Published:Updated:

அமைச்சராகிறார் உதயநிதி... தலைமைச் செயலகத்தில் அறை ரெடி!

உதயநிதி

டிசம்பரில் உதயநிதி அமைச்சராக்கப்படுவது உறுதி என்று வெளியான தகவல் தற்போது உறுதியாகியிருக்கிறது.

அமைச்சராகிறார் உதயநிதி... தலைமைச் செயலகத்தில் அறை ரெடி!

டிசம்பரில் உதயநிதி அமைச்சராக்கப்படுவது உறுதி என்று வெளியான தகவல் தற்போது உறுதியாகியிருக்கிறது.

Published:Updated:
உதயநிதி

சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்தத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வரானார். அதேபோல, உதயநிதியும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்றார்.

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பேசப்பட்டது. இது ஒருபுறமிருக்க, `உதயநிதிக்கு இவ்வளவு சீக்கிரம் அமைச்சர் பதவி கொடுத்தால் கட்சிக்காரர்களுக்குள்ளேயே பேச்சுகள் எழும்' என்பதை உணர்ந்த தலைமை, அவருக்குப் பதவி எதுவும் வழங்கவில்லை. இருப்பினும், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோஷமும், எப்படியும் அவர் அமைச்சராக்கப்பட்டுவிடுவார் என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் அரசியல் களத்தில் புகைந்துகொண்டேதான் இருந்தன.

இதற்கிடையே, கடந்த மே மாதம் திருச்சியில் நடைபெற்ற திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி 'உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்' என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். இது அரசியல் களத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அன்பிலும் உதயநிதியும் பல ஆண்டுக்கால நண்பர்கள் என்பதால்தான் இப்படித் தீர்மானம் போட்டியிருக்கிறார் என்று மூத்த நிர்வாகிகள் சமாளிப்புக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும், 'உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்' என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அன்பில் மகேஷ் - உதயநிதி
அன்பில் மகேஷ் - உதயநிதி

இதையடுத்துதான் எல்லா மாவட்டங்களில் இது போன்றதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான், தி.மு.க இளைஞரணிச் செயலாளராக 2-வது முறையாக உதயநிதி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நவ.27-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய உதயநிதிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் காத்துக்கிடந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், டிசம்பரில் உதயநிதி அமைச்சராக்கப்படுவது உறுதி என்று வெளியான தகவல் தற்போது உறுதியாகியிருக்கிறது.

இது குறித்து தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர்தான், உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு, உதயநிதியின் அரசியல் எதிர்காலம் எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு தற்போது அமைச்சராக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, தலைவர் முதன்முதலாக இருந்த ஊரக உள்ளாட்சித்துறைதான் கொடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சீனியர் அமைச்சர் கையில் அந்தத் துறை இருப்பதால், வேண்டாம் எனத் தலைமை கருதியது. அதேபோல, அந்தத் துறை மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறது. எனவே, முழு நேரமாகத் துறையே கதியென்று வேலை பார்த்தால்தான், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படாமல் இருக்க முடியும். ஆனால், உதயநிதி தற்போது ஒருசில படங்களில் கமிட் ஆகியிருப்பதால், அது முடியாத காரியம். எனவேதான், தற்போது அமைச்சர் மெய்யநாதனிடம் இருக்கும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மையாகக் கொடுக்கபடவிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூலம் தமிழகம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதேபோல, விளையாட்டுத்துறைக்கென தனி கவனம் செலுத்த, பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன. 234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கங்களைக் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த அரங்கங்களை அமைச்சராகி உதயநிதி திறந்து வைக்கும்போது, இளைஞர்கள் மத்தியில் உதயநிதிக்கு செல்வாக்கு உயரும்.

இந்தத் துறையிலும் பணிச்சுமை அதிகமாக இருக்குமென்பதால் டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் பணியாற்றிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, விளையாட்டுத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, முதல்வரிடம் இருக்கும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையும் வழங்கப்படவிருக்கிறது. இந்தத் துறைதான் அரசின் அத்தனை துறைகளையும் ஒருங்கிணைக்கிறது. நான் முதல்வன், சி.எஸ் டேஷ்போர்டு, உயர்நிலை ஆய்வுக்கூட்டம், தரவு நிர்வாகம், அனைவருக்கும் வீடு திட்டம் என முதல்வரின் இலாகாக்களில் சில இந்தத் துறையின் கீழ் வருகின்றன.

முதல்வரின் முதன்மை தனிச் செயலாளர் உதயசந்திரன், இந்தத் துறைக்கும் செயலாளராக இருப்பதால் பாதி வேலையை அவரே கவனித்துக்கொள்வார். அதன்படி, இந்த வாரத்திலேயே பதவி ஏற்பு நடக்கவிருக்கிறது. உதயநிதிக்காகத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையின் அருகே அறை ஒதுக்க ஏற்பாடு நடக்கிறது" என்றார் விரிவாக.

முன்னதாக, தென்காசி மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலினுடன் சென்ற அவருடைய மனைவி துர்கா, உதயநிதி பெயரில் பாவூர்சத்திரம் அருகேயுள்ள நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உதயநிதி
உதயநிதி
அமைச்சராகிறார் உதயநிதி... தலைமைச் செயலகத்தில் அறை ரெடி!

இந்த நிலையில், உதயநிதி வரும் 14-ம் தேதி காலை 9:30 மணியளவில் அமைச்சராக பதவியேற்க இருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில் உதயநிதியை அமைச்சராக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.