Published:Updated:

உட்கட்சி... உதயநிதி... உள்குத்து... திகுதிகு தி.மு.க!

உதயநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, ஸ்டாலின்

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், உட்கட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்த தலைமை தீவிரமாகி யிருக்கிறது.

உட்கட்சி... உதயநிதி... உள்குத்து... திகுதிகு தி.மு.க!

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், உட்கட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்த தலைமை தீவிரமாகி யிருக்கிறது.

Published:Updated:
உதயநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைச் சுவைத்த கையோடு, உட்கட்சித் தேர்தலுக்குத் தயாராகிறது தி.மு.க. கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளுக்கு, தான் பொறுப்பு வகிக்கும் கழக இளைஞரணியிலிருந்தும், தன்னுடைய ரசிகர் மன்றத்திலிருந்தும் ஆட்களைக் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த நகர்வு ஒருபக்கம் தி.மு.க சீனியர்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பியிருக்கும் நிலையில், கட்சிக்குள் நடக்கும் உள்குத்து அரசியல் அறிவாலயத்தையே அதகளப்படுத்துகிறது. அடுத்தடுத்த ‘திகுதிகு’ காட்சிகளால் தி.மு.க-வில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை!

‘ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வோர் அரசியல் கட்சியும் உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’ என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. கிளைக்கழகம் முதல் மாவட்டக் கழகம் வரையிலும், தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் அனைவரும் உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். கடைசியாக, 2016-ம் ஆண்டுதான் தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, கொரோனா பரவல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் போன்றவை காரணமாக, 2021-ல் தேர்தல் நடத்தப்படவில்லை. அக்டோபர் 2021-ல் இந்தியத் தேர்தல் ஆணையத்தை அணுகிய தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, உட்கட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கேட்டார். தேர்தல் ஆணையத் திடம் வாதாடி, 2022 ஏப்ரல் இறுதிக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிடுவதாக உறுதியளித்து விட்டு வந்தார். சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்தும் முடிந்துவிட்டதால், உட்கட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்வதில் தற்போது மும்முரமாகியிருக்கிறது தி.மு.க தலைமை. உள்ளாட்சி அமைப்புகளில் பதவி கிடைக்காத பலரும், கட்சிப் பதவியையாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டுவதால் அறிவாலயம் தகதகக்கிறது.

உட்கட்சி... உதயநிதி... உள்குத்து... திகுதிகு தி.மு.க!

‘கொடுத்த உறுதிமொழி மாறினால்...’ உட்கட்சி கலாட்டா!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வின் மாநில நிர்வாகிகள் சிலர், “பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், உட்கட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்த தலைமை தீவிரமாகி யிருக்கிறது. கிளைக்கழகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பேரூர், ஒன்றியம், நகரம், மாநகரம், வட்டம், பகுதி, மாவட்ட அமைப்புகளிலுள்ள நிர்வாகப் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுபோக, தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் உட்கட்சித் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டியது கட்டாயம். இவர்களை எதிர்த்துப் போட்டியாக யாரும் நிற்க மாட்டார்கள் என்பதால், போட்டியின்றி தேர்வானதாகவே அறிவிக்கப்படுவார்கள். தற்போது 77 மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. மாவட்டத்துக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட சிலர், இந்தத் தேர்தல் மூலம் மாவட்டச் செயலாளர் களாகத் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.

இந்த உட்கட்சித் தேர்தலில் இருக்கும் பெரும் பிரச்னையே, உறுப்பினர் அடையாள அட்டை களை நிர்வாகிகள் சரிவர வழங்காததுதான். உறுப்பினர்களின் அட்டையை, அடமானப் பொருள்போல தங்கள் கையில் வைத்துக்கொள்ளும் நிர்வாகிகள் சிலர், உட்கட்சித் தேர்தலில் தனக்கு வாக்களித்தால் மட்டுமே அட்டை தரப்படும் எனத் தகராறு செய்வது வழக்கம். இது ஒருகட்டத்தில் அடிதடியாகவும் மாறும். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் சீட் கிடைக்காத பலருக்கும், கட்சிப்பதவி தரப்படுமென மாவட்ட அளவில் பேசி முடிக்கப்பட்டது. அந்த உறுதி மொழிக்கு மாறாகக் காட்சிகள் அரங்கேறினால், கலாட்டா பிறப்பது நிச்சயம்” என்றனர்.

ஏழு கேள்விகள்... துருவும் உளவுத்துறை!

இந்தக் களேபரங்களுக்கு இடையே, ஜெயலலிதா பாணியில் கழக நிர்வாகிகளின் செயல்பாடுகளை உளவுத்துறை மூலம் நோட் எடுக்கும் வேலையைத் துரிதப்படுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் செயல்பாடு, கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லும் விதம், எதிர்க்கட்சி நிர்வாகிகளுடனான அவர்களுடைய தொடர்பு, கமிஷன் பிரச்னைகள் உள்ளிட்ட ஏழு கேள்விகளைப் பட்டியலிட்டு தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாடுகளைத் துருவ ஆரம்பித்திருக்கிறது உளவுத்துறை.

நம்மிடம் பேசிய வடமாவட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர், “உள்ளாட்சித் தேர்தலின்போது, தான் அறிவுறுத்தியும் ஒருசில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகத் தி.மு.க-வினர் போட்டியிட்டதை முதல்வர் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, கட்சி நிர்வாக விஷயத்தில் கடுமைகாட்ட முடிவெடுத்துவிட்டார் முதல்வர். அதிக புகார்களுக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உட்கட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிகிறது.

சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சனம் மீது ஏகப்பட்டப் புகார்கள் குவிகின்றன. சுதர்சனம் மாவட்டச் செயலாளராக இருக்கும் பகுதியில்தான், அ.தி.மு.க ஏழு சென்னை மாநகராட்சி வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது. சென்னை மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கவிதா நாராயணன், கட்சி உள்ளடி வேலைகளால் தோற்கடிக்கப்பட்டார். இதுமட்டுமன்றி, கூட்டணியிலுள்ள ம.ம.க-வுக்கு 23-வது வார்டு ஒதுக்கப்பட்டது. அங்கு தி.மு.க நிர்வாகி ஒருவரையே சுயேச்சையாகக் களமிறக்கிய சுதர்சனம் தரப்பு, வாக்குகளைப் பிரித்து ம.ம.க வேட்பாளரைத் தோற்கடித்தது. இதுபோலவே, தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லாததால், சுரண்டை நகராட்சி, ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் அ.தி.மு.க வெற்றிபெற்றதும் புகாராகியிருக்கிறது. மீஞ்சூர் பேரூராட்சியில் தலைமை அறிவித்த பேரூராட்சித் தலைவர் வேட்பாளருக்கு மாற்றாக, வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தைக் கட்சித் தலைமைக்கே கொண்டு செல்லாமல் தடுத்துவிட்டார் திருவள்ளுர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ‘கும்முடிப்பூண்டி’ கோவிந்தராஜு. இப்படி, புகாருக்குள்ளான கட்சி நிர்வாகிகளைப் பற்றிய பட்டியலை எடுத்து வருகிறோம். 77 மாவட்ட நிர்வாகிகளில், எப்படியும் 10-க்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட வாய்ப்பிருக் கிறது” என்றார்.

மகுடம் சூடும் உதயநிதி? தயாராகும் தளகர்த்தாக்கள்!

இந்த உட்கட்சித் தேர்தலைப் பயன்படுத்தி, தனக்கு நெருக்கமானவர்களைக் கட்சியின் அதிகார அமைப்புக்குள் கொண்டு வர உதயநிதி தீவிரமாவதும் கட்சிக்குள் அனலைக் கிளப்பி யிருக்கிறது. இதுகுறித்து, முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்.

“கலைஞர் தலைவராக இருந்தபோது, அன்பில் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சைதை கிட்டு, பரிதி இளம்வழுதி, தங்கம் தென்னரசு, பொன்முடி என ஸ்டாலினுக்காகத் தளகர்த்தாக்கள் உருவாக்கப் பட்டனர். இவர்கள் மாவட்ட அமைப்புகளிலும் கோலோச்சினர். அதுபோல, உதயநிதிக்காக ஒரு குழு கட்சிக்குள் உருவாகிறது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிற்றரசு, டி.ஆர்.பி.ராஜா, டாக்டர் எழிலன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் எனக் கட்சி அமைப்புகளுக்குள் உதயநிதி தரப்பு ஆட்கள் ஏற்கெனவே இருக்கும் நிலையில், இளைஞரணி யிலிருந்தும் சிலரைக் கொண்டு வர இருக்கிறார்கள். சமீபத்தில் அன்பகத்தில் நடத்தப்பட்ட இளைஞரணிக் கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றிருக்கிறது.

‘மாவட்ட அளவில் எந்தக் கூட்டம் நடந்தாலும், இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. போஸ்டர் களில் பெயர் போடுவதற்குக்கூட மாவட்டச் செயலாளர்கள் யோசிக்கின்றனர். ஒருசில மாவட்டங்களில், ஓரத்தில் நிற்கும் இளைஞரணி நிர்வாகிகளின் படத்தைக் கத்தரித்துவிட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பும் நிலையும் இருக்கிறது. இது மாற வேண்டுமானால், இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும்’ என இளைஞரணி நிர்வாகிகள் சிலர் பேசியிருக்கிறார்கள். அவர்களின் ஆதங்கங்களைக் கேட்டுக்கொண்ட உதயநிதி, ‘தலைவர்கிட்ட இது விஷயமாகப் பேசுறேன்’ என்று உறுதியளித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு, கோவை மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த கோட்டை அப்பாஸ், ஈரோடு பிரகாஷ், திருப்பூர் ஜெயக்குமார் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. உதயநிதிக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் மகுடம் சூட்டப்படும்போது, கட்சிக்குள் சிறு முணுமுணுப்பு கூட எழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நிர்வாக மாறுதல் செய்யப் படுகிறது.

இந்தச் சூழலில், உதயநிதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர் களும் மாவட்ட நிர்வாகத்துக்குள் வரத் துடிக்கின்றனர். இதற்கான முயற்சியை மன்றத்தின் தலைவரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடுத்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 28 பேருக்கு தி.மு.க-வில் சீட் தரப்பட்டது. இவர்களில் 26 பேர் ஜெயித்து விட்டனர். மகேஸின் அறிவுறுத்தலில், மத்திய சென்னை இளைஞரணித் துணை அமைப்பாளர் பதவியில், உதயநிதி ரசிகர் மன்றப் பிரமுகர் குட்டி என்பவர் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். இதேபோல, ஆங்காங்கே இளைஞரணிப் பொறுப்புகளில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்டப் பொறுப்புகளில் அமர்த்தப்படும்போது, பதவி கிடைக்காத கட்சி சீனியர்களின் கோபதாபப் பஞ்சாயத்துகள் பெரிய அளவில் ரணகளத்தை உருவாக்கும்” என்றார்.

உள்குத்து அரசியல்... உக்கிரமாகும் மாவட்டங்கள்!

ஏற்கெனவே கடுமையாகப் புகைந்து கொண்டிருக்கும் அமைச்சர் - மாவட்டச் செயலாளர் ஈகோ மோதல்கள், சமீபக் காலங்களில் அதிகரித்துவருகிறது. இது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்- வேலூர் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் இடையேயான பகையால், பிளவுப்பட்டு நிற்கிறது வேலூர் மாவட்ட தி.மு.க. துரைமுருகன் முன்னிலையிலேயே இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்கிறார்கள். மேயர் பதவிக்குத் தன் ஆதரவாளர் புஷ்பலதாவைப் பரிந்துரைத்தார் கதிர் ஆனந்த். மாவட்டச் செயலாளர் நந்தகுமாரும், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனும் சேர்ந்து மாநகர மகளிரணி அமைப்பாளர் சுஜாதாவை முன்மொழிந்தனர். இந்தத் தகராறில் நந்தகுமாரின் கை ஓங்கி, சுஜாதா மேயராக்கப்பட்டார். இதில் அதிருப்தியடைந்திருக்கும் கதிர் ஆனந்த், நந்தகுமாரை வீழ்த்துவதற்கு நேரம் பார்த்திருப்பதால், வேலூரில் வெப்பம் அதிகரித்திருக்கிறது.

அன்பில் மகேஸ், கே.என்.நேரு, கதிர் ஆனந்த், காதர் பாட்சா, நந்தகுமார், ராஜ கண்ணப்பன்
அன்பில் மகேஸ், கே.என்.நேரு, கதிர் ஆனந்த், காதர் பாட்சா, நந்தகுமார், ராஜ கண்ணப்பன்

அமைச்சர் நாசரின் மகனுக் குத் துணை மேயர் பதவி கொடுத்தால், திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சியை நடத்த முடியாது என கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம், அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் ஆகியோர் புகார் மனுக்களை அனுப்பினர். இவர்களின் அழுத்தத்தால்தான், துணை மேயர் பதவி நாசர் குடும்பத்தின் கையைவிட்டுப் போனது. இதில் நாசர் கடும் அப்செட். புகார் தெரிவித்த நால்வரையும் ஓரங்கட்ட, தக்க தருணத்தை எதிர்பார்த் திருக்கிறார் நாசர். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜனுக்கு எதிராக, மதுரை மாவட்டத்திலுள்ள நான்கு மாவட்டச் செயலாளர்களும் திரும்பியுள்ளனர். ‘ஜமீன் போல நடந்துகொள்கிறார். கட்சிக்காக உழைத்தவர்களைப் புறக்கணித்து, தன் ஆதரவாளரின் மனைவியை மாநகராட்சி மேயராகத் தேர்வு செய்துவிட்டார். துணை மேயர் பதவியை வம்படியாக சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கக் காரணமாகிவிட்டார்’ என்று புகார் பட்டியலை வாசிக்கிறார்கள் தி.மு.க-வினர்.

இதனால்தான், மேயராக இந்திராணி பொன்வசந்த் பெறுப்பேற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் வரவில்லை.

மணப்பாறை நகராட்சியில், வெற்றிபெற்ற ஐந்து சுயேச்சைகளும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸைச் சந்தித்து தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுப்பதாகச் சொல்லியிருந்தனர். அப்படியிருந்தும் மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க தட்டிச் சென்று விட்டது. இந்த நகராட்சியில் தன்னுடைய ஆதரவாளரை சேர்மனாக்க முயன்றார் அன்பில் மகேஸ். அது தெரிந்துதான், ‘திட்டத்தைப் பாழாக்கிவிட்டார் நேரு. நேருவின் மாவட்டத் துக்கும் இந்தச் சூழல் ஏற்பட்டிருந்தால், இப்படி விட்டிருப்பாரா?’ என்று கொதிக்கிறார்கள் மகேஸின் ஆதரவாளர்கள்.

காதர் பாட்சா மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர், ராமநாதபுரத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை, ஊரக, நகர்ப்புற உள்ளாட்சியில் பெரிய வெற்றியைத் தி.மு.க பெற்றது. ஆனால், மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ கண்ணப்பனுக்கு அமைச்சர் பதவியை வழங்கியது தி.மு.க தலைமை. இதை காதர் பாட்சா எதிர்பார்க்கவில்லை. மாவட்டத்துக்குள் தன் இருப்பைத் தக்கவைக்க, தனக்கென ஒரு குரூப்பை உருவாக்க முயல்கிறார் ராஜ கண்ணப்பன்.

காதர் பாட்சா-வுக்கு எதிராக இருக்கும் தங்கவேலன் தரப்பு, அமைச்சர் ராஜ கண்ணப்ப னுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. ‘சரி, வா... மோதிப்பார்க்கலாம்’ என்கிற மனநிலையில் இருக்கிறார் காதர் பாட்ஷா. இதனால், ராமநாதபுரம் தி.மு.க-வில் புயல் வீசுகிறது. அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் இருக்கும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைப் பிரித்து, தனக்கென தனியாக ஒரு மாவட்டத்தைக் கேட்கிறார் தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா. இதில், அமைச்சருக்கும் ராஜாவுக்கும் உரசல் தீவிரமாகியிருக்கிறது” என்றனர்.

கொரோனா, மழைவெள்ளம், உள்ளாட்சித் தேர்தல்கள், நிதி நெருக்கடி என ஆட்சிக்கு வந்தது முதல் பல சவால்களை எதிர்கொண்டு வரும் ஸ்டாலினுக்கு, அடுத்த பெரிய சவாலாக முன் நிற்கிறது உட்கட்சி பிரச்னைகள். உட்கட்சித் தேர்தல், உதயநிதி தரப்பு Vs சீனியர்கள், மாவட்டச் செயலாளர்கள் Vs அமைச்சர்கள் எனக் களை கட்டும் மோதல்களைச் சரிசெய்தாக வேண்டிய அவசியத்தில் சிக்கியிருக்கிறார் கட்சியின் தலைவர். என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism