Published:Updated:

நேரு Vs அன்பில் மகேஷ்... எந்த கோஷ்டிக்கு மேயர் பதவி? - அனலாக தகிக்கும் திருச்சி தி.மு.க!

கே.என்.நேரு, அன்பில் மகேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கே.என்.நேரு, அன்பில் மகேஷ்

திருச்சி மாநகராட்சியில் இருக்கும் 65 வார்டுகளில் 15 வார்டுகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 50 வார்டுகளில் தி.மு.க போட்டியிடுகிறது.

நேரு Vs அன்பில் மகேஷ்... எந்த கோஷ்டிக்கு மேயர் பதவி? - அனலாக தகிக்கும் திருச்சி தி.மு.க!

திருச்சி மாநகராட்சியில் இருக்கும் 65 வார்டுகளில் 15 வார்டுகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 50 வார்டுகளில் தி.மு.க போட்டியிடுகிறது.

Published:Updated:
கே.என்.நேரு, அன்பில் மகேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கே.என்.நேரு, அன்பில் மகேஷ்

‘மேயர் நாற்காலியில் அமரப்போவது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரா... இல்லை அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளரா?’ என்ற கேள்விதான் திருச்சி மாநகர தி.மு.க-வில் அனலாக தகிக்கிறது. ‘‘இருவரின் அதிகார மோதல்களால் கட்சிக்காக உழைத்த அடிமட்ட நிர்வாகிகள் பலரும் சீட் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலரும் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார்கள். இது தி.மு.க-வுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும்’’ என்று ஆதங்கப்படுகிறார்கள் தி.மு.க தொண்டர்கள். ‘திருச்சி தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?’ என்று களமிறங்கி விசாரித்தோம்.

திருச்சி மாநகராட்சியில் இருக்கும் 65 வார்டுகளில் 15 வார்டுகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 50 வார்டுகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இவற்றில் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் 22 வார்டுகளும், அன்பில் மகேஷ் கட்டுப்பாட்டில் 28 வார்டுளும் இருக்கின்றன. இவற்றில் எந்த கோஷ்டி அதிக வார்டுகளில் ஜெயித்து கவுன்சிலர்களைப் பிடிக்கிறதோ, அவர்கள் பரிந்துரைக்கும் நபருக்கே மேயர் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நேரு Vs அன்பில் மகேஷ்... எந்த கோஷ்டிக்கு மேயர் பதவி? - அனலாக தகிக்கும் திருச்சி தி.மு.க!

திருச்சி தி.மு.க-வைப் பொறுத்தவரையில், கே.என்.நேரு யாரைக் கை காட்டுகிறாரோ அவர்தான் கடந்த காலங்களில் மேயர் பதவியில் அமர்ந்திருக்கிறார். ஆனால், இம்முறை அன்பில் மகேஷ் தரப்பும் மேயர் பதவியைக் குறிவைத்துக் காய்நகர்த்தியது. 30 வருடங்களாகத் தன்னுடன் பயணிக்கும் மாநகரச் செயலாளர் அன்பழகனுக்கு மேயர் பதவியை வாங்கிவிட கே.என்.நேரு துடிக்கிறார். அன்பில் மகேஷோ, அவரது தனி உதவியாளர் அருணின் தாய்மாமனான மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணனை மேயராக்க நினைக்கிறார்.

இப்படியான சூழலில்தான் திருச்சி தி.மு.க-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘திருச்சி மாவட்டத்தையே தன்னோட கட்டுப்பாட்டுல வெச்சுருந்த நேருவுக்கு, அன்பில் மகேஷின் வருகை பல இடைஞ்சல்களை ஏற்படுத்தியிருக்கு. உள்ளூர்ல தனக்கிருந்த பவர்ஃபுல்லான மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிச்சுட்டு, முதன்மைச் செயலாளர் பதவியைக் கொடுத்தப்பவே நேரு அப்செட். இப்படியான நிலையில, உள்ளூர் அரசியல்ல தன்னை தக்கவெச்சுக்க தன் ஆதரவாளரான அன்பழகனை மேயராக்கணும்னு நேரு நினைக்கிறார்.

நேரு Vs அன்பில் மகேஷ்... எந்த கோஷ்டிக்கு மேயர் பதவி? - அனலாக தகிக்கும் திருச்சி தி.மு.க!

மகேஷ் தரப்பைவிட கூடுதலான கவுன்சிலர்களை வெற்றிபெற வெச்சா மேயர் பதவியை ஈஸியா வாங்கிடலாம்னு நேரு கணக்கு போடறாரு. அதுக்காக நல்லா செலவு செய்யறவங்க, சாதிரீதியா செல்வாக்கு இருக்குறவங்களா பார்த்து நேரு சீட் கொடுத்திருக்காரு. ‘பத்து வருஷமா எனக்காக உழைச்ச வார்டு செயலாளர்களுக்கு, அமைச்சரானதும் கவுன்சிலர் சீட்டு வாங்கித்தருவேன்’னு ஏற்கெனவே நம்பிக்கை கொடுத்திருந்த நேரு, இப்போ மகேஷின் போட்டியால அவங்களையெல்லாம் கைவிட்டுட்டு, பணம் இருக்குறவங்களா பார்த்து கவுன்சிலர் சீட் கொடுத்திருக்காரு. அப்படி சீட் கிடைக்காத பத்துக்கும் மேற்பட்ட வார்டு செயலாளர்கள், நேரு மேல அதிருப்தியில இருக்காங்க. அதில் அஞ்சு பேரு சுயேச்சையாகக் களமிறங்கியிருக்காங்க. மகேஷைத் தோற்கடிக்கணும்கிறதுக்காக தன் ஆதரவாளர்களையே நேரு கைவிட்டிருக்குறது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு’’ என்றார்கள்.

இன்னும் சில உடன்பிறப்புகளோ, ‘‘மேயர் பதவியைப் பிடிச்சாத்தான் திருச்சியை நம்ம கன்ட்ரோலுக்குக் கொண்டுவர முடியும்கிறது மகேஷின் எண்ணம். அதனால, தன்னை நம்பி வந்த ஆட்களுக்கு கவுன்சிலர் சீட் வாங்கிக் கொடுத்ததோட, ‘நம்ம ஆள்தான் மேயர். உற்சாகமா வேலை பாருங்க’னு சொல்லியிருக்காரு. ஆனா, நேரு கட்சித் தலைமையில காய்நகர்த்தி, ‘சேலத்துக்கும் திருச்சிக்கும் நேருதான் பொறுப்பாளர். அவர் போக்குலேயே மாநகராட்சித் தேர்தலை விட்டுடுங்க’னு தலைமையை உத்தரவு போட வெச்சுட்டாரு. இதுல மகேஷ் ரொம்பவே அப்செட்... இதையடுத்து, திருச்சி கலைஞர் அறிவாலயத்துல நேருவும் மகேஷும் சந்திச்சு மனசுவிட்டு பேசியிருக்காங்க. அப்போ நேரு, ‘தம்பி... எனக்குப் பிறகு உங்களை மாதிரி இளைஞர்கள்தான் இருக்கப்போறீங்க. நமக்குள்ள பிரச்னையை உண்டுபண்ணி சிலர் அரசியல் செய்யறாங்க’னு மகேஷ்கிட்ட மனம் திறந்து பேசியிருக்காரு. அதுக்குப் பிறகுதான், வேட்பாளர் விவகாரத்துலேயும் மேயர் பதவி யாருக்குங்கிற சர்ச்சையிலேயும் மகேஷ் தலையிடலை. வேட்பாளர் தேர்வுல இருந்து மேயர் வேட்பாளர் தேர்வு வரை எல்லாமே நேரு வசமாகிடுச்சு. வேட்பாளர் நேர்காணல்லகூட நேருதான் எல்லார்கிட்டேயும் கேள்விகளைக் கேட்டார்.

அன்பழகன், மதிவாணன், கே.என்.சேகரன்
அன்பழகன், மதிவாணன், கே.என்.சேகரன்

இதுக்கு நடுவுல நேருவோட ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரனும் மேயர் பதவியை எதிர்பார்த்து தீவிரமா காய்நகர்த்தினாரு. அவரையும் அழைச்சுப் பேசின நேரு, ‘இந்த முறை என்னை மேயராக்கலைன்னா தற்கொலை செஞ்சுக்கறதைத் தவிர வேற வழியில்லை’னு கையில விஷ பாட்டிலோட அன்பழகன் அலையறான். எனக்காக இந்த ஒரு தடவை விட்டுக்கொடுத்துடு’னு பேசியிருக்கார். நேருவோட அன்புக்குக் கட்டுப்பட்டு போட்டியில இருந்து கே.என்.சேகரன் விலகினதோட, 40-வது வார்டுல தனக்கு பதிலா தன் மகன் சிவாவைப் போட்டியிட வெச்சுருக்கார். அதேசமயம், துணை மேயர் பதவி மகேஷின் ஆதரவாளருக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கு’’ என்றார்கள்.

அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர்களோ, ‘‘தலைமையோட வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அண்ணன் இந்தத் தேர்தல்ல அமைதியா இருக்காரு. நேருவோட கை ஓங்கிட்டதால, திருச்சியில் மகேஷின் செல்வாக்கு சரிஞ்சதுன்னு சொல்ல முடியாது’’ என்றார்கள்.

இரு தரப்பும் சமாதானமாக இருப்பதாக வெளியே தெரிந்தாலும், உள்ளுக்குள் புகைந்துகொண்டுதான் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதே கள நிலவரம்!