக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பின்படி, இந்து அறநிலையத்துறையோ, அதன் ஆணையரோ ஒரு சமயக் கோயிலின் கணக்குகளைக் கேட்க முடியாது. ஸ்ரீ சபாநாயகர் கோயில் பொது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்றும், அரசியல் சாசனப் பிரிவு 26-ன் கீழ் பொது தீட்சிதர்கள் பாதுகாப்பு பெற்ற தனி சமயப் பிரிவினர் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஆனால், தேவையற்ற வகையில் கோயிலின் வரவு, செலவு விவரத்தையும், உங்கள் துறைக்கு உரிமை இல்லாத தனி சமயப் பிரிவு நிர்வாகத்திலுள்ள கோயிலில் திரும்பத் திரும்ப ஆய்வுசெய்யப்போகிறோம் என்று குறிப்பிட்டு தொடர்ந்து விளக்கம் கேட்டுவருகிறீர்கள். இந்த கடிதத்துக்குப் பின்னர் எந்தவித பதில் கடிதமும் தீட்சிதர்கள் தரப்பில் இருக்காது. நாங்கள் உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற்று நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவிருக்கிறோம்" என்று கடிதம் அனுப்பியிருந்தார்.

சேகர் பாபு
சேகர் பாபு

இந்தச் சூழலில், கடந்த 9-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "தவறுகள் எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கிற, சுட்டிக்காட்டுகிற கடமை அறநிலையத்துறைக்கு உண்டு. சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல. மன்னர்களால், நம்மை ஆண்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில்.

அந்தத் திருக்கோயிலுக்கு வருகிற வருமானங்களை முறையாக கணக்கு கேட்கிறபோது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. அதேபோல் நிர்வாகத்தில் இருக்கிற குளறுபடிகளைக் கேள்விகளாகக் கேட்கிறபோது அதற்கு பதில் சொல்வதும் அவர்களுடைய கடமை. நீதிமன்றத்தை நாடும்போது நாங்களும் சட்டப்படி பார்த்துக்கொள்வோம்" என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள் ஓரிரு வாரங்களில் மீண்டும் ஆய்வுக்குச் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதேபோல், தீட்சிதர்கள் தரப்பு மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்லவிருக்கிறது. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த இந்தப் பிரச்னை இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.