Published:Updated:

`உள்ளாட்சிப் பதவிகளை ஏலத்தில் எடுப்பதே ஆளும்கட்சிதான்!’ - துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

`உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு தி.மு.க பயப்படவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை ஆளுங்கட்சி ஏலம் எடுப்பதைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை’ என்கிறார், துரைமுருகன்.

வேலூரில் உள்ள தி.மு.க மத்திய மாவட்ட அலுவலகத்தில், அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பொருளாளர் துரைமுருகன், அவரின் மகனும் எம்.பி-யுமான கதிர்ஆனந்த், மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அவசர செயற்குழுக் கூட்டம்
அவசர செயற்குழுக் கூட்டம்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``உள்ளாட்சி மன்றத் தேர்தலைக் கண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பயப்படவில்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கணிசமான வெற்றியைப் பெறும். அது, உறுதி. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் நாங்கள் கேட்பது ஒன்றுதான்.

மற்ற நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் கிறிஸ்தவர்கள், சமணர்கள், ஜெயினர்கள் போன்றோரை ஏற்றுக்கொள்கிறார்கள். அதே போன்று, இஸ்லாமியர்களையும் அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்களையும் குடியுரிமை பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி, மாற்றியமைத்தால் நாங்கள் நிச்சயமாக வரவேற்போம்.

கதிர்ஆனந்த்
கதிர்ஆனந்த்

100 நாள் வேலைத் திட்டத்தில் ஏழைகளுக்குக் கூலி கொடுக்க முடியாத நிலையில் மத்திய அரசு இருப்பது வேதனையளிக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதாரமும் நிதிநிலையும் எந்த அளவு இருக்கிறது என்பதற்கு இதைவிடப் பெரிய உதாரணம் தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிப் பங்கீடு சுமுகமாக முடிந்திருக்கிறது.

தோழமை கட்சிகளுக்குள் எந்த இடத்திலும் முரண்பாடு எழவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை ஏலத்துக்கு எடுத்தவர்களெல்லாமே அ.தி.மு.க-வினர்தான். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது ஆளுங்கட்சி. பதவிகளை ஏலம் எடுத்தவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அந்தப் பகுதியில் தி.மு.க போட்டியிடும்.

துரைமுருகன்
துரைமுருகன்

பேருக்குத்தான் குடிமராமத்துப் பணி நடக்கிறது. அரசாங்கமும் குடிமக்களும் இணைந்துசெய்வதற்குப் பெயர்தான் குடிமராமத்து. ஆனால், இதை லாபம் தரும் தொழிலாக ஆளும்கட்சி செய்துவருகிறது. ஏரிக்காக ஒதுக்கும் நிதியை ஆளுங்கட்சியினரே எடுத்துக்கொள்கிறார்கள். ஏரியை அவர்கள் தூர்வாருவதே கிடையாது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு