Published:Updated:

`தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி’... ஸ்டாலினின் எதிர்வினைகள் அவசியமா, அநாவசியமா?

தமிழகத்தில் பா.ஜ.க-வினர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ, அதற்கான வலையை வீசுகிறார்கள். தி.மு.க-வும் அதில் சரியாகப் போய்ச் சிக்கிக்கொள்கிறது. இந்துக்களுக்கு ஆதரவானவர்கள்- எதிரானவர்கள் என்கிற விவாதமா தற்போது முக்கியம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர், திட்டமிட்டு தி.மு.க ஏதோ இந்துக்களுக்கு எதிரிபோலச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய பல மாவட்டச் செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்த பக்தியை நாங்கள் குறை சொல்லத் தயாராக இல்லை. அது அவர்களுடைய விருப்பம். `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது பேரறிஞர் அண்ணா அவர்களது உறுதிமொழியாக இருந்தது. அதைத்தான் இன்று நாமும் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்.’’


திருவள்ளூர் மாவட்டம், கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் இவை. தற்போது மட்டுமல்ல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும், ஸ்டாலின் இதே கருத்தைப் பேசியிருக்கிறார். இதுமட்டுமல்ல, ``தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்தான் ' ' என கடந்த காலத்தில் அவர் பேசியது மிகப்பெரிய விவாதமானது. ஸ்டாலின் மட்டுமல்ல, ராமநாதபுரம் சந்தைத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி ``பெரும்பான்மை இந்துக்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாது, வெளியிலேயே நிறுத்தப்படுகிறார்கள் என்று அவர்களுக்காகக் குரல் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். இந்துக்களின் பாதுகாவலர் பெரியார்தான்'' எனப் பேசினார்.

கனிமொழி
கனிமொழி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்ட தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர்கள் ``கடந்த நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்த வாக்குகளை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். தி.மு.க என்பது அதிகமான இந்துக்களால் ஆதரிக்கப்படும் கட்சி'' என்றும் பேசினர். மேற்கண்ட, அனைத்தும், `தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி’ என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலாகத்தான் பேசப்பட்டன. ஆனாலும் தமிழர்கள், திராவிடர்கள் எனப் பேசிவந்த தி.மு.க-வில் திடீரென `இந்துக்கள்’ என்கிற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்படுவது தமிழக அரசியல் களத்தில் விநோதமாகப் பார்க்கப்பட்டது.

இந்த விஷயத்தில், ``தேர்தல் அரசியலில் பங்குபெறும் கட்சி பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியைத் தக்கவைக்க இப்படிப் பேசித்தான் ஆக வேண்டும்’’ என தி.மு.க-வுக்கு ஆதரவாகச் சிலர் பேசினாலும், ``தமிழகத்தில் பா.ஜ.க-வினர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ, அதற்கான வலையை வீசுகிறார்கள். தி.மு.க-வும் அதில் சரியாகப் போய்ச் சிக்கிக்கொள்கிறது. இந்துக்களுக்கு ஆதரவானவர்கள்- எதிரானவர்கள் என்கிற விவாதமா தற்போது முக்கியம்... பா.ஜ.க-வினரே அப்படியொரு விஷயத்தைக் கட்டமைத்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல், மற்ற விஷயங்களைத்தானே முன்னிறுத்த வேண்டும்...'' என்கிற கடுமையான விமர்சனங்களும் தி.மு.க-வின்மீது முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில், `தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல’ என நிரூபிக்க ஸ்டாலின் இவ்வளவு மெனக்கெடுவது தேவைதானா என திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர், சுப.வீரபாண்டியனிடம் பேசினோம்.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

பேராசிரியர் சுப.வீராபாண்டியன்: 

``தி.மு.க இந்து மதத்துக்கு மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் எதிரான கட்சியல்ல. ஆனால், `இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க' எனத் தொடர்ச்சியாகச் சிலர் சொல்லிவரும்போது, அதற்கு பதிலளிக்கும் வகையில் அப்படியல்ல என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. இதே 'இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க' என்று யாராவது சொன்னால், `இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல தி.மு.க’ என்பதே அதற்கான பதிலாக இருக்கும். அதனால், தி.மு.க தலைவர் சொல்வதை ஒரு எதிர்வினையாக மட்டுமே பார்க்கிறேன். அதேவேளையில், தி.மு.க எப்படி எந்த மதத்துக்கும் எதிராக கட்சியல்லவோ அதேபோல எந்த மதத்துக்கும் ஆதரவான கட்சியும் அல்ல. தி.மு.க-வில் இந்து மத நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள்; எந்த மதத்தையும் ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையாக மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது ஒரு சமூகத்தின் எதிரொலி. ஒரு சமூகத்தில் என்ன நிலை இருக்கிறதோ அதேபோல்தான் ஒரு கட்சியிலும் இருக்கும்.

