Published:Updated:

`திமுக, சசிகலாவுக்கு உதவி செய்கிறது!' - ஜெயக்குமார் குற்றச்சாட்டு சரிதானா?

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், தி.மு.க சசிகலாவுக்கு உதவுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

``சசிகலா அதிமுக கொடியை ஏற்றியது, பொதுச்செயலாளர் என கல்வெட்டு வைத்தது ஆகியவை சட்டவிரோதமான செயல்கள், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார். அதோடு, 'சசிகலாவின் செயல்பாடுகளுக்கு தி.மு.க உதவி செய்கிறது' என அவர் கொளுத்திப்போட்ட திரிதான் தமிழக அரசியல் களத்தில் இப்போது பட்டாசாகப் படபடக்கிறது.

நான்காண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 16-ம் தேதியன்று சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா. தொடர்ந்து, அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை வீட்டில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அ.தி.மு.க கொடியையும் ஏற்றினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. அதில், `கொடியேற்றியவர்: திருமதி வி.கே.சசிகலா, கழகப் பொதுச்செயலாளர்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. அது, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ''கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா?'' எனக் கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார். அதைத் தொடர்ந்து நேற்று சசிகலா மீது மாம்பலம் காவல் நிலைய ஆணையரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்திருக்கிறார். அதில்,

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

''அதிமுக-வின் அமைப்புச் செயலாளராக நான் (டி.ஜெயக்குமார்) தங்களின் கவனத்துக்கு நடராஜன் மனைவி வி.கே.சசிகலாவின் நடவடிக்கைகள் குறித்து புகார் கொண்டு வருகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நடந்த பல்வேறு குழப்பங்களால் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைப் போர் ஏற்பட்டது. அதில் இரட்டை இலைச் சின்னம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வுக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. அதன் பின்னரும்கூட இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.சசிகலா டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அடுத்தடுத்து மனு கொடுத்துப் பார்த்தார். ஆனால், அவை எடுபடவில்லை. உச்ச நீதிமன்றம் சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. எல்லாப் பக்கமும் தோல்வியைத் தழுவியதால் இப்போது குழப்பத்தை விளைவித்து தன்னைத் தானே அதிமுக பொதுச்செயலாளர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டுவருகிறார்.

அதிமுக-வுக்கும் சசிகலாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனாலும் அதிமுக-வின் பொதுச்செயலாளர் எனக் கூறி குழப்பம் விளைவிக்கிறார். அவர்மீது ஐபிசி 419 கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடந்த அக்டோபர் 17-ம் தேதி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். அதைத்த் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியையும் ஏற்றினார். அங்கு நினைவுக் கல்வெட்டை திறந்துவைத்தார். அதில், `அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா’ என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் சட்டவிரோதமானது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், தி.மு.க சசிகலாவுக்கு உதவுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆர்.எம்.பாபு முருகவேல்
ஆர்.எம்.பாபு முருகவேல்

இந்த நிலையில் திமு.க-வின் மீதான குற்றச்சாட்டு குறித்து, அதிமுக-வின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், பாபு முருகவேல் பேசும்போது,

''சசிகலா தொடர்ந்து சட்ட விதிமீறல்களுடனும், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் விதமாகவும் செயல்பட்டுவருகிறார். எந்தவித அனுமதியும் இல்லாமல், எம்.ஜி.ஆர்., அம்மா சமாதிகளுக்கும், ராமாபுரம் தோட்டத்துக்கும் கூட்டமாகச் செல்கிறார். ஆனால், அவரின்மீது இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்ததாக, உச்ச நீதிமன்றமே சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டது. ஆனால், அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்துகிறார், கொடியை ஏற்றுகிறார், பொதுச்செயலாளர் என கல்வெட்டு வைக்கிறார். அதை எதிர்த்து நாங்கள் புகாரளித்தபோது சி.எஸ்.ஆர் கொடுப்பதற்குக்கூட இந்த அரசின் காவல்துறை மறுக்கிறது. சசிகலாவின் இந்தச் செயல்பாடுகள் ஒரு குழுவுக்குள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருக்கின்றன. அதன் மூலம் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அதனால்தான் சசிகலா, திமுக-வுடன் அண்டர்ஸ்டாண்டிங்கில் இருக்கிறார் என எங்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற வகையில் அதிமுக-வுக்குள் பிரிவினையை உருவாக்கி லாபமடையப் பார்க்கிறது திமுக'' என்கிறார் கடுமையாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக-வின் இந்தப் புகார் குறித்து திமுக-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``சசிகலா அம்மையார் பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு வந்தபோது எப்படி வந்தார்... அப்போது ஆட்சியில் இருந்தது யார்... கூட்டம் கூட்டியதற்காக எடப்பாடி பழனிசாமி ஏன் அந்தம்மாவின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... அப்படியென்றால் எடப்பாடி பழனிசாமி அந்தம்மாவுக்கு உதவினார் என்று சொல்ல முடியுமா?

அதிமுக-வின் ஐம்பதாவது ஆண்டையொட்டி சசிகலா விழாக்களில் கலந்துகொள்கிறார். அவர் போகும்போது கொரோனா விதிமுறைகளை மீறிவிட்டார் என்றால் அவர்மீது அதற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அவரைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை யாருக்கும் இல்லை. ஏன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சமாதிக்குச் செல்லும்போதும் அப்படித்தானே சென்றார்கள்... அவர்களின்மீதும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?

கான்ஸ்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டைன் ரவீந்திரன்

காரணம், ஓர் இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழா என்கிற அடிப்படையில், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதால்தான். தவிர, வேறெந்தக் காரணமும் இல்லை. எங்களுக்கு எந்தப் பாரபட்சமும் இல்லை. கொடி ஏற்றுவது, கல்வெட்டு வைப்பது போன்றவை சிவில் பிரச்னை. அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். காவல்துறை நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 'பொதுக்குழு கூட்டியது செல்லாது' என அந்தம்மா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இன்னும் தீர்ப்புச் சொல்லவில்லை. நாளை தீர்ப்பு அந்தம்மாவுக்குச் சாதகமாக வந்தால், அவர்தானே பொதுச்செயலாளர்?

சசிகலா: ''நான்கு வருட பாரத்தை இறக்கிவைத்தேன்!'' - அவர் சொல்ல வருவது என்ன?

இதில் நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்... அதிமுக-வில் இது போன்ற சண்டைகள் வாடிக்கையானவை. எங்களுக்கு நாட்டு மக்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளைக் கவனிக்கத்தான் நேரமிருக்கிறது. இவர்களைப் பற்றிக் கவலைப்பட எங்களுக்கு நேரமில்லை. உண்மையைச் சொல்லப்போனால், இவர்களை வைத்து விளையாடிக்கொண்டிருப்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க-தான். அவர்களை நோக்கித்தான் இவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்'' என்கிறார் அவர்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பா.ஜ.க-வின் மீதான விமர்சனங்கள் குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேசும்போது,

``பா.ஜ.கவைப் பொறுத்தவரை எப்போதும் அடுத்த அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்காது. அப்படிச் செய்வது எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. ஆனால், திமுக-வில் காங்கிரஸ் எப்படிக் கலகம் ஏற்படுத்தியது என்று இன்றைய முரசொலி தலையங்கத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், பா.ஜ.க-வைக் குறை சொல்வதை விடுத்து காங்கிரஸைக் கூட்டணியில் வைத்திருப்பது குறித்து திமுக பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு