தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், `டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்காக, ஏக்கருக்கு 20,000 ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும்’ என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `விவசாயிகளுக்கான பயிர் இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், `காவிரிப்படுகை மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி அழுகியிருக்கும் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.20,000 மட்டும் வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்திருப்பது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.
கடும் உழைப்பையும், பொருளாதாரத்தையும் இழந்து செய்வதறியாது தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க மறுக்கும் யதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ 11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல், உளுந்து உள்ளிட்டவை பயிரிடப்பட்டிருந்த நிலையில், காவிரிப்படுகைப் பகுதிகளில் கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ச்சியாக நான்கு நாள்கள் பெய்த கனமழையால் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்திருக்கின்றன.

பாடுபட்டு விளைவித்த பயிர்களைக் கண்முன்னே அழியக்கொடுத்து, வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் இழப்பைச் சந்தித்து தவித்துவருகின்றனர். எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கும் நட்டத்தினால், வேளாண் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் உருவாகியிருப்பதால் விவசாயிகள் கடும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். மேலும், அறுவடை செய்யப்பட்டு நேரடி கொள்முதல் நிலையங்களின் வெளியே காத்திருப்பிலிருந்த நெல் மூட்டைகளும், போதுமான பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணான கொடுமைகளும் அரங்கேறியிருக்கின்றன.
இதனால், நெல்லின் ஈரப்பதம் 19 சதவிகிதத்துக்கும் மேலாக அதிகரித்ததைக் காரணம் காட்டி, நெல் கொள்முதல் பணிகள் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் போதிய பாதுகாப்புக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாத அரசின் தவற்றுக்கு, நெல் கொள்முதலை நிறுத்திவைத்து அப்பாவி விவசாயிகளைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்... பேனா வைக்க ரூ.80 கோடியை வீணாகக் கடலில் கொட்டும் தி.மு.க அரசிடம், நெல் மூட்டைகளைப் பாதுக்காக்க தரமான கிடங்குகள் அமைக்க பணமில்லையா... நெல் மூட்டைகளைக் கிழிந்த தார்ப்பாய்களைக் கொண்டு மூடுவதற்கு பெயர்தான் பெருமைமிக்க திராவிட மாடலா...

ஆகவே, தமிழ்நாடு அரசு கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளாண் பெருங்குடி மக்களைப் பாதுகாக்கும் வகையில் இழப்பீட்டை ஏக்கருக்கு 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதலுக்கான நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டுமெனவும், நெல் கொள்முதலுக்கான தரத்தை நிர்ணயிக்கும் உரிமையை மாநில அரசுகள் மீளப்பெற்றிட, தி.மு.க கூட்டணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.