''இந்து மதம் என்பது பா.ஜ.க-வுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கலைஞர் ஆட்சியிலேயே எத்தனையோ வசதிகள், சலுகைகள், நலத்திட்டங்கள் அறநிலையத்துறைக்கும் இந்து மதத்தினருக்கும் செய்யப்பட்டிருக்கின்றன. பூசாரிகளுக்கு ஓய்வூதியம், `அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ எனக் கூறியது, கோயில்களில் அதிக அளவில் குடமுழுக்கு நடத்தியது, கோயில்களில் இலவச திருமணங்கள் ஆகியவை கழக ஆட்சியில்தான் நடந்தன.''
- மு.க.ஸ்டாலின் (பாளையங்கோட்டை பிரசாரக் கூட்டத்தில்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாக நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, திராவிடர் கழகம்போலவோ, மற்ற பெரியாரிய அமைப்புகள் போலவே அல்ல தி.மு.க. அது தேர்தலில் பங்குபெறும் கட்சி. எல்லோரையும் தழுவிச் செல்ல வேண்டிய தேவை அதற்கு இருக்கிறது. அப்படியிருக்கும்போது, குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான கட்சி தி.மு.க எனச் சிலர் பேசும்போது, அதற்கு பதிலளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மக்களுக்கு எளிமையாகப் புரியவைக்க, நேரிடையாக இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல தி.மு.க எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும்'' என்கிறார் அவர்.

ஆனால், பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் முனைவர் சுப.உதயகுமாரன், ``தி.மு.க., பா.ஜ.க-வை எதிர்க்கும் அணுகுமுறை சரியல்ல'' என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

சுப.உதயகுமாரன்
சுப.உதயகுமாரன்

சுப.உதயகுமாரன்: 

``தி.மு.க-வினர் பேசும் பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவை எந்த அளவுக்கு வலுவற்றவை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இவர்கள் கட்சி நிர்வாகிகளையே இன்னும் அரசியல்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெளிவாகிறது. பெரியார் கொள்கைகளுக்கு நேரெதிராக நடந்துகொண்டிருக்கிறார்கள். அண்ணாவின் `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் கொள்கையை உண்மையிலேயே கடைப்பிடிப்பவர்களாக இருந்தால், `நாங்கள் மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள்' என்றுதான் பேச வேண்டும், அதன்படி நடந்துகொள்ள வேண்டும். ஆனால், முன்னணித் தலைவர்களே நெற்றியில் திருநீறு, குங்குமம் என மத அடையாளச் சின்னங்களை அணிய ஆரம்பித்துவிட்டார்கள். பா.ஜ.க விரிக்கும் வலையில் வலியச் சென்று மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-வினர் அவர்களின் இந்துத்துவக் கொள்கைக்கு உண்மையாக இருக்கிறார்கள், தி.மு.க-வினர்தான், அவர்களின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு உண்மையாக, உறுதியாக இல்லை.

எதிராகக் களமிறங்க சீமான், குஷ்பு, ஜெயக்குமார் ரெடி... ஈஸி டார்கெட் ஆகிறாரா ஸ்டாலின்?#TNElection2021

இந்துக்களின் வாக்குகள் பறிபோய்விடும் என பயந்து இப்படி நடந்துகொள்வதாகச் சொல்கிறார்கள். இதே, கேரளாவில் பினராய் விஜயன், `எங்கள் கட்சியில் இருப்பவர்கள் இந்துக்கள்’ எனச் சொல்லவில்லையே... இத்தனைக்கும் பல கம்யூனிஸ்ட்கள் பா.ஜ.க-வில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே எந்த நெருக்கடியும் இல்லாமல், `எங்கள் கட்சியில் பெரும்பான்மையாக இந்துக்கள்தான் இருக்கிறார்கள்' என ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே, கூட்டணிவைத்து பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கொண்டுவந்தார்கள். தற்போது, அவர்களை பலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். `இந்து’ என்கிற பெயரைப் பயன்படுத்த முடியாமல் அரசியல் செய்ய முடியாது என்கிற நிலையை பா.ஜ.க-வினர் உருவாக்கிவிட்டனர். அவர்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டனர். ஆனால், அவர்களின் வழியில் சென்று தவறான வாதங்களை, அணுகுமுறைகளைக் கையாண்டு தமிழ் சமூகத்துக்கு துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறது தி.மு.க'' என்கிற கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார் அவர்.

ஆனால், பேராசியர் அ.மார்க்ஸ் ``இந்த அளவுக்குக் கடுமையாக இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை’’ என்கிற கருத்தை முன்வைக்கிறார்.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

பேராசியர் அ.மார்க்ஸ்:

``தி.மு.க இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்துகொள்கிறது, இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று முன்வைக்கப்படும் பிரசாரங்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தி.முக-வுக்கு ஏற்படுகிறது. அதனால்தான் இது போன்ற கருத்துகளைப் பேச வேண்டிய தேவை எழுகிறது. அந்த நிர்பந்தத்தை பா.ஜ.க-வினர் உண்டாக்கிவிட்டார்கள். ஆனால், இந்த விஷயத்தில், தி.மு.க கொஞ்சம் பயந்தபடிதான் செயல்படுகிறது என்பது உண்மை. `தி.மு.க அனைவருக்குமான கட்சி' என தைரியமாக, வெளிப்படையாகப் பேசலாம். ஆனால், கொஞ்சம், மடக்கி, மடக்கி தங்களின் கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். அதேவேளையில் இப்படிப் பேசுவதால் அவர்களின் கொள்கைகளிலிருந்து விலகி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. காரணம், `இஸ்லாமியர்களை எதிர்க்கிறோம், இஸ்லாமியக் கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்’ என்று தி.மு.க சொல்லவில்லை. அவர்கள் கேட்கிற அளவில் இல்லையென்றாலும், அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். அதேவேளையில், இந்த விஷயத்தை தயக்கத்தோடு அணுகாமல் தைரியமாக அணுக வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு